ஐ. ஏ. காதிர் கான்-
இஸ்லாமிய புது வருடமான ஹிஜ்ரி 1437 முஹர்ரம் மாதத்தை நினைவு கூரும் முகமாக மினுவாங்கொடை - கல்லொழுவை அல்-அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஏச்.ஏம். காமில் தலைமையில் பாடசாலை மாணவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்ட நிகழ்வு அண்மையில் மிக விமர்சையாக நடைபெற்றது.
பிரதி அதிபர் ஏ.ஏ.எம். றிஸ்வி, கல்லொழுவை அபிவிருத்திக் குழுவின் தலைவர் டாக்டர் எம்.எச்.எம். முனாஸிக், செயலாளர் எம்.ஏ.எம் நிலாம், அமைப்பாளர் மௌலவி ஐ.ஏ.காதிர் கான்-கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் ஸக்காத் குழு உறுப்பினர் ஏ.எச்.எம். பரீஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலை மாணவர்களது முஹர்ரம் மாதத்தினை சிறப்பித்துக் காட்டும் கலை நிகழ்ச்சிகள் பல இடம் பெற்ற இந் நிகழ்வு மேலும் சிறப்பாக நடைபெறுவதற்கு கல்லொழுவை அபிவிருத்திச் சங்கம் முழுமையாக அனுசரணை வழங்கியதுடன் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் இணைந்து இவ் விழாவை ஒழுங்கு செய்திருந்தது.
சகல மாணவர்களுக்கும் சிற்றுண்டிப் பொதிகள் கல்லொழுவை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.