பாடசாலையின் குறைகளை கண்டறியும் சிப்லி பாரூக்...!









கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு திடீர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயதிற்குற்பட்ட மாங்கேணி மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க அன்மையில் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு பாடசாலையின் நிலைமைகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கண்டறிந்தார், 

இதன் போது கருத்து தெரிவித்த அவர்;

இப்பாடசாலையானது வாகரை - மட்டக்களப்பு பிரதான வீதியிலிருந்து கிட்டத்தட்ட 8, 9 கிலோமீட்டர் தூரத்தில் ஓர் பின்தங்கிய கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது. 

மிகவும் கரடுமுரடான பழுதடைந்த சீரற்ற கிரவல் பாதை வழியாக பல சிரமத்திற்கு மத்தியில் பிரயாணம் மேற்கொண்டு இப்பாடசாலைக்கு வந்தடைந்தோம். கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு மூன்றரை வருடங்களுக்கு மேலானகிவிட்ட நிலையில் இந்த பாடசாலைகளுக்கு வராமல் போனதையிட்டு வெட்கமடைகின்றேன் அத்துடன் மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் இப்பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக அக்கறை செலுத்தவில்லை என்பதனையிட்டு மனம் வருந்துவதாகவும் தெரிவித்தார்.


மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இப்பாடசாலையானது கல்வி ஆரம்ப பிரிவு தொடக்கம் தரம் 11 (க.பொ.சா. தரம்) வரை 170 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு கல்வி கற்கும் மாணவர்களை கண்னுற்ற பொழுது அவர்கள் சிறந்த ஆற்றல் உள்ளவர்களாக இருக்கின்றார்கள் போதிய வசதிகள், வளங்கள் மற்றும் ஆளணி இன்மையால் பாரிய சிரமத்திற்கு மத்தியில் தமது கல்வியினை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இப்பாடசாலையில் கடந்த வருடம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 130க்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர் இருக்கின்றார், என்னுடைய கருத்தின்படி இந்த பெருபெறானது நகர்புறத்தில் 180 புள்ளிகள் பெற்ற மாணவருக்கு சமனானதாகும்.


பாடசாலையின் நிலைமையினை அவதானித்த பொழுது இங்கு எந்த அரசியல்வாதிகளோ, கல்குடா கல்வி வலய உயர் அதிகாரிகளோ அடிக்கடி சென்று பாடசாலையின் அபிவிருத்திற்கு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது புலனாகின்றது. பாடசாலை அதிபர் ஆரம்ப பிரிவுக்கு 4, 5 வருடங்களாக ஆசிரியர் எவரும் நியமிக்கப்படவில்லை என்றும், மொத்தமாக 09 ஆசிரியர்களை கொண்டும் போதிய பௌதீக வளங்கள் இன்றியும் பல சிரமத்திற்கு மத்தியில் கல்விச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக மிகவும் கவலைக்குரிய விடயத்தினை தெரிவித்தார். 


மேலும் ஆரம்பக்கல்வி ஆசிரியர் இன்மையினால் மாணவர்களின் எழுத்தறிவு வீதமும் கூட மிகவும் மந்தமான நிலையில் காணப்படுகின்றது. இதனை தொடர்ந்து மாகாண கல்வி பணிப்பாளர் திரு. எம்.டி.ஏ. நிஸாம் அவர்களை உடனடியாக தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு வினவியபோது அவர் கல்குடா கல்வி வலயத்திற்குள் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் மேலதிகமாக இருக்கின்றார்கள் என்று கூறினார், அப்படியானால் ஏன் இந்த பாடசாலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியர் இல்லை என்று நான் கேட்டேன், அதற்கு அவர் கல்குடா கல்வி வலய பணிப்பாளரை தொடர்பு கொண்டு இப்பாடசாலையின் ஆரம்பக் கல்வி ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார்.


கிழக்கு மாகாணத்தினுடைய ஆள்புலத்திற்குற்பட்ட இந்த பாடசாலையில் வறுமை கோட்டின் கீழ் கஷ்டப்பட்டு வாழ்கின்ற மக்களின் திறமையான பிள்ளைகள் கல்விகற்கும் இப்பாடசாலைக்கு இவ்வாறானதோர் அவல நிலைமை நல்லாட்சியில் ஏற்பட்டிருக்கின்றது என்பது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. பொதுவாக நகர்புற பாடசாலைகளை கவனிக்கும் கல்வி அமைச்சு, கல்வி திணைக்களம் போன்றவைகள் இவ்வாரன பின் தங்கிய கிராமங்களில் இருக்கின்ற பாடசாலைகளை மேம்படுத்த போதியளவு முன்னெடுப்புக்களை எடுப்பதில்லை என்பது புலனாகின்றது என்றார். 


மேலும் செவ்வாய்க்கிழமை (23.02.2016) நடைபெற்ற மாகாணசபை அமர்வின்போது இப்பாடசாலையின் அவல நிலையினை எடுத்துரைத்தேன் மேலும் இவ்வாறான பல பாடசாலைகள் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி கிழக்கு மாகாணம் முழுவதும் காணப்படுகின்றது அதனை விருத்தி செய்வதற்கும், பலப்படுத்துவற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாகாண கல்வி அமைச்சர் கௌரவ சி. தண்டாயுதபாணி அவர்களிடம் கோரிக்கைவிடுத்தேன், அதனை தொடர்ந்து மிக விரைவில் அதற்கான தீர்வினை பெற்று தருவதாக கல்வி அமைச்சர் கூறினார்.


இப்பாடசாலையின் அதிபர் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தார் அதன் பிரகாரம் உடனடி தேவைகளில் ஒன்றான இம்முறை புலமைப்பரிசீல் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஒரு வருடத்திற்குப் போதுமான பயிற்சி வினா விடை தாள்கள் அடங்கிய தொகுப்பினையும் அத்துடன் கணணி பிரிண்டர் இயந்திரமொன்றினையும் எனது சொந்த நிதியிலிருந்து வழங்குவதாகவும் வாக்குறிதியளித்தார். மேலும் இப்பாடசாலையின் வளத்தினை அதிகரிக்கும் நோக்கோடு போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றினையும் இவ்வருட மாகாண சபையின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பெற்றுகொடுக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.


இங்கு கல்வி கற்கும் மாணவர்களின் நிலைமைகள் தொடர்பாக வினவியபோது அனேகமான மாணவர்கள் தந்தைகள் இன்றி ஒரே குடும்பத்தில் 4,5 அங்கத்தவர்கள் வாழ்கின்ற நிலைமைகளையும், பல தாய்மார்கள் குழந்தைகளை பிரிந்து தொழில் நிமித்தம் வளைகுடா போன்ற நாடுகளுக்கு சென்றுள்ள நிலைமைகளையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. இவ்வாறான பாடசாலைகளின் கல்வி விடயத்தில் அணைத்து தரப்பினரும் கூடிய கவனம் செலுத்துவதனூடாக எதிர்காலத்தில் இம்மாணவர்களின் வாழ்வினை வளப்படுத்தி சமூகத்தில் மதிக்கப்படகூடிய சிறந்த ஓர் கல்விமான்களாக, வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, உயர் அதிகாரிகளாக உயர்வதற்கு வழிசமைத்துக் கொடுப்பதுடன் அவர்கள் வறுமையின் நிலைமையை உணர்ந்து வறுமைகோட்டின் கீழ் வாழும் மக்களது துயரினை துடைப்பதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் இருப்பார்கள் என நம்புவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.


செய்தியாளர்
எம்.ரீ. ஹைதர் அலி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -