எஸ்.அஷ்ரப்கான்-
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு ஒரு கீறல் விழுந்தால் கூட நான் மக்களை ஒன்றுதிரட்டி போராடுவேன். இது தனிப்பட்ட ஒரு நபரின் பிரச்சினையல்ல மாறாக முஸ்லிம் சமூகத்திற்கான பிரச்சினையாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எச்.எச்.எம். நபார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வாதப் பிரதி வாதங்களின்போது முஸ்லிம் தேசத்தினுடைய ஒரு உரிமைக் குரல்களில் ஒருவராக இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் நாடாளுமன்றத்திலே ரக்பி வீரர் வசீம் தாஜூதீனுடைய மரணம் தொடர்பாக உரையாற்றியபோது எதிர் தரப்பினர் குறிப்பாக ஜொன்ஸன் பெர்னான்டோ, தினேஸ் குணவர்த்தன போன்றோர் அச்சுறுத்தினார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஒரு முஸ்லிம் சகோதரனுடைய உயிரிழப்பு சம்மந்தமாக பேசியபோது வெளியே வா உன்னைப் பார்த்துக் கொள்கின்றேன் என்று பேசுமளவு காடையர்கள் கூட்டம் பாராளுமன்றுக்குள் இருக்கின்றார்கள். அராஜக ஆட்சியில் இருந்த காடையர்கள் இப்போது நல்லாட்சியிலும் தமது அஜந்தாவை அரங்கேற்றுகின்றார்கள். இதற்கு நல்லாட்சியில் இடமளிக்க முடியாது.
முஸ்லிம்களுக்கு சர்வதேசத்தில் அல்லது உள் நாட்டில் ஏற்படும் பிரச்சினையை தட்டிக் கேட்கின்ற, துணிந்து பேசுகின்ற ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகும்.
மறைந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அன்று எவ்வாறு அரசாங்கத்திற்கே சவாலாக, ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்தாரோ அவரைப் போன்று முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற ஒருவராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இருக்கின்றார்.
இவருக்கு வெளிப்படையாகவே அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார்கள். இவரது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமாக இருந்தால் அது ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் ஏற்படுகின்ற பேரிழப்பாகவே இருக்கும். முஸ்லிம் சமூகம் மாத்திரமன்றி இந்நாட்டின் தமிழ் தரப்பினரும் இது விடயமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கின்ற ஒரு இனத்திற்கு ஏற்படுகின்ற ஆபத்தை, அநியாயத்தை அதே இனத்தைச் சேர்ந்த ஒருவர் தட்டிக் கேட்கின்றபோது அவரை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் அநாகரிகத்தை பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சில கடும்போக்கு அரசியல்வாதிகள் அரங்கேற்றுவது மிகவும் மன வேதனையளிக்கின்றது. முஸ்லிம்களும் இந்த நாட்டின் சமமான ஜனநாயக குடிமக்களே, எனவே எங்களுக்கும் பேச்சுச் சுதந்திரம் இருக்கின்றது. அதனை முஜிபுர் ரஹ்மான் அவர்கள் மட்டுமல்ல இந்த நாட்டின் அனைத்து மக்களும் சிறப்பாக பயன்படுத்தும் உரிமை இருக்கின்றது.
இதனை மழுங்கடித்து எம்மீது சேறு பூச யாரும் முனையக் கூடாது. அவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கு மீண்டும் மீண்டும் களங்கமேற்படுத்த முனைந்தால் நாம் கைகட்டி இருக்க மாட்டோம். முஸ்லிம்கள் பொறுமையாளர்கள் என்றாலும் தொடர் தேர்ச்சியான அடக்கு முறைகளுக்கு நாம் பயந்து போகவும் மாட்டோம். அதற்காக நாடு தழுவிய போராட்டத்தில் நாம் இறங்குவோம் என்பதை கடும்போக்கு அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே இவ்வாறான கடும்போக்கு அரசியல்வாதிகளுக்கு இந்த அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடயம் வெறுமனே தனி நபர் ஒருவருக்கான பிரச்சினையல்ல. முஜிபுர் ரஹ்மானுடைய தனிப்பட்ட விடயமுமல்ல. ஆகவேதான் ஜனாதிபதி, பிரதமர் இணைந்து இதற்கான நடவடிக்கையை எடுத்து அச்சுறுத்திய நபர்களை விசாரணை செய்ய வேண்டும். என்றும் குறிப்பிட்டார்.
