ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிரிதலே இராணுவ முகாமிற்கு சென்ற புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் பல முக்கிய தகவல்களை திரட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்கள் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் திகதி எக்னெலிகொட முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட விதம், தடுத்து வைக்கப்பட்டிருந்த இடம் உள்ளிட்ட பல முக்கிய விரபங்களை புலனாய்வுப் பிரிவினர் திரட்டியுள்ளனர்.
கிரிதலே முகாமில் பேணப்பட்டு வந்த அதிகாரிகள் உத்தியோகத்தர்களின் விடுமுறை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் சேவைக்கு திரும்புதல் தொடர்பான ஆவணங்கள், வாகனங்கள் உட்செல்லல் மற்றும் வெளியேறுதல் தொடர்பான ஆவணங்கள் என்பனவற்றையும் புலனாய்வுப் பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களின் செல்லிடப் பேசிகள் பற்றிய விபரங்கள் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
புலனாய்வுப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருசாந்த டி சில்வா, முகாம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தம்புள்ள பிரதேசத்தில் காணப்பட்ட காணியொன்றில் எக்னெலிகொட நடத்திய சந்திப்பு ஒன்று குறித்த ஓடியோ தகவல்களை பதிவு செய்திருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், அப்போதைய பிரிவின் பணிப்பாளரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அந்த விடயம் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
