நமது வாக்குரிமை ஒர் அமானிதம்!

முனையூரான் முபாரிஸ்-
ரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை வகிப்பதற்கும், தம்மை நிர்வகிப்பதற்கும் ஒரு தனி நபரைத் தேர்ந்தெடுக்க முடிவெடுக்கும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட செயன்முறை தேர்தல் ஆகும். 

17ம் நூற்றாண்டு தொடங்கி நவீன பிரதிநிதித்துவ மக்கள் ஆட்சியில் இயல்பான ஒரு செயல்பாடாக இத் தேர்தல் முறைமை இருந்து வருகின்றது.

ஜனநாயகத்தின் தூண்களில் தேர்தல் என்பது எவ்வளவு பலம் வாய்ந்ததோ, அதே போன்று வாக்குரிமை என்பதும் பலம் மிக்கதொன்றும், ஒரு பிரஜையின் ஆயுதமும், ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாகவும் விளங்குகின்றது. 

அரசியல் உரிமையில் மிக முக்கிய உரிமையான வாக்குரிமை என்பது ஒவ்வோர் தனிப்பட்ட பிரஜையின் அடிப்படை உரிமையோ அல்லது அடிப்படைக் கடமையோ என்பதற்கப்பால் அது தார்மீக உரிமையும், அமானிதக் கடமையும் என்று சொல்வதே பொருத்தமாகும்.

எதிர்காலத்தை மாற்றமடையச் செய்யும் இவ்வாக்குரிமை ஆயுதத்தை ஜனநாயகத்தித்தின் தோற்றுவாய் என மார்தட்டிக்கொள்ளும் வல்லரசு நாடுகளாயினும் சரி, ஏனைய வளர்முக ஜனநாயக நாடுகளாயினும் சரி யாரும் இதுவரை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பதுதான் இன்றுவரையான உலக வரலாறு ஆகும். 

100 சதவீத மக்களில் 70 சதவீதத்திற்கும் குறைவான மக்களே வாக்கினை பயன்படுத்துகின்றனர். கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கூட அளிக்கப்பட்ட வாக்குகளின் வீதம் வெறும் 61.3% ஆகும். இவ்வாராயின் எவ்வாறு சிறந்த ஆட்சியாளனை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும்? மக்களிள் படித்தவனும் பாமர மகனும் ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? எல்லாமே ஒன்றுதான் என்ற குறுகிய நோக்கில் வாக்குரிமையை அலட்சியம் செய்கின்றனர்.

நாம் அளித்திடும் வாக்குகள் மூலமே முழு சமூகத்தின் மீதான அதிகாரத்தையும் ஒருவரிடமோ அல்லது பலரிடமோ ஒப்படைக்கப்படுகிறது. அகவே நமக்குள்ள வாக்குரிமை என்பது பெரியதோர் அமானிதமாக இருக்கிறது. வேட்பாளர்கள் நாளை அதிகாரிகளாக வந்து அரங்கேற்றும் அனைத்து அடாவடித்தனங்களுக்கும் நாமும் பொறுப்புக் கூற வேண்டும். 

அவர்கள் மேற்கொள்ளும் ஊழல், மோசடிகள் அனைத்திலும் நமக்கும் பங்குள்ளது என்பதை புரிந்து கொண்டே ஒருவரை ஆதரிக்கவோ, வெறுக்கவோ வேண்டும். நாம் தெரிந்துக் கொண்டே தகுதியற்ற ஒருவரை ஆதரிக்கும் பொழுது அவர்களின் நாசகார செயல்கள் குறித்தும், அவர்கள் சமூகத்துக்கு இழைக்கும் அநீதிகள் குறித்தும் நாளை மறுமையில் இறைவன் முன்னிலையில் விசாரிக்கப்படுவோம் என்பது திண்ணம்.

வாக்குகள் மூலம் நம்மீது அதிகாரம் செலுத்த நாமே ஒருவரைத் தெரிவு செய்யப்போகிறோம் என்பதை உணர்ந்து கொண்டு, அதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள் யார்? யார்? என்பதை அலசி ஆராய்ந்து, அனுபவம் மற்றும் அறிவுள்ளவர்கள் பலருடன் கலந்தாலோசனை (மஷூரா) செய்து, நலவை நாடி இறைவனிடம் பிரார்த்தனை (இஸ்திகாரா) செய்துவிட்டு நமது வாக்குரிமைகளைப் பயன்படுத்த முன்வரவேண்டும்.

இன்று அரசியல் என்பது இபாதத் அன்றி இலாபம் கொழிக்கும் தொழிலாக வீறுநடை போடுகின்றது. இதற்குக் காரணம் மக்களிடம் தெளிவான தீர்ப்பு இல்லாததே. இதனை கடந்த கால வரலாறுகளில் இருந்து அறிந்துகொள்ள முடியும். தெளிவான தீர்ப்புக்கு தெளிவான அரசியல் அறிவு அவசியமில்லை. மிகச் சாதாரண சில விடயங்கள் தெரிந்தாலே போதும். 

ஐந்து வருட அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியை நமது விரல் நுனிக்குக் கொடுத்திருக்கிறது ஜனநாயகம். 'என்னை யார் ஆள வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன்’ என்கிற உறுதிமொழியை ஒவ்வொரு வாக்காளரும் தங்களது தீர்க்கமான தீர்மானம் ஆக்கிக்கொள்ள வேண்டும்.

'நம் ஒருவருடைய வாக்கால், எல்லாம் மாறிவிடுமா?’ என்கிற தயக்கமும் நம்மில் பலருக்கு இருக்கிறது. நாம் நினைப்பதையே ஒவ்வொரு அரசியல்வாதியும் நினைத்தால், நம் வீடு தேடி வருவார்களா? என்பதை இந்த நேரத்தில் ஒவ்வொரு வாக்காளரும் உணர வேண்டிய உண்மை. இப்படி எல்லாம் விரட்டி விரட்டிப் பறிக்கப்படும் நம் ஒவ்வொருவரின் வாக்கும் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்கும் என்பதை நாம் உணரவேண்டும். ஒரு வாக்கை விற்பது ஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால், வாக்கைச் சரியாகப் பயன்படுத்தாத நாமும்தான் அதற்கு ஜவாப்தாரி.

நடைபெறவிருக்கும் தேர்தல் பாரளுமன்றத் தேர்தலாக அமைந்துள்ளது. வாக்களிக்கத் தகுதியான அணைத்துப் பிரஜைகளும் வாக்கை வீணாக்காமல், அநீதிக்கு சோரம் போகாமல் சுயமாக சிந்தித்து யார் நம்மை ஆழத் தகுதியுடையவர், சிறந்த ஆட்சியாளர் என்பதை சீர்தூக்கிப்பார்த்து உங்கள் வாக்கைச் செலுத்தி ஆளுமையுள்ள, இறைபக்தியுள்ள, திறந்த மனதோடு சேவையாற்றக்கூடிய மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முயற்சியுங்கள். அரசியல் ஒரு இபாதத் என்ற நிலை மாறி அரசியல் ஒரு சாக்கடை என்று என்னுவோர் மத்தியில் அரசியலில் தர்மத்தை நிலைநாட்டும் கடமை ஒவ்வொரு வாக்காள குடிமகனுக்கும் இருக்கிறது என்பதனை உணர்த்துங்கள்.

வாக்குரிமை என்பது "சாட்சியமாகும்",
வாக்குரிமை என்பது "தெரிவாகும்,
வாக்குரிமை என்பது "ஆயுதமாகும்",
வாக்குரிமை என்பது "தீர்ப்பாகும்,
வாக்குரிமை என்பது "வகிபாகமாகும்,
வாக்குரிமை என்பது "துணைபோதல்" ஆகும்,
ஆக மொத்தத்தில் வாக்குரிமை என்பது "அமானிதமாகும்"

“நம் விரலில் வைக்கப்படும் ஒரு துளி மையால், சமூக அழுக்கை நிச்சயம் சலவை செய்துவிட முடியும், அதை நாம் நியாயமாகப் பயன்படுத்தும் பட்சத்தில்..."
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -