மோடியும் மார்க் ஸ்கர்பெர்க் சமீபத்தில் சந்தித்ததிலிருந்து, தேசியக் கொடியின் மூவர்ண சாயலில் பலரும் தங்கள் ப்ரொஃபைலில் உள்ள படங்களை மாற்றி வருகின்றனர். மோடி தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்தை மாற்றி டிஜிட்டல் இந்தியா ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து பலரும் http://fb.com/supportdigitalindia என்ற இணையதளத்தில் தங்கள் புகைப்படங்களை இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தில் மாற்றி வந்தனர். கொடுக்கப்பட்ட லிங்கில் நம் புகைப்படத்தை மூவர்ண சாயலில் மாற்றியப் பிறகு டிஜிட்டல் இந்தியாவிற்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி என வரும்.
இதற்கிடையில் பல இணையதளங்களில் இவ்வாறு புகைப்படங்களை மூவர்ண சாயலில் மாற்றுவது டிஜிட்டல் இந்தியாவை திட்டதிற்கு ஆதரவு அளிப்பதோடு ஃபேஸ்புக்கின் “எல்லோருக்கும் இணையம்” திட்டத்திற்கும் மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக எடுத்துக்கொள்ளப்படும் என நேற்று செய்தி வெளியிட்டன.
இந்தியாவில் பரபரப்பாக வாதாடப்பட்ட இணைய சுதந்திரம் ஃபேஸ்புக்கின் இந்த “அனைவருக்கும் இணையம்” திட்டத்தின் மூலமாக பாதிக்கப்படும். இந்தியாவிற்கு ஆதரவு அளிப்பதாக நினைத்து இப்படி ஃபேஸ்புக்கின் மற்றொரு திட்டத்திற்கு ஆதரவளித்துவிட்டோமே என பல நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
http://fb.com/supportdigitalindia என்ற இந்த லிங்கின் முகவரியின் Code ஐ ஆராய்ந்த போது இது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி பலரும் ஃபேஸ்புக்கின் இந்த போக்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சரமாரி குற்றச்சாட்டுகளுக்கு பிறகு பேஸ்புக்கின் செய்தி தொடர்பாளர், தவறுதலாக அவ்வாறு புரிந்து கொள்ளப்படுவதாகவும் இந்த டிஜிட்டல் இந்தியா லிங்கிற்கும் இணைய சுதந்திரத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
எனினும் இதை பற்றிய பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. எதற்காக ஃப்ரொஃபைல் படம் மாற்றுகிறோம் என்று கூட யோசிக்காமல் பலரும் செய்கிறார்களே என்கிறபோது இது அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.
