ந.குகதர்சன்-
எமது தோலில் கைபோட்டு தோலமையாக இருக்கலாம் ஆனால் எங்கள் மடிகளில் கை வைத்து எமது உரிமைகளை பிடுங்குவதற்கு எவருக்கும் நாம் இடமளிக்க மாட்டோம். இதில் நாம் மிகவும் உறுதியாக இருக்கின்றோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
வாழைச்சேனை வாகனேரி இத்தியடிப் பிள்ளையார் ஆலய அடிக்கல் நாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
இறைவன் வைதாரையும் வாழ வைப்பான். இங்கு யாரோ ஒரு விசமியினால் மேற்கொள்ளப்பட்ட காரியம். இதனை நாம் நீட்டிக் கொண்டு போகக் கூடாது. அவ்வாறு விசமியினால் மேற்கொள்ளப்பட்ட விடயம் நல்லதொரு காரியத்தினைச் செய்திருக்கின்றது.
இந்த ஆலயத்திற்கு ஏற்கனவே ஒருமுறை இவ்வாறு இடம்பெற்றது. இதன் பின்பு தான் இங்கு ஆலயம் அமைப்பது தொடர்பில் ஒரு கட்டமைப்பு தோற்று விக்கப்பட்டது. அதன் பின் அண்மையில் மீண்டும் ஒரு அசம்பாவிதம் இடம்பெற்றது. அதன் விளைவே இந்த ஆலயம் பெரிதாக அமைப்பதற்குரிய கட்டுமானப் பணிகள் ஆரம்பிப்பு. சாதாரணமாக ஆலயம் அமைப்பதற்கு கல் வைக்கும் நிகழ்வாக இருப்பின் இத்தனை பேர் வந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் நம்முடைய சகோதரரர் செய்யக் கூடாத ஒன்றைச் செய்திருக்கின்றார்கள். ஆனால் அவரை அறியாமலே அவர் நல்லதொரு காரியத்தினைச் செய்திருக்கின்றார். எனவே அவரையும் நாம் வாழ்த்த வேண்டும். அவர் அவ்வாறு செய்திராவிட்டால் இவ்வாறு எம் மக்கள் மத்தியில் ஒரு உணர்ச்சி ஏற்பட்டிருக்காது. இப்போது எமது மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு அலாரம் அடித்துள்ளார்.
இதனை நாம் கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் இடையில் இருக்கும் சிறு சிறு குழப்பக்காரர்களால் தான் பிரச்சினை ஏற்படுகின்றது. அதனை நாம் பெரிய அளவில் எடுத்துக் கொண்டு இன மத முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றோம். இவற்றில் ஊர்த் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நாட்டின் தலைவர்கள் எல்லோரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறான குழப்பங்களை பெரிய நெருப்பாக வளர்ப்பதற்கு எந்த விதத்திலும் தலைமைகள் அனுசரணையாக இருக்கக் கூடாது இடம்கொடுக்கவும் கூடாது.
இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சுதந்திரம் அடைந்தது இரத்தக்களரியில் தான் முடிந்தது. யாரோ இரண்டொருவரின் விசமத்தனம் தான் பெரும் கலவரங்களுக்கு காரணமாக இருந்ததது. இந்த விடயத்தை நாம் உதாரணமாக எடுத்துக் கொண்டு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
யார் யார் எங்களை உசுப்பப் பார்க்கின்றார்களோ அவர்களுக்கு அவர்கள் விரும்பிய படி இன நல்லிணக்கத்தைக் குழப்பிவிடும் வகையில் நாம் நடந்துவிடக் கூடாது. இதனை எவ்வாறு ஆக்க காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவே சிந்திக்க வேண்டும். எங்களை யாராவது குழப்ப நினைத்தார்கள் என்றால் அந்தக் குழப்பத்தை நாங்கள் நண்மையான விடயங்களுக்கு உட்படுத்த வேண்டும்.
ஏனெனில் இந்த நாடு பல இன, மத, மொழிகளைக் கொண்ட நாடு, இப்போது அது அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் அது அங்கீகரிக்கப்படவில்லை. இதற்கு முன்னர் பெரும்பாண்மை மக்களுடைய அபிலாசைகளுக்கு ஏற்ப சிறுபாண்மை மக்களும் அவர்களோடு இணைந்தவாறு வாழ வேண்டும். பெரும்பாண்மை மக்கள் பெரிய மரம் சிறுபாண்மை மக்கள் அதில் பற்றிப் படருகின்ற கொடிகள் என்றெல்லாம் சொன்னார்கள். அதனை நாம் ஒரு போதும் ஏற்றதில்லை. ஆனால் தற்போதுள்ள அரசாங்கம் பன்மைத்துவத்தை அங்கீகரித்துள்ளது. எனவே இங்கு அனைவரும் வாழ்வதற்கான உரிமை உண்டு அவர்களின் அளவுக்குள்ளே வாழ வேண்டும்.
நாங்கள் தோலில் கைபோடுவதற்கு இடம்கொடுப்போம் ஆனால் எமது மடிகளில் கை வைப்பதற்கு எவருக்கும் இடம்கொடுக்க மாட்டோம். அதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றோம். தோலில் கைபோட்டு தோழமையாக இருக்கலாம் ஆனால் எங்கள் மடிகளில் கை வைத்து எமது உரிமைகளை பிடுங்குகின்ற போது நாங்கள் ஏற்கனேவே சொன்னது போல் மிகவும் புத்திசாதுரியமாக நாம் எமது விடயங்களைக் கையாளுவோம். அத்தகைய தலைமையும் எங்களுக்கு உண்டு.
எமது தலைமை சொல்லுவதெல்லாம் இப்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையை மிகவும் கவனமாகப் பயன்படுத்தி இந்த நாட்டில் உள்ள சகல மக்களுக்கும் நீதியைத் தரக் கூடிய ஒரு தீர்வை நோக்கி நாங்கள் நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதில் தமிழ் மக்களாகிய நாம் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.