தலைநகர் புதுடெல்லியில் டீசல் கார்களுக்கு தடை விதிப்பது குறித்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் பணக்காரர்கள் சொகுசு கார்களில் சுற்றி சுற்றுச்சூழலை சீர் குலைப்பதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் டீசலில் இயங்கும் அதி நவீன சொகுசு கார்கள் மற்றும் 2 ஆயிரம் சிசி-க்கும் மேற்பட்ட செயல்திறன் கொண்ட கார்களுக்கு தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்த தீர்ப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் புதிதாக டீசல் கார்களை பதிவு செய்ய வேண்டாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு டெல்லியில் உள்ள கார் விற்பனையாளர்கள் சார்பில் அண்மையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பசுமை தீர்ப்பாயம், இது தொடர்பாக டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், கார் உரிமையாளர்களின் கோரிக்கை மனு குறித்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ் தாகூர் “மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நேரத்தில் நீங்கள் கார்களை விற்றுத்தள்ளுவதில் ஆர்வம் காட்டுகிறீர்களா?” என்று பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக மனு கொடுத்துள்ள கார் விற்பனை டீலர்களை காட்டமாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக, கடந்த வாரம் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் டெல்லியில் டீசல் கார்களை புதிதாக பதிவு செய்யக்கூடாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
