புகையிரத சேவை பொத்துவில் வரை நீடிக்கப்பட வேண்டும்..!

எஸ்.அஷ்ரப்கான்-
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு வரை இடம்பெறும் ரயில் சேவையை பொத்துவில் வரை நீடிப்பதற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறும் முதற்கட்டமாக ஒலுவில் வரை சேவையை ஆரம்பிக்குமாறும் கோரி சாய்ந்தமருது சுபீட்சம் நற்பணி மன்றத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர்களுக்கு மகஜர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் எம்.ஐ.எம்.அன்சார்,செயலாளர் ஏ.ஆர்.அஷ்பாக் அஹமட் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கௌரவ ரணசிங்க பிரேமதாச அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஏ.ஆர்.மன்சூரின் வேண்டுகோளுக்கிணங்க ஈரான் அரசினால் மட்டக்களப்பு - பொத்துவில் வரையான புகையிரதப்பாதை வரைபடம் தயாரிக்கப்பட்டு அதனை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திடீரென ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் பல வருடங்களாக நாட்டை அச்சுறுத்திய யுத்தமும் இந்த அபிவிருத்திக்குத் தடையாக இருந்தன. தற்போது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் புகையிரதப்பாதை அமைப்பதில் எவ்வித தடையும் இல்லை.

சுனாமி அனர்த்தத்தின் பிற்பாடு கிழக்கு மாகாணத்தில் கடற்கரையிலிருந்து 65 மீற்றர் எல்லைக்குள் கட்டிடங்கள் அமைக்கவோ குடியிருக்கவோ முடியாதென்று வர்த்தமானி ஊடாக அரசினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தல் கடற்கரையை அண்மித்து இருக்கும் இந்த 65 மீற்றர் எல்லைக்குள் புகையிரதப்பாதைகளை அமைக்கலாம். இக்குறிப்பிட்ட எல்லையில் உள்ள காணிகளுக்காக நஷ்டஈடு கொடுக்க வேண்டிய தேவையில்லை ஒலுவில் வரையாவது புகையிரதப்பாதையை அமைப்பதற்கு நல்லாட்சி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து இப்பிரதேச மக்களின் மிக நீண்டகாலத் தேவையினை பூர்த்தி செய்ய வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது. இம் மீன்பிடித் துறைமுகம் எமது பிரதேச அபிவிருத்தியிலும் நாட்டின் பொருளாதார, வர்த்தக துறையிலும் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்துமென நம்பப்படுகிறது. அத்துடன் படித்த இளைஞர், யுவதிகள், வேலையற்ற பட்டதாரிகள் உட்பட துறைமுக நிர்மாணப் பணிக்காக காணிகளை இழந்தவர்களின் பிள்ளைகளுக்கும் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்துறைமுகத்திற்கு புகையிரதம் மூலம் பொருட்களை ஏற்றி இறக்கவும் இலகுவாக அமைவதுடன் இளைஞர், யுவதிகளுக்கு இத்திணைக்களத்தில் வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.

கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இவர்கள் அரச, அரச சார்பற்ற அலுவலகங்களிலும் கடமை புரிகின்றார்கள். கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். தொழில் நிமிர்த்தம் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் கிழக்குக்கு வருகின்றார்கள். மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு பிரயாணம் மேற்கொள்ளும் அதிகமானோர் அம்பாறை மாவட்ட மக்கள் என அறியக்கூடியதாக உள்ளது. குறிப்பாக ஹிங்குரான, இங்கினியாகல, பொத்துவில், பாணமை, லஹுகல, அறுகம்பை போன்ற சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் வசிப்பவர்களும் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு வந்து பிரயாணங்களை மேற்கொள்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் இசை நடனக் கல்லூரி (கல்லடி), தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (ஒலுவில்), ஆசிரியர் பயிற்சிக்; கலாசாலை (அட்டாளைச்சேனை), தொழிநுட்பக் கல்லூரிகள், கல்வியியற் கல்லூரிகள் மேலும் பிரபல்யமான பாடசாலைகளும் அமைந்துள்ளன. இப்பிரதேசத்தில் கல்வி பயிலும் மாணவர்களும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். 

அத்துடன் ஏனைய வெளிமாவட்ட உயர் அதிகாரிகளும் இப்பிரதேசத்திற்கு வந்து கடமைபுரிகின்றனர். இவர்களின் போக்குவரத்திற்கு புகையிரத சேவை மிகவும் பிரயோசனமாக இருப்பதுடன் தேவையேற்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் இலவச புகையிரத ஆணைச்சீட்டினைக் கொடுத்து சிரமமின்றி ஆசனங்களை பதிவு செய்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். மேலும் காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, கல்முனை, அம்பாறை, அக்கரைப்பற்று, பொத்துவில் போன்ற வியாபார நகரங்களின் வர்த்தகர்கள் பொருட்கள், பண்டங்களை ஏற்றி இறக்குவதற்கும் புகையிரத சேவை பயனுள்ளதாக அமையும். 

இதன் மூலமாக வியாபாரிகளும் பொது மக்களும் நன்மையடைவதுடன் புகையிரதத் திணைக்களமும் பெரும் இலாபத்தினை பெற்றுக் கொள்ள முடியும். தற்போது யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் சுற்றுலாப் பிரயாணிகளைக் கவர்ந்துள்ள பொத்துவில், உல்லை, அறுகம்பை போன்ற பிரதேசங்களுக்கு புகையிரத சேவை இடம்பெற்றால் அதிக வருமானம் திணைக்களத்துக்கு கிடைக்கும்.

ஆகவே கடந்தகால யுத்தம், இதர காரணங்களால் தடைப்பட்டிருந்த மட்டக்களப்பு, பொத்துவில் புகையிரதப்பாதை அபிவிருத்தித் திட்டத்தினை குறைந்தது முதற்கட்டமாக மட்டக்களப்பு முதல் ஒலுவில் வரையுமாவது ஆரம்பிப்பது தொடர்பாக தங்களின் விஷேட கவனத்தை செலுத்தும்படி இப்பிரதேச பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

இம்மகஜரின் பிரதிகள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, தயாகமகே, றிசாட் பதியுத்தீன், றவூப் ஹக்கீம் அத்துடன் பிரதி அமைச்சர்களான அசோக அபேசிங்க, எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.சி.பைசல் காசிம், அமீர்அலி, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அலி ஸாஹிர் மௌலானா (பா.உ) ஆகியோர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -