பாலமுனை விழாவில் முதலமைச்சரின் வருகையை தடுத்த மாகாண சபை உறுப்பினர்..!

பி. முஹாஜிரீன்-
பாலமுனை அல் அறபா விளையாட்டுக் கழகத்தின் எற்பாட்டில் மிகப் பிரமாண்டமான கல்வி எழுச்சி மாநாடும் கௌரவிப்பு விழாவும் சனிக்கிழமை (26) மாலை நடைபெற்றது.

அல் அறபா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ். ஆப்தீன் தலைமையில் பாலமுனை கடற்கரை திறந்த வெளியரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாலமுனையைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.ஐ.எம். மௌஜூத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

பாலமுனைக் கிராமத்திலிருந்து 2008 முதல் 2013 வரை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி பட்டம் பெற்ற மற்றும் தற்போதும் கற்கை நெறியினைத் தொடர்ந்து வருகின்ற 43 பட்டதாரிகளும் அவர்களது பெற்றோர்களும் இந்நிகழ்வில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவின் ஆரம்பத்தில் பாராட்டப்பட்டோர் அனைவரும் பேன்ட் வாத்தியங்களுடன் விழா மேடையை நோக்கி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். 

இறைதுதியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் கழகத்தின் தலைவர் எஸ். ஆப்தீன் தலைமையுரை நிகழ்த்தினார். அவரது உரையில், பாலமுனை கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழைமைவாய்ந்த ஒரு கிராமமாக இருந்தாலும் பல்வேறு துறைகளில் பின்தங்கிய நிலை காணப்படுகின்றது. குறிப்பாக உயர் கல்வி அடைவுகள் கவலை தருவதாகவே காணப்படுகிறன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இக்கல்வி எழுச்சி மாநாட்டினை நடாத்தி உற்சாகமும் கௌரவமும் வழங்குகின்றோம்.

இவ்விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருந்தார். திருகோணமலைக்குச் சென்று அவரது நேரத்தினைப் பெற்றே நாங்கள் இவ்விழாவிற்கான திகதியைத் தீர்மானித்தோம். இறுதியில் இங்குள்ள மாகாண சபை உறுப்பினரின் பெயர் எங்களது அழைப்பிதழில் சேர்க்கப்படவில்லை என்பதற்காக அவர் முதலமைச்சரின் வருகையை தடுத்துள்ளார். எங்களது வாக்குகளால் தெரிவான ஒரு முதலமைச்சர் இவ்விழாவுக்கு வருவதை எங்களால் தெரிவு செய்யப்ட்ட ஒரு மாகாண சபை உறுப்பினர் தடுத்திருப்பது பெரும் கவலையான விடயமாகும் என்றார்.

இம்மாநாட்டில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானோர் அனைவரும் பதக்கங்கள் அணிவித்து பாராட்டப்பட்டனர். பின்னர் அவர்களது பெற்றோர் மேடையேற்றப்பட்டு அவர்கள் முன்னிலையில் அதிதிகளால் நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


பாலமுனையிலிருந்து முதல் தடவையாக மருத்துவ பீடத்திற்கத் தெரிவு செய்யப்பட்ட எஸ்.எம். றிபாஸ்தீன், பொறியில் பீடத்திற்குத் தெரிவான எம்.எச். நௌஸாத், மருத்துவ பீடத்திற்கு மாவட்டத்தில் முதல்தர சித்திபெற்று தெரிவான ஏ.எல். சுதைஸ் முகம்மட், கல்வி நிருவாக சேவைக்குத் தெரிவு செய்யப்பட்ட ஏ.ஜி. பஸ்மில், முதல் இஸ்லாமிய பல்கலைக்கழக பட்டதாரியான ஐ.எல்.எம். ஹாஸிம் சூரி மதனி, முதல் சட்டத்தரணி ஐ.எல். இஸ்மாலெவ்வை ஆகியோர் இங்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னங்கள் வழங்கி விசேட கௌரவமளிக்கப்பட்டனர்.

கடற்கரை திறந்த வெளிரங்கில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் இவர்கள் பொது அமைப்புகளாலும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்வில் பாலமுனையிலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய “செழுமை” எனும் தகவல் திரட்டு விசேட மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும். 

இங்கு பேராசிரியர் எம்.ஐ.எம். மௌஜூத் உரையாற்றுகையில், நாம் கல்வி கற்க வேண்டியது அடுத்தவர்களது நலனுக்காகவே தவிர நமது நலனுக்காக அல்ல. நாம் பெறுகின்ற கல்வி மூலம் மற்றவர்கள் பயனடையவில்லையென்றால் அந்தக் கல்வியில் பயனெதுவும் இல்லை. ஒரு சமூகம் முன்னேற வேண்டுமாக இருந்தால் அங்கு படித்தவர்கள் இரக்க வேண்டும். அதேபோன்று கல்வி, பொருளாதாரம், அரசியல் இம்மூன்றும் ஒன்றாகக் கிடைக்கின்றபோது அந்த சமூகத்தின் வளர்ச்சியை வெளிப்படையாக நாம் காண முடியும். 

நமது பிரதேசத்திலிருந்து குறிப்பிட்ட தொகையினர் மத்திய கிழக்கிற்குத் தொழிலுக்காகச் சென்றால் அவர்களைப் போன்ற ஒரு பங்கினர் பல்கலைக்கழகத்திற்கச் செல்ல வேண்டும். இப்போது நமது கிராமம் கல்வியில் எழுச்சி பெற்று வருவது பாராட்டுக்குரியதாகும். மேலும் இவ்வாறான பெரு விழாக்கள் நமது எதிர்கால சந்ததியினரக்கு பெரும் உத்வேகத்தை வழங்கும். அதற்காக அல் அறபா கழகத்தினருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வில் பேராசிரியர் எம்.ஐ.எம். மௌஜூத், வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காஸிம், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கே. கார்த்தீபன் ஆகியோர் பொன்னாடைபோர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -