ஜுனைட்.எம்.பஹ்த்-
ஒரு சிறுபான்மை இனத்தினுடைய மத நம்பிக்கையிலே பெரும்பான்மையான சிறுபான்மை சமூகம் ஒன்று விமர்சிப்பதென்பது ஓர் அநாகரிகமான செயலாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த சில நாட்களாக முஸ்லீம்களுடைய மத நம்பிக்கை மற்றும், முஸ்லிம்களுடைய செயற்பாடுகள் சம்பந்தமாகமிக மோசமான பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சுமந்திரன் மற்றும் கௌரவ யோகேஸ்வரன் போன்றவர்களால் நேரடியாக முஸ்லிம்களை தாக்குகின்ற விதத்தில் கருத்துப் பரிமாறல்கள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.
கடந்த 4 ம் திகதி பாராளுமன்றத்தில் பாதுகாப்பு, நிதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் குழுநிலை விவாதத்தின் போது இஸ்லாமிய ‘ஷரீஆ’ சட்டத்தை விமர்சித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். ‘ஷரீஆ’ சட்டம் என்பது மனிதனையும் இந்த உலகினையும் படைத்து, மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனை வழி காட்டிய இறைவனால் அமைக்கப்பட்ட சட்டமாகும். எமது நாட்டிலே குற்றச் செயல்கள் அதிலும் குறிப்பாக சிறுவர் துஸ்பிரயோகம், பெண்கள் மீதான வல்லுறவு, கொலை, கொள்ளை, போதைவஸ்து பாவனை போன்றவைகள் அதிகரித்திருப்பதற்கான காரணம் தண்டனைகள் நிறைவேற்றப்படாமையாகும்.
குற்றம் புரிபவர்கள் கைதிகளாக்கப்படுவதும் அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதும் அல்லது சிறையில் சிறிது காலம் அடைக்கப்படுவதும், சிறிய தண்டனைகளால் குற்றம் புரிபவர்கள் தாம் புரிகின்ற குற்றத்திற்கான தண்டனை குறைவு என நினைத்து அதனை புறக்கணித்து தொடர்ந்தும் மற்றவர்களையும் குற்றம் புரியத் தூண்டுகின்ற செயற்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது “ஷரீஆ” சட்டம் அமுலிம் உள்ள நாடுகளில் குற்றத்தின் அளவு ஒப்பீட்டளவில் குறைந்தே காணப்படுகின்றன.
ஆகவே, இது சம்பந்தமாக விமர்சிப்பதற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது.
கடந்த காலத்தில் பேரினவாத சக்திகள் சில இன ரீதியாக செயற்பட்ட போது சிறுபான்மை இனங்கள் ஓன்று பட்டு அதனை எதிர்த்தது. இப்போது ஒரு சிறுபான்மை இனத்தினுடைய மத நம்பிக்கையினை பெரும்பான்மையான சிறுபான்மை சமூகம் ஒன்று, மற்றுமொரு சிறுபான்மை சமூகத்தினை விமர்சிப்பதென்பது ஓர் இழிவான செயலாகும்.
முஸ்லிம்கள் யாரும் இன்னொருவருடைய நம்பிக்கையை விமர்சிப்பது கிடையாது. ஏனெனில் அவ்வாறு இஸ்லாத்தில் வழி காட்டப்படவில்லை.
மற்றவர்களுடைய மதத்தை மதிக்குமாறும், அவர்களுடைய நம்பிக்கைக்கு எந்தவித களங்கங்களையும் ஏற்படுத்துதல் கூடாது என்று இஸ்லாத்தில் வழி காட்டப்பட்டிருக்கின்றது. ஆக, கல்வியில் ஓர் சிறந்த ஓர் நிதானப் போக்குடைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்கள் இவ்வாறு நேரடியாக ஒரு மதத்தினுடைய நம்பிக்கையை இழிவுபடுத்துகின்ற செயலை நான் வண்மையாகக் கண்டிக்கின்றேன்.
முஸ்லீம்கள் தமிழ் பேசும் மக்கள் என்பதால் தங்களது தனித்துவத்தை இழந்து தமிழ் பேசும் தமிழர்களாக வாழ வேண்டும் என்று எண்ணிய புலிகளுடைய கோட்பாட்டிற்கு ஆதரவான ஒரு செயலாகவே இதனை நான் பார்க்கிறேன். இதே போன்று கடந்த 05.12.2015 ல் மட்டக்களப்பில் நடைபெற்ற அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவையொட்டி சிவதொண்டர் மாநாட்டில்.ஆறுமுகநாவலரின் எழுச்சிக் கருத்தரங்கில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் உரையாற்றும் போது இஸ்லாமியர்களினால் இந்துக்கள் மத மாற்றப்படுகின்ற சூழல் இருக்கிறது என்ற ஓர் நச்சுக் கருத்தினை வெளியிட்டிருந்தார்.
இது தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்துகின்ற ஓர் செயலாக அமைந்துவிடும். இவ்வாறு கடந்த காலங்களிலும் நேரடியாக முஸ்லீம்களை குறிவைத்து பல இடங்களில் பேசியிருக்கிறார். இஸ்லாம் மதத்தினை ஏற்றுக்கொள்கின்ற மாற்று மத சகோதரர்கள் எந்தவொரு கட்டத்திலும் வற்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டோ அல்லது வேறு தந்திரங்கள் பயன் படுத்தப்பட்டோ அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை.
மாறாக அவர்கள் பின்பற்றுகின்ற மதத்தின் கொள்கை கோட்பாடுகளையும், இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளையும் விளங்கி தமது பகுத்தறிவினூடாக இஸ்லாத்தை சரி கண்டு மாத்திரமே இஸ்லாத்தை ஏற்கின்றனர். ஆகவே அரசியல் இலாபங்களுக்காக மதங்களை விமர்சிப்பது இன்னுமொரு சமூகத்தின் மீது பழிசுமத்துவது போன்ற கீழ்த்தரமான செயல்களை மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஒற்றுமை பற்றி நாவினால் பேசாமல் உள்ளத்தினால் பேசவேண்டும். சமூகங்களை மூட்டிவிட்டு அரசியல் இலாபம் தேடுகின்ற குரோதமிக்கஇழிவான அரசியல் செயட்பாட்டிலிருந்து விடுபட்டு கிடைக்கப் பெற்றிருக்கின்ற நல்லாட்சியினூடாக இன ஒற்றுமையை பேணுவதற்குரிய ஆக்கபூர்வமான செயல்களில் இறங்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தெரிவித்தார்.
