முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் முகமாக வைக்கப்பட்டிருந்த தேசியக் கொடி திரிபுபடுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசியக் கொடியில் மஹிந்த ராஜபக்ஷவின் உருவம் நுழைக்கப்பட்டிருந்ததாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவின் உருவம் பொறிக்கப்பட்ட தேசியக் கொடிகள் மல்வானையிலிருந்து தொம்பேயிற்கு திரும்பும் சந்தியில் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
சிங்கக் கொடியிலுள்ள சிங்கத்தின் கையிலுள்ள வாளின் முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவின் உருவம் உட்படுத்தப்பட்டு, “நாட்டுக்கு பிறந்த தினத்தை பெற்றுத் தந்த உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என பதிக்கப்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய கொடியை திரிபுபடுத்த முடியாது எனவும், இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
அத்துடன், சிங்கக் கொடியை மாற்றுவது தண்டனைக்குரிய குற்றம் என உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்று முன்னாள் ஜனாதிபதியின் 70 ஆவது பிறந்த நாள் நிகழ்வுகள் அனுராதபுரத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
