எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற தொலை தொடர்பு நிறுவன அதிபர், தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதில் அகதிகளை குடியேற்ற திட்டமிட்டுள்ளார். அத்தீவுக்கு, இறந்த துருக்கி சிறுவன் ‘அயலான்’ பெயரை சூட்டவும் அவர் முடிவு செய்துள்ளார்.
அகதியாக புகலிடம் தேடி, துருக்கி நாட்டு கடலில் மூழ்கி, கோஸ் தீவில் கரை ஒதுங்கிய 3 வயது சிறுவன் அயலானின் புகைப்படத்தினை கண்டு உலகமே கண்ணீர் வடித்தது.
இக்கொடூரத்தை கண்டித்தும், அகதிகளை காக்க வேண்டியும், சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
இச்சம்பவத்திற்கு பின் இரண்டே நாளில் அகதிகளுக்கு தங்கள் நாட்டில் இடம் தர அவுஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகள் முன்வந்தன.
இந்நிலையில் எகிப்தை சேர்ந்த தொலைதொடர்பு நிறுவன அதிபர் நகுய்ப் சாகுரிஸ், கிரீஸ் அல்லது இத்தாலியில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அத்தீவுக்கு அயலான் பெயரை சூட்டவுள்ளார்.
மேலும் அத்தீவில் அகதிகளாக வருவோரை குடியமர்த்தவும் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக தீவு ஒன்றினை விலைக்கு தருமாறும் இருநாடுகளையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்திலும் இதை உறுதி செய்துள்ளார். துருக்கியில் பெரும் பணக்காரரான இவரது சொத்து மதிப்பு சுமார் 2004 கோடி ரூபாய் ஆகும்.


