அபுஅலா -
அம்பாறை மாவட்ட ஆலம்குளம் கரும்பு செய்கை காணி உரிமையாளர்கள் தங்களின் காணி உத்திரவாத பத்திரத்தை உறுதியாக மாற்றித்தரக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை எதிர்வரும் வியாழக்கிழமை (10) நடாத்தவுள்ளதாக ஆலம்குளம் கரும்பு செய்கைக்குழு விவசாய அமைப்பின் செயலாளர் யூ.கே.சம்சுதீன் இன்று (08) தெரிவித்தார்.
இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் 5000 கரும்பு செய்கை காணி உரிமையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த 30 வருடங்களாக கரும்பு செய்கை காணி உரிமையாளர்கள் தங்களின் உத்திரவாத பத்திரத்தை உறுதியாக மாற்றித் தரக்கோரி முன்னார் இருந்த அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் பல தடவைகள் கோரிக்கையினை விடுத்து வந்துள்ளதாகவும், அதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மகஜர் ஒன்றையும் தற்போதுள்ள அரசாங்க அதிபரிடம் அன்றைய தினத்தில் கையளிக்கவுள்ளதாகவும் ஆலம்குளம் கரும்பு செய்கைக்குழு விவசாய அமைப்பின் செயலாளர் யூ.கே.சம்சுதீன் மேலும் தெரிவித்தார்.
