க.கிஷாந்தன்-
குளிரூட்டப்படாத நிலையில் வாகனமொன்றில் கொண்டு செல்லப்பட்ட ஐஸ்கிரீம் வகைகளை, 11.12.2015 அன்று பிற்பகல் வேளையில் டிக்கோயா புளியாவத்தை நகரில் வைத்து பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த ஐஸ்கிரீம் வகைகள் டிக்கோயா புளியாவத்தை நகரில் விற்பனை செய்தபோதே அவை கைப்பற்றப்பட்டன.
எனினும் கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத சுமார் 50,000 ரூபாய் பெறுமதியான ஐஸ்கிரீம் வகைகளை பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் அழித்துள்ளனர்.
ஐஸ்கிரீம், யோகட் போன்ற பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்லும்போது வாகனத்தில் இருக்கின்ற குளிர்சாதனப் பெட்டியில் குளிரூட்டல் தன்மை காணப்பட வேண்டும் எனவும் மேற்படி கைப்பற்றப்பட்ட வாகனத்தில் ஐஸ்கிரீம் வகைகள் காணப்பட்டதாகவும் இவை உரிய முறையில் குளிரூட்டப்படாத நிலையில் இருந்ததால் மக்கள் பாவனைக்கு உகந்ததாக இல்லை என்பதை உணர்ந்து இவ்வாறு அழிக்கப்பட்டதாக பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி பி.கே.வசந்த தெரிவித்தார்.
மக்கள் இவ்வாறான பொருட்களை கொள்வனவு செய்யும்போது விழிப்புடன் செயற்படவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.




