பதுளை மாவட்டத்தின் மீரியபெத்தையில் மீண்டுமொரு பாரிய மண் சரிவு அனர்த்தம் குறித்து இன்று முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இன்று மாலை நேரத்தில் மீரியபெத்தை பகுதியில் கொட்டிய பயங்கர மழையானது ஒரு மணித்தியாலத்துக்கு நூறு மில்லிமரிலும் பார்க்க அதிகளவில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாகவே அப்பகுதியில் மீண்டுமொரு மண்சரிவிற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பிரதேசத்தில் வசித்த 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று மாலை அவசர கதியில் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடமாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் வெல்லவாய- கொஸ்லாந்தை பிரதான பாதையின் மூன்று இடங்களில் மண்சரிவு காரணமாக தற்போது அப்பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஹல்தும்முல்லை , அமுபிடிகந்த, தியகல பிரதேசத்தில் வசித்த 60 குடும்பங்களும் மண்சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் கொஸ்லாந்தை , மீரியபெத்தையில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தம் காரணமாக சுமார் 30 பேர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
