அல்ஹாஜ்.நாபீர் உதுமான்கண்டு-
450 வருடங்களுக்கு அதிகமான பழமையும் தொன்மமும் பாரம்பரியமும் மிக்க சாய்ந்தமருதூரிற்கான தனியான பிரதேச சபை கோரிக்கைகளும்,முன்னெடுப்புகளும் பெரு வாரியாக வலுப்பெற்று வரும் நிலையில், இக் கோரிக்கையை மழுங்கடித்து சாய்ந்தமருது மக்களை ஏமாளிகளாக சித்தரிக்கும் அரசியல் பகடைக் காய் நாடகம் மறுபடியும் அரங்கேறும் சூழல் உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது.
முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதிகார எல்லைக்குள் உள்ளக்கடப்பட்டிருக்கும் சாய்ந்தமருது, அக்கட்சியும் தலைவரும் கடந்த காலங்களில் வழங்கிய அரசியல் வாக்குறுதிகளின் பிரகாரம் கட்சியை சரிவிலிருந்து மீட்டது.
சாய்ந்தமருதிற்கான தனியான உள்ளூராட்சி மனறத்தை முன்னிறுத்தி கடந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் திகாமடுல்லையில் களை கட்டியதை இன்னும் மறக்கவில்லை. கெபினட் அமைச்சுடன் கூடிய அரசியல் அதிகாரமிக்க இரண்டு முஸ்லிம் கட்சித் தலைவர்களான கௌரவ. ரவூப் ஹக்கீமும், கௌரவ ரிஷாத் பதியூதீனும் சாய்ந்தமருது பிரதேச சபை கோரிக்கையை நாட்டின் அரசியல் உயர் பீடத்திடம் சமர்ப்பிக்காமல் ஒரு வித நழுவல் போக்கை கையாள்வது மக்களை கவலை கொள்ளச் செய்த்துள்ளது.
இது அவர்களின் அரசியல் நகர்வுகளுக்கும் பாரிய முட்டுக்கட்டையாக இருக்குமென்பதில் எவ்வித ஐய்யமுமில்லை. எனவே, இவ்விடயத்தில் இருவரும் விரைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாயிருக்கிறது.
நல்லாட்சி நாட்டில் மலர்ந்த மறு கணம் சாய்ந்தமருதூருக்கு தனியான பிரதேச சபையும் வழங்குவோம் என எமது தலைவர்கள் மேடைகளில் சூளுரைத்த காட்சிகளும் விழிகளை விட்டு இன்னும் நீங்கவில்லை.
இன்று முஸ்லிம் சமூகத்தில் எழுச்சியும் சக்தியும் பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸும், அது போல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் சாய்ந்தமருது விவகாரம் பற்றி அதிகளவில் அரசியல் மேடைகளில் குரலெழுப்பியதை நான் அவதானித்து வந்திருக்கிறேன். அத்தோடு சமூக உணர்வோடு பயணிக்கும் நான் இவ்விடயத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு எத்தி வைப்பதை என்னுடைய தார்மீக கடமையாய் கருதுகிறேன்.
இதில் தேசிய தலைவர் மற்றும் சத்தியத் தலைவர் இருவரும் பாரபட்சமில்லாமல் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் அள்ளி வீசினர். ஆனால், இன்று நிலைமை பரிதாபம். யாருமே இது பற்றி வாய் திறப்பதாயில்லை. நாங்கள் சாய்ந்தமருதூருக்கு ஒரு பிரதேச செயலகம் பெற்றுக் கொள்ள எடுத்துக் கொண்ட பிரயத்தனங்களை விட பல மடங்கு இவ்விடயத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது.
அண்மையில், பாலமுனையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் 19 ஆவது மாநாட்டில் கூட சாய்ந்தமருதூருக்கான தனியான உள்ளூராட்சி அலகு பற்றி பேசப்படவில்லையென்பது பெரும் துயரமாகும். இத்தனைக்கும் இம் மாநாட்டில் நாட்டின் ஜனாதிபதி,பிரதமர்,எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் வெள்ளத்தைப் பற்றி புகழ் பாடும் நமது அரசியல் நோக்கர்கள் சாய்ந்தமருது மக்களின் நீண்ட கனவு பற்றியும் இங்கு பிரஸ்தாபித்திருக்க வேண்டும். காலம் கனிந்திருக்கும் இவ்வேளையில் சாய்ந்தமருது மக்களின் அரசியல் அபிலாசைகளும் நிறைவேற வேண்டும்.
எனவே, இனியும் இவ்விடயத்தில் எமது தலைவர்கள் மக்களின் எதிர்பார்ப்பை சிதறடிக்காமல், நியாயமான கோரிக்கையை ஏற்று வெகு விரைவில் சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபையை பெற்றுத் தர உழைக்கும் பட்சத்தில் நானும், என்னைச் சார்ந்தோர்களும் எனது ஆரோக்கியமான பங்களிப்பை வழங்க காத்திருக்கிறோம்.
ஊடகப்பிரிவு
அல்ஹாஜ்.நாபீர் உதுமான்கண்டு
நிர்மாண முகாமைத்துவ முதுமாணி ஸ்தாபகர்-
நாபீர் பவுண்டேசன் சமூக சிந்தனையாளர்
முகாமைத்துவ பணிப்பாளர் - ECM (Pvt) Ltd.
