வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளாக உள்ள பல்கலைக்கழக பட்டதாரிகள் தமது அரசாங்க நியமனத்தை வலியுறுத்தி இன்றைய தினம்(7) யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றிணையும் மேற்கொண்டிருக்கின்றனர்.
உள்வாரி- வெளிவாரி, தேசிய உயர் தொழில்நுட்ப பட்டதாரிகள் அனைவரும் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய அரசாங்கம் தற்போது ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் தேசிய ரீதியில் காணப்படும் வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகளை புதிய அரசாங்கம் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் வடமாகாண அமைச்சரவையின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆளணி வெற்றிடத்திற்கான அனுமதியை உடனடியாக வழங்கி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளை அரச வேலைவாய்ப்பில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியே எமது போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
மேலும் குறித்த போராட்டத்தின் இறுதியில் வடமாகாண முதலமைச்சர், ஆளுநர் மற்றும் யாழ். அரச அதிபர் ஆகியோரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் போது வடமாகாண அமைச்சர்கள் சந்திப்பதும் மகஜர் கையளிப்பதும் இது தொடர்பில் பேசுவதாக உறுதிமொழி வழங்கி செல்வதை தவிர இதுவரையில் அவர்களுக்கு தீர்வு கொடுத்ததாகவில்லை.


