ஜெம்சாத் இக்பால்-
முன்னர் நான் பொறுப்பேற்ற அமைச்சுக்களில் சேவை புரிந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மூலம் திருப்திகரமான சேவை மனப்பாங்கொன்றை பெற்றுக்கொண்டேன்.
துறைமுக அமைச்சை பொறுப்பேற்ற போது அந்த அமைச்சில் 8 பில்லியனை இலாப பங்கீட்டில் வைத்துவிட்டு வெளியேறினேன். அதுபோல் எதிர்வரும் காலங்களிலும் இந்த அமைச்சிலிருந்து வெளியேற நேர்ந்தால் இதுபோல் இலாப பங்கீட்டொன்றை பெற்றுத்தரும் நிலையிலேயே வெளியேற ஆசைப்படுகின்றேன். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இன்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் 2016ஆம் ஆண்டுக்கான புதுவருடத்திற்கான ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இன்று எமது திரைசேரியானது, பண வரவை விட செலவிலும் கடனிலும் மூழ்கியுள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஆட்சியாளர்களால் ஏற்படுத்திய குளறுபடிகளை நிவர்த்தி செய்வதற்குரிய ஏற்பாடுகளை மலர்ந்துள்ள புதிய வருடத்தில் சிறப்பாக முன்னெடுக்கவுள்ளோம்.
எமது இம் முயற்சிகளுக்கு மூலாதாரமாக அமைவது கடந்த வருடம் ஆரம்பித்த 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த சற்று கால எல்லை தேவைப்பட்டாலும் கூட, 19 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம், முதன் முறையாக இந்நாட்டில் நிறைவேற்று அதிகாரத்தை அனுபவித்த ஒரு ஜனாதிபதி தன்னுடைய சுய விருப்பத்திற்கிணங்க தன்னுடைய அதிகாரங்களை குறைத்துகொண்டது மாத்திரமல்ல, பாராளுமன்றத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த நிறைவேற்று ஜனாதிபதி முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தது.
எதிர்வரும் புதிய வருடத்தில் நல்லாட்சியில் மக்களுக்கு வழங்கி நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வகையிலும், எஞ்சியிருக்கின்ற அரசியல் யாப்புக்களில் திருத்தங்களை அமுல்படுத்துவதற்கான, முழு பாராளுமன்றத்தையும் அரசியல் யாப்பு சபையாக மாற்றி அதனூடாக இந்நாட்டுக்கு ஒரு புதிய அரசியல் யாப்பொன்றை அறிமுகப்படுத்தி புதிய தேர்தல் முறையும், நிறைவேற்று ஜனாதிபதி முறையும் இல்லாமல் ஒழிக்கப்படுகின்ற புதிய யாப்பு திருத்தமும், இவ்வருடம் நடைமுறைப்படுத்த இருக்கின்றது. அதற்கு நாங்கள் எல்லோரும் கட்சிகளுக்கு மத்தியில் சமாந்தரமான பேச்சுவார்த்தைகளை நடத்திகொண்டிருக்கின்றோம்.
இந்நாடு பல வருட காலமாக அனுபவித்த பலவிதமான கஷ்டங்கள், துயரங்கள் அகன்று கடந்த ஒரு வருட காலத்திற்குள் புதியதொரு அரசியல் கலாசாரம் நிம்மதியோடு சமாதானமாக வாழ்கின்ற ஒரு சூழல், இனங்களுக்கிடையே ஒற்றுமை அத்தோடு இழந்த இடங்களை மீட்டிக்கொள்வதற்கு மாத்திரமல்லாமல், இடம்பெயர்ந்தவர்கள் என்ற அடைமொழியோடு இருந்தவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலைமைக்கு முழுமையாக மாறியுள்ளது என்றார்.




