ஜீ.எஸ்.பி. சலுகை விரைவில் கிடைத்துவிடும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கத் தலைவர்களுடனான பிரமரின் சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இன்று நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜெனீவா மனித உரிமைகள் அமர்வின் செயற்பாடுகள் ஊடாக சர்வதேச மட்டத்தில் இலங்கை தொடர்பான நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவிடமிருந்து எமக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை மிக விரைவில் கிடைத்துவிடும். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர சில நாட்களில் முன்னெடுக்கவுள்ளார்.
அதன் பின்னர் உள்நாட்டில் சுமார் பத்து லட்சம் தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும். அதன் மூலமாக நம்நாட்டின் வேலையில்லாப் பிரச்சினைக்கும் ஓரளவு தீர்வு காணப்பட்டு, பொருளாதார அபிவிருத்திக்கும் வழியேற்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
