முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டை பாலமுனையில் நடாத்தியே தீருவோம்..!

எஸ்.எம்.அறூஸ்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டை பாலமுனையில் நடாத்த முடியாது - மு.கா.தலைவருக்கு பாலமுனை பொது மக்கள் கடிதம் என்ற தலைப்பில் ஒரு அனாமோதய செய்தியினை ஊடகங்களில் வெளியிட்டு பாலமுனை மண்ணுக்கு சில விசமிகள் துரோகமிளைத்துள்ளதாக பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு செயலாளர் ஐ.எல்.எம். பாயிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் மத்திய குழுவின் செயலாளர் ஐ.எல்.எம்.பாயிஸ் இன்று திங்கட் கிழமை(18) தெரிவித்துள்ளதாவது,

பல்லாயிரம் மக்கள் திரண்டு வந்து கலந்து கொள்ளும் இம்மாநாட்டை முகாமை செய்யக் கூடிய விதத்திலான அடிப்படை வசதிகளோ, காலநிலைப் பொருத்தப்பாடுகளோ, சூழல் அமைப்புக்களோ மற்றும் ஏனைய வசதி வாய்ப்புக்களோ கிடையாது. அதனால், இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆதரவாளர்கள் அவதிப்படவேண்டிய நிலைமை ஏற்ப்படும்.

எனவே, சகல வசதிகளும் பொருத்தப்பாடுகளும் கொண்ட நிந்தவூரில் நடாத்துவதே சாலப் பொருத்தமானது என்ற அடிப்படையில் அச்செய்தி அமைந்துள்ளது.

இம்மாநாட்டை எதிர்வரும் மார்ச் மாதம் நடாத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் வேளையில், அம்மாநாட்டை குழப்பும் நோக்கில் சில விசமிகளால் பாலமுனை பொது மக்கள் என்ற பெயரில் இச்செய்தியை பிரசுரம் செய்தவர்கள் உண்மையில் பாலமுனையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பாலமுனையில் பற்றுள்ளவர்களாக ஒரு போதும் இருக்க முடியாது.

ஏனெனில், எந்தவொரு நபரும் தனது ஊரில் ஒரு பிரமாண்டமான மாநாடு நடைபெறுவதனை விரும்பாமல் இருக்க முடியாது. அவ்வாறு விரும்பவில்லை என்றால், அவர் ஒன்றில் அவ்வூரைச் சார்ந்தவராக இருக்க முடியாது அல்லது மனிதனுக்குரிய சாதாரன தன்மைகளையும் மனப்பாங்குகளையும் கொண்டவராக இருக்கமாட்டார்.

இது இவ்வாறிருக்க, இந்த செய்தியை பரப்பியவர்கள் கடந்த காலத்தில் இக்கிராமத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை விற்றுப் பிழைப்பு நடாத்திவர்களாகவும், அதனால் தானும் தனது குடும்பமும் ஆதாயம் பெற்றவர்களாகவும் அடையாளம் தேடியவர்களாகவும் இருந்ததுடன், தற்போது அவ்வாறான நிலைமை இல்லாததன் காரணமாக வங்குரோத்து அரசியல் செய்கின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களாகவும் உள்ளனர்.

மேலும், இவர்கள் தற்போதைய காலகட்டத்தில் இக்கிராமத்தில் மு.காவினது அரசியலை மிகவும் பக்குவமான முறையிலும் வெளிப்படைத் தன்மையான விதத்திலும் கொண்டு செல்கின்ற இளம் தலைமையான சட்டத்தரணி சகோ.எம்.ஏ.அன்சில் அவர்களது அரசியல் தலைமையின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவுமே இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

அதுமாத்திரமன்றி, இம்மாநாட்டின் மூலம் தங்களுக்கு எந்த இலாபமும் ஈட்ட முடியாது, அதனால் பேரும் புகழும் நமக்கு கிடைக்காது என்ற உள் நோக்கமும் அவர்களிடமுண்டு. அதனால்தான் அவர்கள் பாலமுனை மக்களினது விருப்பத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் முரணான செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்த மாநாடு, அவர்கள் எண்ணுவது போன்று சகோ.எம்.ஏ.அன்சில் அவர்களது தனிப்பட்ட நலனை மேம்படுத்தும் நோக்கிலும் அவரது விருப்பத்தை பூரணப்படுத்தும் நோக்கிலும் நடாத்துவதற்கு கட்சியின் தலைமையால் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்று நினைக்கும் அளவிற்கு கட்சியின் தலைமையும் அதன் உயர் பீடமும் சிறுபிள்ளைத்தனமான முடிவுகளை எடுக்கவில்லை.

மாறாக, மிக நீண்ட காலமாக இக்கிராமத்தில் கட்சியின் மாநாட்டினை நடாத்த வேண்டும் என்ற தற்போதைய தலைவரின் எண்ணமும், அதற்கான நியாயங்களான கட்சியின் அடிமட்ட போராளிகளை அதிகமாகக் கொண்டதும், இப்பிராந்தியத்தில் ஒரு மத்திய கிராமமாக இருக்கின்ற படியினாலும், அதற்கு சாதுவான இடப்பரப்பினைக் கொண்ட விசாலமான மைதான வசதியும் அதை அண்டிய மக்கள் குடியிருப்பும் ஏனைய வசதிகளும் இங்குள்ளன என்பதனைக் கருத்திற் கொண்டே அதற்கான அனுமதி கட்சியின் தலைமையால் வழங்கப்பட்டது என்பதனைக் கூறிக்கொள்ள முனைகின்றேன்.

அத்தோடு, “பாலமுனையில் பால் நிலவு” என்ற தோரணையில் ஒரு பிரமாண்டமான கட்சியின் நிகழ்வு தனது பங்கேற்ப்புடன் நடாத்தப்படல் வேண்டும் என்ற மறைந்த மாமனிதர் மர்ஹ_ம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களினது ஆசையை ஈடுசெய்யும் விதத்திலும் இம்மாநாடு பாலமுனையில் நடாத்தப்படவுள்ளது என்பதனை இந்த பாமரத்தனமான கருத்துக்களை பரப்புபவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒரு மாநாட்டை நடாத்தும் போது அதற்கு முன்னுள்ள ஏற்பாடுகள் எவை? நடைபெறும் போது எவைகள் கவனிக்கப்படல் வேண்டும்? அதற்கு பின்னருள்ள விடயங்கள் என்ன? என்பது பற்றிய மூன்று நிலைமைகளையும் கவனத்திற் கொண்டே நாம் இந்த மாநாட்டினை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இன்ஷா அல்லாஹ் அதில் வெற்றியும் பெறுவோம் என்பதனை இச்சந்தர்ப்பத்தில் உரியவர்களுக்கு உறுதிபடத் தெரிவிக்கின்றேன்.

எனவே, தயவுசெய்து இவ்வாறான சின்னத்தனமான சிந்தனைகளைக் கொண்டுள்ளவர்கள் தங்களது தனிப்பட்ட கோபதாபங்களுக்காகவும் சுயநல அரசியல் பிழைப்புகளுக்காகவும் பாலமுனை மக்களினது முழுமையான எதிர்பார்ப்பினையும் அவர்களது விருப்பத்தினையும் மழுங்கடிக்கின்ற விதத்தில் செயற்படுவதனைத் தவிர்த்து, தங்களிடத்தில் ஏதாவது குறைகள் இருந்தால் எம்மை நேரில் வந்து சந்தித்து உரையாடுமாறும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -