முஸ்லிம் காங்கிரஸ் - நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தேர்தல ஒப்பந்தம் வெறும் கையெழுத்தா?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் -

டந்த நாடாளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இவர்களிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது,

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தில் பொருத்தமான இடத்தினையும் வாய்ப்பினையும் ந.தே.மு பெற்றுக்கொள்வதனை ஸ்ரீ.ல.மு.கா உத்தரவாதப்படுத்தும். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ந.தே.மு வின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை உத்தரவாதப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் பட்சத்தில் அதனை ஸ்ரீ.ல.மு.கா பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதற்கேற்ற வகையில் ந.தே.மு வினால் பிரேரிக்கப்படும் ஒருவர் சமர்பிக்கப்படும் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்படுவார். என அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த ஒப்பந்தத்தின்படி அதனை நிறைவேற்றுவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொறுப்பாகும்.

1994 ஆம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றமைக்கான பாரிய பங்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கே உண்டு. இதனை எவரும் மறுதலிப்பது நியாயமன்று. காத்தான்குடி பிரதேசத்தில் அளிக்கப்பட்ட சுமார் 28,000 வாக்குகளில் முஸ்லிம் காங்கிரஸுக்கு 15,000 வாக்குகள் உரியவையாக இருந்தாலும் இவற்றில் சுமார் 12,000 வாக்குகள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு உரித்தானதாகும். அதேவேளை, எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி பிரதேசத்தில் பெற்றுக் கொண்ட வாக்குகள் சுமார் 13,000 ஆகும்.


எனவே, இந்த வாக்குகளை சரியான ஒப்பீட்டுடன் நோக்கும் போது மட்டு. மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உறுப்பினர் ஒருவர் 21 வருடங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளமைக்கான தார்மீகப் பொறுப்பு நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கே உரியது.

மேலும், எட்டாவது நாடாளுமன்றம் கூடிய போது நாடாளுமன்ற உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க ஒரு விடயத்தைத் தெரிவித்திருந்தார். அதாவது, தேசிய அரசாங்கம் என்ற சொல்லுக்கு பெறுமானத்தைச் சேர்த்துள்ளது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட ஆசனம் ஒன்று மட்டுமே. அந்த ஆசனம் இல்லாவிட்டால் புதிய அரசாங்கத்தை தேசிய அரசாங்கமாக கொள்ள முடியாது எனக் கூறியிருந்தார்.


எனவே, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் காரணமாக அமைந்தாலும் அதன் கால்கோல் அல்லது வழிமூலம் என்பது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியே என்பதனை ஏற்றுக் கொள்வதிலும் கூச்சம் தவிர்க்கப்படல் வேண்டும்.


நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிக் கட்டத்தின் போது காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வின் செல்வாக்கு திடீரென அதிகரித்திருந்த நிலையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பெண்கள் அணி ஒன்றினை அதிரடியாக உருவாக்கி தீவிர பிரசாரங்களிலும் ஈடுபட்டிருந்தது. இதன் அறுவடையும் முஸ்லம் காங்கிரஸுக்கு வாக்கு எண்ணிக்கை பலத்தினை வழங்கியது. காத்தான்குடியைச் சேர்ந்த பெண்கள் 36 பவுண் தங்கத்தை தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் செலவுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு வழங்கிய நிலையில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் தேர்தல் பணிகளுக்கு சுமார் 17 மில்லியன்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செலவிட்டுள்ளது என்ற புறம்பான தகவல்களையும் இங்கு நான் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறேன்.

மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஒப்பந்தம் செய்வதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அது பேசியிருந்தது. மட்டு. மாவட்டத்தில் போட்டியிட முடியும் திருமலையில் போட்டியிட முடியாது என ஐ.தேக தெரிவித்தமையால் அந்தக் கூட்டுச் சாத்தியப்படவில்லை.

பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடத்திய பேச்சுவார்த்தையில் திருமலையில் நீங்கள் போட்டியிடுங்கள். மட்டக்களப்பில் போட்டியிடுவதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் தேர்தலில் தோல்வியுற்றாலும் நாங்கள் உங்களுக்கு தேசியப் பட்டியல் தருவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இருப்பினும் ஏதோ காரணங்களால் அந்தக் கூட்டும் சரி வராத நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கூட்டுச் சேர்ந்தது.


இங்கு ஒரு விடயத்தை நான் வெளிப்படையாக கூற வேண்டும். அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தேரத்லில் தோல்வியுற்றிருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக தேசியப் பட்டியல் எம்.பி ஒருவரை நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு வழங்கியிருக்கும்.அவர்கள் சொல்வதனை செய்யும் தரப்பினர்.


கடந்த மாகாண சபைத் தேர்தலில் வடபுலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இணைந்து போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையிலும் போனஸ் ஆசனம் ஒன்றை அவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


எனவே, இந்த விடயத்தில் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கரிசனை காட்ட வேண்டும். எதிர்காலத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேடமாக, காத்தான்குடி பிரதேசத்தில் தங்களது வாக்கு வங்கியை முஸ்லிம் காங்கிரஸ் உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் உடன்படிக்கையை நிறைவேற்றும் வகையிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு ஒரு தேசியப்பட்டியல் எம்.பியை வழங்குவது நியாயமானது. இஸ்லாமிய அடிப்படையிலும் உடன்படிக்கைகள் மீறப்படக் கூடா

இன்று திருமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியைத் தழுவி உள்ளது. இதற்கு காணரம் கட்சி அல்ல.. கட்சியின் தலைமையும் அல்ல.. தோற்றவர்களே தோல்விக்கு காரணகர்த்தாக்கள். இந்த நிலையில் தோற்றவர் எவருக்கேனும் தேசியப்பட்டியலைக் கொடுத்து இன்றைய தேசிய அரசியலில் நாற்றமடிக்கும் ”“தோற்றுப் போனவர்களுக்கு தேசியப் பட்டியல்” என்ற விவகாரம் முஸ்லிம் காங்கிரஸுக்கும் பொருந்தி விடக் கூடாது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டமால் போனமை (திருமலை) தொடர்பிலும் கைக்கே எட்டாமல் போய் விடும் என நினைத்தது (மட்டக்களப்பு மாவட்டம்) வாய்க்கே எட்டியமை குறித்தும் கட்சியின் தலைமை கருத்தில் கொண்டு செயற்படுவது இன்றைய காலத்தின் முக்கியம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -