ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்-
இந்த நாட்டிலே அமைய இருக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினூடாக இன, மத மற்றும் பிரதேச வேறுபாடுகளை கடந்து சேவையாற்ற வேண்டிய கடமை பொறுப்பு என்னுடைய தன் தலைமீது சுமத்தப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு .மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் வினியோகிக்கப்பட்டுள்ள இத்துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளதாவது...
கடந்த 2015 ஆகஸ்ட் 17ஆம் திகதியன்று நடைபெற்ற 8 ஆவது பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு நீங்கள் வழங்கிய அதிகப்படியான விருப்பு வாக்குகளினால் உங்களது பிரதிநிதியாக நான் தெரிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்து அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தோம். அல்ஹம்துலில்லாஹ்.
அந்த அடிப்படையில் இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிட்டுத் தெரிவான ஒரே பாராளுமன்றப் பிரதிநிதி நான் என்பது கட்சியின் கீர்த்தியையும் தனித்துவத்தையும் மேம்படுத்தக் கிடைத்த வாய்ப்பாகும் என்பதை பணிவுடன் குறிப்பிடுகின்றேன்.
எனக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் - முஸ்லிம் சகோதர சமூகங்களுக்கான வெற்றியாகவே நான் கருதுகின்றேன்.
எனவே, இந்த நாட்டிலே அமைய இருக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினூடாக இன, மத மற்றும் பிரதேச வேறுபாடுகளை கடந்து நான் சேவையாற்ற வேண்டிய கடமை பொறுப்பு என்னுடைய தலைமீது சுமத்தப்பட்டிருக்கிறது.
இந்தத் தேர்தல் ஜனநாயகதத்திற்கும் அராஜகத்திற்குமிடையிலான, உண்மைக்கும் பொய்களுக்கமிடையிலான தேர்தலாகவே அமைந்திருந்தது.
காடைத்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, காசுபணத்தை அள்ளி இறைத்து, சோற்றுப்பார்சலை வழங்கி,அரிசியையும் பருப்பையும் கொடுத்து, தேர்தல் முடிவடைவதற்கு முன்னர் காணிதருகிறோம் வீடு தருகிறோம் என்றுகூறி போலியான பதிவுகளைச் செய்து புனித குர்ஆனில் சத்தியம்பெற்று மொத்தத்தில் எமது ஏழைத் தாய்மாரின் வறுமையை முதலீடாகக் கொண்டு வென்றுவடுவதற்கு ஜனநாயக விரோதிகள் முன்னெடுத்த முயற்சிகளுக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் என்னை முதன்மை வேட்பாளராக நிறுத்தி வெற்றிக்காக முழுமையான ஒத்துழைப்பையும் ஆசியையும் பிரார்த்தனையையும் செய்த கட்சியின் தேசிய தலைவர் மரியாதைக்குரிய அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களுக்கும் கட்சியின் வெற்றிக்காக பணியாற்றிய பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான கௌரவ ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களுக்கும் எனக்கு தேர்தல் ஆசிகூறிய மதிப்பிற்குரிய தவிசாளர்; சேகுதாவூத் பஷீர் அவர்களுக்கும் அனைவர் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் குறிப்பாக என்னுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றியை உறுதி செய்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் சக வேட்பாளர்கள் அனைவருக்கும் நான் நன்றி செல்லக் கடமைப்பட்டுள்ளேன். மேலும் எமது வெற்றிக்காக வியூகம் வகுத்து தோளோடு தோள் நின்று அல்லும் பகலும் உழைத்த கட்சிப்போராளிகள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் நிருவாகக் கடமைகளில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
அத்துடன் எனக்கு வாக்களித்த ஏறாவூர், காத்தான்குடி மற்றும் கல்குடாத் தொகுதி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த ஆதரவாளர்களுக்கும் எனது வெற்றியைப் பலமடையச் செய்த மட்டக்களப்பு, பட்டிருப்பு மற்றும் கல்குடா ஆகிய தொகுதிகளில் உள்ள சகோதர தமிழ் இன வாக்காளர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது மேலான நன்றிகளை சமர்ப்பணம் செய்கின்றேன்.
விஷேடமாக எனது வெற்றிக்காக உழைத்த வாலிபத் தோழர்கள் ஏனைய சகோதரர்களுக்கும் உளப்பூர்வ நன்றிகளை உரித்தாக்குகின்றேன். அத்துடன் எனது வெற்றிக்காக முந்தானைகளை ஏந்தி பிரார்த்தனை செய்து விட்டு, சாரை சாரையாக சாவடிகளுக்குச் சென்று வாக்களித்த என் அன்புத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கும் எனது நன்றியினை காணிக்கையாக்குகின்றேன்.
இன்னும் தேர்தல் பிரசார காலத்தில் பல்வேறு வகைகளிலும் எமக்கு உதவி ஒத்தாசை புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் இந்த மண்ணின் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
