க.கிஷாந்தன்-
வட்டவளை டெம்பள்ஸ்டோவ் பகுதியில் 13 வயதுடைய தனது இரண்டாவது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சொல்லப்படும் 46 வயதுடைய தந்தை ஒருவரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதவான் பிரசாத் லியனகே உத்திரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தாய்க்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக சிறுமியின் தாய் அவர்களை விட்டு பிரிந்து சென்றுள்ள நிலையில் குறித்த சிறுமி தனது தந்தையின் பாதுகாப்பில் தந்தையுடன் வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சிறுமியின் தந்தை வேறொரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். சிறுமியின் தந்தை தனது மகளை பல தடவைகள் பலாத்காரமான முறையில் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் சிறுமியை பல தடவைகள் தாக்கியுள்ளதாகவும் தந்தையின் இரண்டாவது சட்ட பூர்வமற்ற மனைவி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்தே சந்தேக நபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் பின் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான தந்தையை அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் 09.09.2015 இன்று ஆஜர்ப்படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்திரவிட்டுள்ளார்.
குறித்த சிறுமி பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வட்டவளை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.