அபு அலா -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு தொடர்பில் பாலமுனை பொது மைதானத்தின் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேலைத்திட்டங்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோர் இன்று (27) குறித்த இடத்துக்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த தேசிய மாநாட்டு மைதானப் பணிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளைப் பற்றி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் கவனத்திற்கு இன்று கொண்டுவந்தார்.
இதனையடுத்து சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் குறித்த அதிகாரிகளை அலைபேசி ஊடாக தொடர்புகொண்டு அதற்கான உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டை சிறப்பிக்க அட்டாளைச்சேனை பிரதேச பாலமுனை பொது மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேலைத்திட்டங்களில் ஏதாவது சிக்கல் நிலைகள் இருந்தால் அதனை உடனடியாக தனக்கு தெரிவிக்கும்படி சுகாதார அமைச்சர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலை வேண்டிக்கொண்டார்.



