அபுஅலா –
அக்கரைப்பற்று கல்வி வலய, அக்கரைப்பற்று அஸ் ஸிறாஜ் மகா வித்தியாலய மைதான அபிவிருத்தி வேலைகளுக்காக 10 இலட்சம் ரூபாவினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் விவகார தொழில் வாய்ப்புத்துறை செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய ஏ.எல்.தவம் ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாண சபை உறுப்பினரின் பிரத்தியேக ஊடக இணைப்பாளர் எம்.ஐ.எம்.றியாஸ் இன்று (15) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த பல வருடங்களாக அக்கரைப்பற்று மாநகரத்தை ஆட்சி செய்துவந்த தேசிய காங்கிரஸின் தலைவர் அரசியல் அதிகாரமுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள நிலைமையில் இருக்கும்போது இந்த பாடசாலை மைதான நிலைமை பற்றி பாடசாலை சமூகம் பல தடவைகள் எடுத்துரைத்தும் எந்தவித நிதி ஒதுக்கீடுகளையும் செய்யாமல் இருந்துவிட்டார்.
இந்த விடயத்தைப்பற்றி பாடசாலை சமூகம் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்திடம் சுட்டிக்காட்டியதை அடுத்தே இந்த அவசர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பாடசாலை மைதான அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாகாண சபை உறுப்பினரின் பிரத்தியேக ஊடக இணைப்பாளர் எம்.ஐ.எம்.றியாஸ் மேலும் தெரிவித்தார்.
கடந்த 1951 ஆம் ஆரம்பிக்கப்பட்ட இந்த அஸ் ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் விளையாட்டு மைதானத்துக்கான இடவசதிகள் இருந்தும் இற்றைவரை காலமும் பாடசாலை மாணவர்களுக்கான இல்ல விளையாட்டுப் போட்டிகள் பாடசாலையில் இடம்பெறவில்லை.
அந்த மாணவர்களினதும் பாடசாலை சமூகத்தினரினதும் பெற்றோர்களினதும் 64 வருடக் கனவை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தினால் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் புதிய ஆண்டில் இப்பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
