மு.இ.உமர் அலி-
கொழும்பு, பொறலை லேடி ரிட்ச்வே சிறுவர் வைத்தியசாலையில் குறை மாதத்தில் பிறந்து அவ் வைத்தியசாலையில் சிகிச்கை பெற்று தற்போது சிறந்த உடல் உள ஆரோக்கியத்துடன் இருக்கும் குழந்தைகளுக்கான ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிள்ளைகளின் திறமைகள் மேடையிலே வெளிக்காட்டப்பட்டன.
இப்பிள்ளைகளின் பெற்றோர் பாதுகாவலர்களது அனுபவங்கள் பகிரப்பட்டன. மேலும், இவர்களுக்கான பரிசுப் பொட்டலங்களும் போசாக்குகள் அடங்கிய உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டது.
இவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் குமார விக்ரமசிங்க அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் கலந்து கொண்டார்கள். 'குறிப்பிட்ட பல காரணிகளால் குறைப்பிரசவங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு பிரசவிக்கப்பட்ட பிள்ளைகளை பாதுகாத்து சாதாரண பிள்ளைகளாக உருவாக்குவதில் வைத்தியர்கள், தாதிமார் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
எனது பிள்ளை ஒன்றும் இவ்வாறு பிரசவிக்கப்பட்டதனால் இதன் கஸ்ட நஸ்டங்களை நான் நன்கு உணர்வேன். எனவே, பெற்றோராகிய நீங்கள் இக்குழந்தைகளை பற்றி கவலைப்படத்தேவையில்லை. அவர்கள் சாதாரண உடல் உள வளர்ச்சியுடையவர்களாகவே இருப்பார்கள். மேலும், இந்த முதிராக் குழந்தைகளை பராமரிக்கும் உபகரணங்கள், வசதிகளை அதிகரிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. மட்டுமன்றி வைத்தியர்களுக்கும், தாதிமார்களுக்கும் வழங்கப்படும் விசேட பயிற்சிகள் அதிகரிக்கப்படும்.'என இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து இவ்வைத்தியசாலையின் பூந்தோட்டத்திற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மின்விளக்குத் தொகுதி பிரதி அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் ரம்யா டி சில்வா அமைச்சரின் இணைப்பாளர் டாக்கட் எம்.எஸ். சிஹான் அஸீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.




