நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவமும், கட்சியும் எதிர்கொண்ட சவால்களை முறியடித்து வெற்றி பெறுவதற்கும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அமைவதற்கும் ஒத்துழைத்த அனைத்து வாக்காளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கட்சியின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் தனிப்பெரும் சக்தியாக தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை தக்க வைத்துக் கொள்வதற்கும், அந்த மாவட்டத்தில் ஏக பிரதிநிதியாக அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு ஏனைய சில்லறை கட்சிகளைத் துடைத்தெறிந்து எமது கட்சியை மாத்திரமே அங்கீகரித்த வாக்காள பெருமக்களுக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.
இரு முனைத் தாக்குதலுக்கும், குத்துவெட்டு – குழிபறிப்புகளுக்கும் நாம் முகம்கொடுக்க நேர்ந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை எமது கட்சியின் மரச் சின்னத்தில் வெற்றிபெறச் செய்ய உதவிய அந்த மாவட்ட வாக்காளர்களையும், ஆதரவாளர்களையும் நாம் பெரிதும் மதிக்கிறோம்.
முன்னெப்போதும் இல்லாதவாறு இந்தத் தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடாத்துவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தேர்தல் ஆணையாளர் மற்றும் அவரது திணைக்கள உயர் அதிகாரிகள் உட்பட ஊழியர்கள், நாடளாவிய ரீதியில் பணியாற்றிய அரச அலுவலர்கள், முப்படையினர், பொலிஸார் ஆகியோருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம், தேர்தல் வெற்றி தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையை நிறைவேற்றி, துஆ பிராரத்;தனையில் ஈடுபட்டபோது....



