செய்தியாளர்-எஸ்.அஸ்ரப்கான்
கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் அமைச்சின் முக்கியஸ்தர்களுடன் இன்று (2015.11.12) வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்டார்.
கல்முனை சந்தாங்கேணி மைதான அபிவிருத்தி செய்வதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் அழைப்பின் பெயரில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.டீ.எஸ். றுவான் சந்திர, பிரதி பணிப்பாளர் கொடமுன, அமைச்சின் பிரதம பொறியியலாளர் ரணசிங்ஹ மற்றும் உயர் அமைச்சின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினரும் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரொபின் ஆகியோரும் விஜயம் செய்து இங்கு செய்யப்படவுள்ள மைதான அபிவிருத்தி தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர்.
இம்மைதானத்தினை 400 மீற்றர் கொண்ட மைதானமாகவும், கிரிக்கெட், மெய்வல்லுனர் விளையாட்டுக்களுக்கான மைதானமாகவும், பார்வையாளர் அரங்கு, மேடை அபிவிருத்தி என்பனவும் அபிவிருத்தி செய்வதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். அதுபோல் அம்பாரை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.
இதனூடாக இப்பிரதேச விளையாட்டுக் கழகங்களின், விளையாட்டு வீரர்களின் மிக நீண்டகால கனவு நிறைவேறவுள்ளதாகவும், அதற்காக பிரதேச கழகங்களின் அமைப்பு பிரதி அமைச்சருக்கு தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.