முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கடமையாற்றிய பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் செயற்பாட்டு அரசியலிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தபோதே இவர்கள் இந்த தீர்மானத்திற்கு வந்ததாக தெரியவருகிறது.
என்றாலும் தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்து பொதுத் தேர்தலில் போட்டியிட முன்வந்ததையடுத்து, அவருக்கு ஆதரவளிக்கும் முகமாக மீண்டும் இவர்கள் இருவரும் அரசியலுக்குப் பிரவேசித்தனர்.
இருந்த போதும் பொதுத் தேர்தலிலும் அரசாங்கத்தை கைப்பற்ற மஹிந்த ராஜபக்ஷ தவறியதை அடுத்து, இருவரும் தாம் செயற்பாட்டு அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் போட்டியிட்டமைக்கும், எதிர்கட்சித் தலைவர் பதவியை பெற முயற்சித்தமை தொடர்பிலும் இவ்விரு சகோதரர்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எதிர்கட்சித் தலைவர் பதவியை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு வழங்குமாறு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளமை சுட்டிகாட்டத்தக்கது. (நு|ஸ)
