![]() |
பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (14) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
|
எதிர்வரும் 17ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
இதன்படி, இந்தக் காலம் அமைதியான காலம் என அழைக்கப்படுகின்றது. இந்தக் காலத்தில் வாக்காளர்கள் சுயாதீனமாக முடிவு எடுக்கக் கூடிய வகையில் வேட்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கட்சிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, வேட்பாளர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவாக போதி பூஜைகள், தர்ம உரைகள் உள்ளிட்ட மத நிகழ்வுகளை இந்த இரண்டு நாட்களிலும் மேற்கொள்ள தேர்தல் ஆணையாளர் தடை விதித்துள்ளார்.
கையடக்கத் பேசிகளின் ஊடாக குறுஞ்செய்திகளை அனுப்பி பிரச்சாரம் செய்தல் இணைய வழியிலான பிரச்சாரம் ஆகியனவும் தடை செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் அல்லது கட்சி தொடர்பில் செய்தி அல்லது விளம்பரங்களை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடங்களில் பிரசுரிப்பதும், ஒளி, ஒலிபரப்புச் செய்வதும் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது என மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இதேவேளை எமது இம்போட் மிரர் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள அனைத்து தேர்தல் விளம்பரங்களும் இன்று நள்ளிரவுடன் அகற்றப்படும் என ஊடக நிறைவேற்றுப்பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
