அஸ்ஸலாமு அலைக்கும்,
லாபிர் ஹாஜியார் அவர்களே, உங்களை ஐக்கிய தேசிய கட்சி மாகாண சபை உறுப்பினர் என்கின்ற பார்வையிலும் விட இபாதத்து செய்யும் இஸ்லாமிய உணர்வுள்ள மனிதராகவே நாம் எப்போதும் நோக்கி வருகிறோம்.
உங்கள் மீது வைத்திருக்கின்ற அந்த மரியாதையும் ஜூப்பா, தொப்பி, தாடியுடன் எப்போதும் இருக்கும் உங்கள் பக்குவமான தோற்றம் எமக்குள் ஏற்படுத்துகின்ற கண்ணியமும் என்றும் நிலைத்திருக்க வேண்டுமென்கின்ற அவாவுடனேயே இக் கடிதத்தை எழுதுகின்றேன்.
இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாம் வாக்களிக்க வேண்டிய நபர்கள் குறித்து நீங்கள் முன்னெடுத்திருக்கின்ற பிரச்சாரம் நான் மேலே குறிப்பிட்ட உங்களைப் பற்றிய எண்ணக்கருவை என் போன்ற உங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் சிதைத்து சின்னாப்பின்னமாக்கி விடுமோ என்று பயப்படுகின்றேன்.
அதனாலேயே சில கேள்விகளை உங்களிடம் கேட்டு தெளிவு பெற விரும்புகிறேன். முஸ்லிம் சமூகம் தமது அரசியல் கொள்கைகள் கட்சிகள் என்பனவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தாம் எதிர்நோக்கிய பிரச்சினைகளையும், எதிர்காலத்தில் அவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காதிருப்பதற்கான வழிவகைகளை உருவாக்கிக்கொள்வதற்காகவும் ஒன்றிணைந்துள்ள இச் சந்தர்ப்பத்தில் அதற்கு எதிர்மறையாக சொந்த அரசியலையும் தனிநபர் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்வையும் வெளிப்படுத்துகின்ற விதமாக நீங்கள் நடந்துகொள்வது ஆச்சரியமாகவிருக்கிறது.
எனவே பின்வரும் கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன்.
எமது சமூகப் பிரச்சினைகளுக்கு காரணமாக கருதப்படுகின்ற மஹிந்தவின் கூட்டாளிகளையும் மிகப் பலம் வாய்ந்தவராக இருந்த அவரது சகோதரர் கோத்தாபயவும் வெளிப்படையாக குற்றம் சாட்டும் துணிவுடன் இருந்த ஹக்கீம் போன்ற தலைமைத்துவங்கள் எமக்கு தேவையல்ல என கருதுகின்றீர்களா?
2000 ஆம் ஆண்டு தொட்டு இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் ஏற்பட்ட நமது சமூகத்திற்கு எதிரான அனைத்து இனக் கலவரங்களின் போதும் தாம் சார்ந்திருக்கும் அரசு என்றும் பாராது மிகக் கடுமையாக விமர்சித்தும் அமைச்சுப் பதவியை துச்சம் என்றும் கருதி தூக்கி எறிந்து ஹக்கீம் போராடியது தவறா?
அவ்வாறாக அநியாயம் செய்ய முனைபவர்களை ஆதரிக்கும் அரசுகளை தூக்கி எறியும் சக்தி முஸ்லிம்களிடம் இருக்கிறது என்பதை நிரூபித்த, அதற்கான மக்கள் பலமும் தைரியமும் வாய்ந்த ஹக்கீம் போன்ற அரசியல் வாதிகள் முஸ்லிம் சமூகத்திற்கு தேவையில்லையென்று நீங்கள் நினைக்கின்றீர்களா?
அல்லது பொலீஸ் கட்டுப்பாட்டையும் மீறி அளுத்கமை எரிந்த இரவிலேயே அங்கு ஓடிச் சென்று நடவடிக்கைகள் மேற்கொண்ட ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சரான ஹக்கீம் போன்றவர்கள் இருந்தால் பொதுபலசேனா போன்ற இனவாத இயக்கங்கள் இயங்க முடியாத சூழ்நிலை உருவாகிவிடும் அவ்வாறான நிலை உருவானால் அவற்றை காட்டி அரசியல் செய்ய முடியாத அவல நிலை உங்களுக்கு வந்துவிடும் என்று பயப்படுகின்றீர்களா?
சிறுபான்மை சமூகங்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பறிக்கவும், அடிமைப்படுத்தி ஆளவும் வசதியாக, 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை இல்லாமல் ஆக்கிவிட இரகசியமாக அமைச்சரவை பிரேரணை கொண்டு வரப்பட்ட போது, அமைச்சரவையில் தனி நபராக நின்று அதனை எதிர்த்து குரல் கொடுத்து ஹக்கீம் தடுத்து நிறுத்தியது உங்களுக்கு பிடிக்கவில்லையா?
நாம் அல்லாஹ்வை தொழும் புனித பள்ளிவாயல்களையும் மற்றும் நாட்டில் பரவியுள்ள முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்களை எல்லாம் அரச கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தேவையேற்படும் பொழுதெல்லாம் மூடவும் உடைத்துத் தூளாக்கி அகற்றிவிடவும் சக்தியளிக்கும் நாடு நகர அபிவிருத்திச் சட்டம் போன்றவற்றை அமைச்சரவை அங்கீகரித்திருந்தாலும் நீதிமன்றம் சென்று அதற்கெதிராக போராடி தடுத்து நிறுத்திய சட்ட நுணுக்கமும் திறமையுள்ள ஹக்கீம் பாராளுமன்றம் செல்வது தவறா?
புலிகள் இயக்கம் செய்த அநியாயங்கள் தொடங்கி பொதுபலசேனா நடாத்திய அட்டகாசங்கள் வரை விலாவாரியாக விபரித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை போன்றவர்களிடம் அறிக்கை சமர்ப்பித்து நியாயம் கோருவது முட்டாள் தனமான நடவடிக்கை என்று உங்கள் அறிவு சொல்கிறதா?
சமூகத்தின் உரிமைக்காகவும் அனைத்து சமூகங்களுடனான சக வாழ்வுக்காகவும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் ஆணித்தரமாக பேசக் கூடிய ஆற்றளுடைய ஹக்கீம் போன்றவர்கள் பாராளுமன்றத்தில் நமது சமூகத்தை பிரதிநிதித்துப்படுத்துவது அவசியமற்றது என்று நீங்கள் கருதுகின்றீர்களா?
அறிவு, ஆற்றல், ஆளுமை, அனுபவம், வாதத் திறன், சட்ட நுணுக்கம், மக்கள் பலம் அனைத்துமுள்ள ஹக்கீம் போன்றவர்கள் பாராளுமன்றம் செல்வது பொருத்தமற்றது என்று கருதுவது போல் நீங்கள் நடந்து கொள்கிறீர்கள்.
உங்களைப் போன்ற நல்லவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? உங்கள் பின்னால் இருந்து வேறு யாராவது சாவி கொடுத்து உங்களை இயக்குகிறார்களோ என்கின்ற சந்தேகம் எழுகிறது.
அப்படியானவர்கள் யாராவது இருந்தால் அவர்களின் இலக்கு பலசேனா போன்ற இயக்கங்களின் இலக்காகவே இருக்கலாம். அவ்வாறனவர்கள் உங்களை ஏமாற்றி தமது வலைக்குள் சிக்கவைத்து விமல்வீரவன்ச, கம்மன்பில, தினேஸ் குணவர்தன போன்ற 100 வீத முஸ்லிம்களுக்கு விரோதமான இனவாத அரசியல் செய்பவர்களின் கனவை நனவாக்கும் மஹிந்த சார்பு அரசை கொண்டு வந்துவிட உங்களையும் ஒருவராக பாவிக்கிறார்கள் போலும்.
நீங்கள் உடனடியாக அந்த சதி வலையை அறுத்துக்கொண்டு வெளியில் வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். எமது உரிமைகளுக்காக போராடி வருவது மட்டுமல்லாது, 2000 ஆம் ஆண்டிலும் 2004 ஆம் ஆண்டிலும் சுமார் 20 கோடி ரூபாய்களுக்கு அதிகமான அபிவிருத்திகளை தேசிய மீலாத் விழாக்களை கொண்டாடுவதன் மூலம் கண்டி மாவட்டத்திற்கு ஹக்கீம் கொண்டு வந்ததை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியிலே அவர் இவற்றையெல்லாம் சாதித்தார் என்பது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களான எங்களுக்கும் பெருமையல்லவா..?
பல கோடிக்கணக்கான ரூபாக்களுக்கான உட்கட்ட அபிவிருத்திப் பணிகளும் பாதை மறுசீரமைப்பு பாடசாலை கட்டிடங்களும் அவர் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததால்தான் கண்டி மாவட்டத்திற்கு கிடைத்திருக்கிறது.
துறைமுகம், தபால் துறை, நீதிமன்றங்கள், நீர்பாசன அமைச்சு ஆகியவற்றில் மொத்தமாக பல நூற்றுக்கணக்கான நம் இளைஞர் யுவதிகளுக்கு அவரால் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதையும் நீங்கள் அறிவீர்கள் தானே.
அவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவராக இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் நமது ஐக்கிய தேசியக் கட்சியின் அனுசரணையிலேயே இவற்றையெல்லாம் செய்கிறார் என்பதனால் ஐக்கிய தேசிய கட்சி கண்டி மாவட்டத்தில் பலமடையும் வாய்ப்பு உள்ளதல்லவா?
தேர்தல் மிகவும் நெருங்கிவிட்ட படியால் இக் கடிதத்தில் உள்ள எமது கேள்விக்கான பதில்களை விரைவில் தருவீர்களென ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
நன்றி, வஸ்ஸலாம்,
உங்களை மதிக்கும் - எம். அஷ்ரப் நபவி
4ஆவது ஒழுங்கை, மஹியாவை, கண்டி
