முதல்வர் தொகுதியான ஆர்.கே.நகரில் பொதுமக்களுக்கு அமைச்சர்கள் பால், பிஸ்கெட் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் வரிசையில் வந்து நின்று இருந்தனர். ஆனால், பல மணி நேரம் ஆகியும் அமைச்சர்கள் வராத காரணத்தால், பொதுமக்கள் தங்களுக்கான நிவாரண பொருட்களை தாங்களே எடுத்து சென்றனர். மக்களின் ஆவேசத்துக்கு முன்பு அதிகாரிகள், அதிமுகவினர் அடக்கி வாசித்தனர். மக்களின் இந்த செயலை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட முதல்வர் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் வீடுகளில் சாலைகளில் வெள்ள நீர் வடியாமல் மக்கள் பெரிதும் அவதி பட்டு வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் உதவி கேட்கக்கூட வழி இல்லாமலும், வேலைக்கு செல்ல முடியாமலும், உறவினர்களிடம் தங்கள் நிலை பற்றி தெரிவிக்க வழி இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை தண்டையர் பேட்டை கருணாநிதி நகரில் மாநகராட்சி மற்றும் அரசு துறை சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக பால் மற்றும் பிஸ்கெட்டுகள் வழங்குவதற்காக அறிவிக்கப்பட்டிருந்ததது. இதற்காக 8 மணி முதலே அதிகாரிகள் பொதுமக்களை காக்க வைத்தனர்.
அமைச்சர்கள் வருவதாகவும் அவர்கள் கையால் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் நத்தம் விஸ்வநாதன் மற்றும் அமைச்சர்களை இதே பகுதியில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் நேற்று அமைச்சர்கள் வரவில்லை. காத்து காத்து பொறுமை இழந்த பொதுமக்கள் அங்கிருந்த பால் மற்றும் பிஸ்கெட்டுகளை எடுத்து சென்றனர் இதை தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆர்.கே.நகர் தொகுதி முதல்வர் தொகுதியாக இருந்தாலும், அந்தப் பகுதியிலேயே நிவாரண உதவி சரியாக வழங்கப்படவில்லை. அமைச்சர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க செல்கிறோம் என்ற எண்ணத்தில் செயல்பட வேண்டும்.
அதைவிடுத்து திருமண நிகழ்ச்சி, பொதுக் கூட்டத்துக்கு செல்வதைபோல 2 மணிநேரம், 3மணிநேரம் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் கொதித்துபோயினர். எனவேதான் நமக்கான நிவாரணப் பொருட்களை அவர்களே எடுத்து சென்று புரட்சி செய்துள்ளனர். எனவே, அமைச்சர்கள், அதிகாரிகள் உரிய நேரத்தில் வரவேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்று மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதை தவிர்க்க முடியாது’’என்றனர்.
தினகரன்
தினகரன்
