எப்.முபாரக்-
திருகோணமலை, மொறவௌ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் ,சாந்திபுரம் மற்றும் ரொட்டவௌ பகுதிகளில் அரசினால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் மக்கள் குடியமராமையினால் இவ்வீடுகளில் சமூக விரோத செயற்பாடுகள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல வருட காலங்களாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருவதாகவும் நிரந்தர வீட்டுத்திட்டம் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
அரசினால் கட்டப்பட்ட பல வீடுகள் பாழடைந்து காணப்படும் நிலையில் இதுவரை எவரும் அங்கு குடியமர்த்தப்படாதுள்ளதால் அவ்வீடுகளில் சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பில் மொறவௌ பிரதேச செயலாளர் டப்ளியூ. வாத்திய விஜயந்தவிடம் வினவியபோது,
வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவித்தல் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் கட்டப்பட்ட வீடுகளில் குடியிருக்காமல் பாதுகாப்பற்ற விதத்தில் காணப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் அதனையும் மீறும் பட்சத்தில் வீடு இல்லாதவர்களுக்கு அவ் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
