முஸ்லிம்களின் தளபதியாகப் பார்க்கப்பட்ட அக்கரைப்பற்று றாபி! (SLMC கட்சியின் வரலாற்றுப் பதிவுகள்)

அரூஸ்-

(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் எழுதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றுப் பதிவுகள் தொடர்பான அரசியல் யுகம் கண்ட உண்மைகள் தொடர் கட்டுரையின் ஒரு பதிவிலிருந்து  வாசகர்களுக்காக.........

கிழக்கில் முற்போக்கு இளைஞர்களை கொண்டு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த விடயம் தமிழ் இயக்க, இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிந்த படியினால் குறிப்பாக தமிழ் இயக்கங்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி விட்டது.

றாபி அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இருந்த பொழுது அவரது இயக்கப் பெயர் டெனிஸ்.

இயக்கத்தில் இருந்த போது பல இராணுவ கெரில்லா போராட்டம் சம்பந்தமாக பல அறிவைப் பெற்றிருந்தார். சர்வதேச தொடர்புகளையும் வைத்திருந்தார். இதனால் அவர் இயக்கத்தை விட்டு வெளியேறி புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கும் போது அது பெரும் இயக்கமாக மாறிவிடும் என்ற அச்சம் நிலவியது.

எனவே, அவரை கூட்டத்திற்கு முன்பு கொல்ல வேண்டும் என்ற திட்டம் அன்றிருந்த கெரில்லா இயக்கங்களால் திட்டமிடப்பட்டன. இவரை இலகுவில் கொல்ல முடியாது என்பதும் இவர்களுக்குத் தெரியும்.

இருந்தும் பல மாதங்களாக இவரின் நடமாட்டங்களை கண்டறிய குழுக்களை நியமித்து அவருடைய பாதுகாப்புக்காக இருந்த தோழர்கள் குறைவாக இருக்கின்ற தறுவாயில் அவரை கொல்ல திட்டமிட்டு- பல கொல்ல முயற்சித்தனர். அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அதிஷ்ட வசமாக உயிர் தப்பியிருந்தார்.

இருந்தும் அதிர்ச்சியளிக்கக் கூடிய நாளாக் 1986-4-17 ஆம் திகதி இருந்தது. ஏனெனில் றாபி அவர்கள் இந்த தினம் இஷாத் தொழுகைக்குப் பின்பு அவரது அக்கரைப்பற்று மத்திய கல்லூரி வீதியிலுள்ள Z.M. இப்றாஹிம் (ஐயோ) அவருடைய வீட்டு வளவில் கதைத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் திடீரென்று உட்புகுந்து தாறுமாறாக றாபி மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். துரதிஷ்டவசமாக இத்துப்பாக்கிச் சூட்டினால் றாபியின் உயிர் பிரிந்தது.

இந்தச் செய்தி காட்டுத் தீ போல் வட கிழக்கு முழுவதும் பரவியது. முஸ்லிம் இளைஞர்கள் கொதித்தெழுந்தனர். அவர்கள் நம்பிய ஒரு தளபதி கொல்லப்பட்டது பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

கிழக்கு பூராகவும் இருந்து றாபியின் வீட்டை நோக்கி படையெடுத்தனர். அடுத்த நாள் காலை என நினைக்கின்றேன், கிழக்கிலுள்ள முஸ்லிம் பகுதிகளில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. எங்கும் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டன.

அதில் முக்கியமாக அவரது மையத்தை பார்வையிட கிழக்கிலிருந்து பல்லாயிரம் மக்கள் படை படையாக வாகனங்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும், கால் நடையாகவும் படையெடுத்ததை நான் கண்ட போது, அவர் மீது முஸ்லீம்கள் வைத்திருந்த நம்பிக்கையை அப்போது என்னால் உணர முடிந்தது.

நாட்டின் தலைவர் ஒருவர் மரணித்தால் எவ்வாறு மக்கள் படையெடுப்பார்களோ, அது போன்று தான் றாபியின் மையத்திற்கு மக்கள் ஒன்று கூடினர்.

எனவே, அந்த சம்பவத்திற்குப் பின்பு முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் றாபி இல்லாத சூழ்நிலையில் ஒரு பலமான தலைமை பற்றிய தேடல் ஆரம்பித்தது. இந்தக் கட்டத்தில் தான் அஷ்ரஃப் அவர்களும் றாபியின் மரணத்தில் கவலை கொண்டு தம் மீது சுமை அதிகரிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து ஊர் வாரியாக மற்றும் சிறு சிறு அமைப்பு ரீதியாக பிரிந்து கிடந்த முஸ்லிம் இளைஞர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற றாபியின் திட்டத்தை தன் தலையில் சுமந்து உடனடியாக களத்தில் இறங்கி மு.கா வை முஸ்லிம் இளைஞர்களின் விடுதலை இயக்கமாக, அரசியல் இயக்கமாக பிரகடனப்படுத்த வேண்டிய கட்டத்துக்கு தன்னை நகர்திக் கொண்டார்.

இதில் ஏற்கனவே தலைவர் அவர்கள் சித்திரா லேனில் அகதியாக இருந்த போது தலைவருடன் ஏற்கனவே மு.கா விடயமாக பணியாற்றியவர்களுடன் தீவிர கலந்தாலோசனையில் ஈடுபடத் தொடங்கினார். முக்கியமாக ஹஸனலி அவர்கள்.

இவர் 85 காலப்பகுதியில் சவூதியில் பெரிய நிறுவனம் ஒன்றில் தொழில் செய்து கொண்டிருந்து விட்டு நாடு திரும்பியதும் தலைவரின் சமூக அக்கறையைக் கண்டு அம்மன் கோயில் வீதியில் தலைவரை சந்தித்து அவரும் ஆக்கிடெக் இஸ்மாயிலும் சேர்ந்து மு.கா வில் இணைந்து கொண்டனர்.

அதே போன்று கட்சியின் மூத்த துணைத் தலைவர் அப்துல் மஜத் அவர்கள் தலைவர் அம்மன் கோயில் வீதியில் இருக்கும் காலத்தில் அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டவர். பின்னர் தலைவர் கொழும்பு சென்ற பின்னர் கடிதப் பரிமாற்றங்களை பேணி வந்தார்.

எனவே, தெடர்பிலிருந்த அனைவரையும் தலைவர் ஞாபகப்படுத்திக் கொண்டு குறிப்பாக சித்திரா லேனில் இவர்களுடன் கட்சி வேலையில் ஈடுபடத் தொடங்கினார். இந்த வேளையில் விசேடமாக இன்னும் சிலரையும் குறிப்பிடலாம்.

றவூப் ஹகீம் அவர்கள்
********************
தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள், 1985 காலப்பகுதியில் சட்டக்கல்லூரியில் சித்தியடைந்து கனிஷ்ட சட்டத்தரணியாக பாயிஸ் முஸ்தபாவுடைய அலுவலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தார்.

அந்த கால கட்டத்தில் தலைவர் அஷ்ரஃப் அவர்கள் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் அலுவலகத்தில் அவரும் சட்டத் தொழிலை ஆரம்பிக்க முதல் நாள் வந்த போது றவூப் ஹக்கீமை தலைவர் அஷ;ரபுக்கு பாயிஸ் முஸ்தபா அறிமுகப்படுத்தினார்.

இதன் பின்பு இருவருக்கும் இடையில் ஆழமான நட்பு மலர்கின்றது. பின்பு தலைவர் அஷ்ரஃப், ஹக்கீமிடம் மு.கா விடயங்கள் பற்றி பேசத் தொடங்கினார்.

தலைவர் அஷ்ரபின் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்ட ஹக்கீம் அவர்கள், தலைவரின் கட்சியை உருவாக்குவது தொர்பான நடவடிக்கையில் நெருங்கி வேலை செய்யத் தொடங்கினார். குறிப்பாக வடக்கு, கிழக்குக்கு வெளியே கொழும்பு, கண்டி பகுதிகளிலுள்ள சிரேஷ;ட அரசியல்வாதிகள், வர்த்தகர்களை அறிமுகப்படுத்தி அவர்களை கட்சியில் இணைக்க ஹக்கீம் காரணமாக இருந்தார்.

அத்துடன் வர்த்தகர்களிடமிருந்து கட்சிக்கு நிதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் காரணமாக இருந்தார்.

குறிப்பாக தலைவர் அஷ்ரஃப் 1986 பகுதியில் மு.கா வை அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தும் கூட்டத்தை கூட்டும் வரை ஹக்கீம் அவர்கள் கடுமையாக பாடுபட்டார்.

எனினும் றவூப் ஹக்கீம் அவர்களுக்கு இங்கிலாந்தில் சொலிசிட்டல் சட்டத்தரணி மேற்படிப்பிற்காககச் செல்ல அனுமதி கிடைத்தது. இது ஒரு வருட கால மேற்படிப்பு. இது பெரும் சங்கடத்தை ஹக்கீமுக்கு ஏற்படுத்தியது. இக்கால கட்டத்தில் அஷ்ரபை விட்டு விட்டு மேற்படிப்பிற்காக இங்கிலாந்து செல்வதா அல்லது கூட இருந்து கட்சி நடவடிக்கையில் ஈடுபடுவதா என மனம் அங்கலாய்த போது இது விடயமாக தலைவர் அஷ்ரபுடன் உரையாடினார்.

இதற்கு தலைவர் அஷ்ரஃப் அவர்கள் இது மிகவும் மகிழ்சியான விடயம், நீங்கள் மேற் படிப்பிற்காக இங்கிலாந்து செல்லுங்கள் எனக்கூறி வழியனுப்பி வைத்தார்.

எனினும், இங்கு மாநாடு நடைபெறும் வேளை தலைவர் அஷ;ரபுடன் தொடர்பு கொண்டு மாநாடு வெற்றி பெற பூரண ஒத்துழைப்பை வழங்கினார். இது அஷ;ரபிற்கு ஹக்கீம் மீது மதிப்பை ஏற்படுத்தியது.

மேலும் இதில் இன்னுமொருவரைக் கூற வேண்டும்.

1985 இன் இறுதிக் காலப்பகுதியில் சட்டக் கல்லூரியில் சித்தியடைந்து வெளியேறியிருந்தார் சேகு இஸ்ஸதீன். இந்தக் காலத்தில் அவர் தலைவர் அஷ;ரபை சந்தித்ததன் மூலம் அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. இதன் பிறகு தலைவர் அஷ;ரபின் கனிஷ்ட சட்டத்தரணியாக இணைந்து செயற்பட்டார்.

இவருடனும் கட்சியின் பிரகடனம் பற்றி தலைவர் விளங்கப்படுத்தினார். இதனால் இஸ்ஸதீன் தலைவரின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு 85 இறுதிப் பகுதிகளில் கட்சியில் இணைகின்றார்.

எனவே, இவ்வாறு இவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று 1986-11-29 மு.கா வை அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தும் மாநாட்டை தெமடகொடவிலுள்ள பாஸாவிலாவில் செய்யும் நடவடிக்கையில் இறங்கினார். இது ஊடகங்கள் மூலமாக நாடு பூராகவும் தெரியவந்தவுடன் இளைஞர்கள், மக்கள் மத்தியில் தலைவர் அஷ்ரஃப் மீது நம்பிக்கை ஏற்பட்டது.

மாநாட்டை கூட்டுவதற்கான நடவடிக்கையில் இஸ்ஸதீன், ஹஸனலி, மருதூர்க்கனி, சறூக் காரியப்பர், சட்டத்தரணி கபூர், கல்முனை நிசார் லோயர், சுஹைர் சட்டத்தரணி, எழுச்சிக்குரல் ஆசிரியர் எம்.பி.எம் அஸ்ஹர் போன்றோர் தலைவருக்கு பக்கபலமாக இருந்ததால் கட்சியை அரசியல் இயக்கமாக பிரகடனப்படுத்த வேண்டும் என தவைர் அஷ்ரஃப் முடிவு செய்கின்றார். இதற்கமைய 1986-11-29 மு.கா வின் 6வது மாநாடு வெற்றிகரமாக நிறைவு பெற ஒத்துழைத்ததுடன் மு.கா வும் அரசியல் கட்சியாக இந்த 6வது மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதில் தலைவராக அஷ்ரபும், செயலாளராக சட்டத்தரணி கபூர் அவர்களும் பிரதித் தலைவர்களாக கலாநிதி காலிதீன், சறூக் காரியப்பர், பரீத் மௌலவி (கிண்ணியா), கொள்கை பரப்புச் செயலாளராக மருதூர்க்கனி, கனிஷ்ட கொள்கை பரப்புச் செயலாளராக மூத்த துணைத்தலைவர் (தற்போது) அப்துல் மஜீத் என இன்னும் பலர் வேறு பதவிகளுக்கும் தெரிவு செய்யப்பட்டனர்.

உண்மையில் முஸ்லிம்களின் வரலாற்றில் 86 கால கட்டம் முக்கியமாக மாறியது. ஏனெனில் இந்திய அரசு அப்போது இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து தீர்வு திட்டத்தை முன் வைத்து அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற கடும் முயற்சி செய்த காலகட்டம் அது.

இது சம்பந்தமாக இந்திய பிரதமர் ராஜிவின் விசேட தூதவர் ஜி.பார்த்த சாரதி இலங்கைக்கு அடிக்கடி வந்து ஜே.ஆர் மற்றும் தமிழ் கூட்டணி தலைவர்களை சந்தித்து பேச்சு நடாத்தி மீண்டும் இவர்களை பெங்களுருக்கு அழைத்து இந்திய அரசு 19 திட்டங்களை முன்வைத்தது.

வட கிழக்கு அதிகாரப் பரவலாக்கம், மாகாண சபை முறைமை போன்ற திட்டங்களை முதன் முதலாக வெளியிட்டது இந்திய அரசு. ஆனால், துரதிஷ்டவசமாக இந்திய பிரதிநிதிகள் அன்றிருந்த முஸ்லிம் எம்.பி களுடன் பேசவில்லை. இது தலைவருக்கு பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

எனவே, தலைவர் அஷ;ரப் அன்றிருந்த இந்திய தூதுவர் டிக்சித்தை சந்தித்து முஸ்லிம்களின் அரசியல் உரிமை, அவர்களுக்காக தனியான நிர்வாகக் கட்டமைப்பின் அவசியத்தை முன் வைத்தார்.

ஆனால், டிக்சித் இதற்கு சாதகமாக பதிலளிக்காமல் கிழக்கு முஸ்லிம்கள் சம்பந்தமாக நாங்கள் ஜனாதிபதி ஜே.ஆர் உடன் பேசித்தான் தீர்வுக்கு வர முடியும். எனவே, ஐ.தே.க வில்தான் முஸ்லிம் எம்.பி க்கள் உள்ளனர். அவர்களின் கருத்தைத் தான் கேட்போம் என்று மறைமுகமாக நீங்கள் மக்கள் பிரதிநிதி அல்ல என்று நாசுக்காக சுட்டிக்காட்டி டிக்சித் தனது நரி மூளையை தலைவரிடம் காட்டி நழுவினார்.

இருந்தும் தலைவர் அவர்கள் தனக்கு நேர்ந்த அவமானத்தை கருத்தில் எடுக்காமல் முஸ்லிம் சமூகத்தை இந்த பேரழிவிலிருந்தும், டிக்சித்தின் நயவஞ்சகத்திலிருந்தும் காப்பாற்ற ஜே.ஆரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கேட்டார்.

ஆனால், இன்னுமொரு நரி மூளையரான ஜே.ஆர், தலைவர் அஷ;ரபை சந்திக்க மறுத்து விட்டு முஸ்லிம்களின் பிரச்;சினை சம்பந்தமாக கிழக்கு முஸ்லிம் எம்.பிக்களுடன் பேசிக் கொள்வேன், உங்களுடன் பேசத் தயாரில்லை என்ற செய்தியை அனுப்பியிருந்தார்.

இதனால் இந்த டிக்சித்- ஜே.ஆர் ஆகியோர் முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சித்திட்டத்தை மக்களுக்கு தெரியப்படுத்த பத்திரிகையாளர் மாநாட்டை 1986 இறுதிப்பகுதியில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்தார்.

இதனை அறிந்த ஜே.ஆர்- அன்றிருந்த அமைச்சர் எம்.எச் முஹம்மட் மற்றும் கிழக்கின் 5 முஸ்லிம் எம்.பிக்களும் சேர்ந்து இம் மாநாடு நடந்தால் அரசுக்கு முஸ்லிம்கள் மத்தியில் எதிர்ப்பு வரும் என்று அஞ்சி தலைவர் புக் பண்ணிய இடத்துக்கு வழங்கிய அனுமதியை இரத்துச் செய்து மாநாட்டை குழப்புவதற்கு முயற்சி எடுத்தனர். இடத்தையும் இரத்துச் செய்து விட்டனர்.

இருந்தும் தலைவர் சளைக்காமல் கொழும்பு 01இல் உள்ள சிலிங்கோ டவரிலுள்ள ரெஸ்டூரன்ட் ஆகாஸ கடையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் தலைவருடன் அந்த நேரம் கனிஷ;ட சட்டத்தரணியாக இருந்த தற்போதைய கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் உட்பட இன்னும் சிலரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு ஊடாக இலங்கை- இந்திய அரசின் தீர்வுத்திட்டத்தில், முஸ்லிம்களின் தீர்வு சம்பந்தமாக எதுவும் இல்லை என்பதை நாட்டு முஸ்லிம்களுக்கு அறிவித்திருந்தார்.

இதன் பின்னர் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் கண் விழித்தனர். அன்றைய கிழக்கின் 5 முஸ்லிம் எம்.பிக்களுக்கும் இளைஞர்கள், பள்ளி சம்மேளனங்கள்- முஸ்லிம்களுக்கான தனியான நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தும் அழுத்தத்தை கொடுத்தனர்.

தலைவரும் தனது சட்டத் தொழிலை தூக்கி எறிந்து விட்டு குறிப்பாக கிழக்கு பூராகவும் முஸ்லிம்களுக்கு வரப்போகும் ஆபத்து பற்றி கிழக்கு பகுதிகளுக்கு சென்று கூறத் தொடங்கினார்.

இதனை அறிந்த இலங்கை- இந்திய அரசு தலைவரை கொல்லத் திட்டம் போட்டது. இலங்கை அரசு அன்றைய மொசாட் உளவுப்பிரிவை ஏவியது.

இந்திய அரசு, அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எப், விடுதலைப்புலிகள், ஈரோஸ் போன்ற அமைப்புக்கள் ஊடாக தலைவரை கொல்ல சதித்திட்டம் தீட்டியது. அன்று தலைவருக்கு பொலிஸ், சட்ட ரீதியான ஆயுதங்களோ வழங்கப்பட்டிருக்கவில்லை.

பொலிஸ் பாதுகாப்பை கோரியபோது நீங்கள் பதிவு செய்யப்பட்ட கட்சியின் தலைவர் அல்ல என்ற பதிலை ஜே.ஆர் அரசு அனுப்பியது.

இவ்வாறு உயிருக்கான அச்சுறுத்தல் ஒரு பக்கம் அதேநேரம் கட்சியை நடாத்த அலுவலகத்தை அமைக்க பொருளாதார பிரச்சினை மறுபக்கம் என கடும் நெருக்கடியினை தலைவர் சந்தித்திருந்தார்.

இருந்தும் தலைவர் சளைக்காமல் கொழும்பில் அவரது தமிழ் நண்பரான சட்டத்தரணி தவநேசனுக்குச் சொந்தமான டாம் வீதி கட்டிடத்தின் 4ஆம் மாடியில் ஒரு சிறிய இடத்தை எடுத்தார். அதில் தளபாடம் வாங்கக்கூட தலைவரிடம் பணம் இருக்கவில்லை.

ஒரு மேசையும், கதிரையும் மட்டுமே வாங்கப்பட்டது. ஏனைய கட்சி முக்கியஸ்தர்கள் பாயை விரித்துக் கொண்டும், பேப்பரை போட்டுக் கொண்டும் அமர்ந்து இருந்தார்கள். இது உண்மை. அன்றிருந்தோர் இதனை நன்கு அறிவர்.

சட்டத் தொழிலுக்கும் போகாததால் கடுமையாக கஷ்டப்பட்டார். குடும்பம், வீட்டு வாடகை என்று கடும் நெருக்கடியை தலைவர் அனுபவித்ததை நான் நன்கு அறிவேன்.

இருந்தும் தலைவர் சளைக்கவில்லை. இவ்வாறு ஒரு வகையாக கொழும்பில் அலுவலகத்தை அமைத்து அதில் பணிபுரிய இஸ்ஸதீன்,மருதூர்க்கனி, ஹசனலி என இன்னும் பலரை அமர்த்தி விட்டு அவர் கிழக்கின் மூலை முடுக்கெல்லாம் சென்று தீர்வுத் திட்டம் குறித்த அச்சத்தை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி வந்தார்.

எனக்கு ஞாபகம். நான் பாடசாலை மாணவன். எனது மூத்த சகோதரிக்கு 1986 நடுப்பகுதியில் திருமணம் முடிந்து எனது மச்சான் கலாநிதி அன்ஸார், சகோதரர் அமீர் அலியுடன் நானும் கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி காரில் சென்று கொண்டிருந்த வேளை பதியதலாவையில் தேனீர் அருந்துவதற்காக காரை நிறுத்திய போது அங்கு இ.போ.ச வண்டியின் உள்ளே தலைவர் இருப்பதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம். நானும், சகோதரரும் தலைவரை கண்டு உடன் இறங்கிய போது அவரும் எங்களைக் கண்டு இறங்கி வந்தார்.

அப்போது எங்கே போகிறீர்கள் என்று தலைவர் அமீர் அலி காக்காவிடம் கேட்டார். ஸேர், நாங்கள் கொழும்புக்கு மச்சானைக் கூட்டிச் செல்கின்றோம் என்றார்.

நீங்கள் எங்கே போகின்றீர்கள் ஸேர் என்று கேட்டார் அமீர் அலி காக்கா.

நாளை காத்தான்குடியில் கூட்டம் ஒன்று இருக்கின்றது. கல்முனை சென்று அங்கிருந்து காத்தான்குடி போவேன் என்றார் தலைவர்.

அப்போது அமீர் அலி காக்கா, ஏன் காரில் வராமல் பஸ்ஸில் வருகின்றீர்கள் என்று கேட்டார்.

இல்லை அமீர்அலி கட்சி நடவடிக்கையை தீவிரப்படுத்த காசு இல்லாததால் காரை விற்றுவிட்டேன். அதனால் தான் நெடுந்தூரப் பயணங்களை இ.போ.ச பஸ்களில் சென்று உள்ளுரில் நண்பர்களின் கார்களை பயன்படுத்துகின்றேன் என்றார் தலைவர்.

இது எங்களுக்கு மிக கவலையை ஏற்படுத்தியது.

அவர் அம்மன் கோயில் வீதியில் இருந்த போது சந்தோசமாக இருந்ததை நாங்கள் கண்களால் கண்டிருக்கின்றோம். இப்போது இந்த சமூகத்திற்காக தனது வசதி வாய்ப்பை எல்லாம் இழந்து உடைந்த இ.போ.ச பஸ்களில் சென்று அஷ்ரஃப் கஷ்டப்படுகிறாரே என்று மனம் வேதனைப்பட்டது.

இனிமேல் நீங்கள் கல்முனை வருவதென்றால் எனக்கு அறிவியுங்கள். என்ன வேலை இருந்தாலும் விட்டு விட்டு எனது காரை எடுத்துக் கொண்டு கொழும்பு வந்து உங்களை அழைத்து வருகிறேன் என்று அமீர் அலி காக்கா கூறினார். இதன் பின் நாங்கள் கொழும்பு சென்றோம்.

இவ்வாறு தலைவர் தீர்வுத் திட்டம் தொடர்பாக ஒரு பக்கம் செயற்பட்டுக் கொண்டிருக்க மறுபக்கம், முஸ்லிம் இளைஞர்களும், பள்ளிச் சம்மேளனங்களும் 5 முஸ்லிம் எம்.பி களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இந்த அழுத்தம் காரணமாக 5 முஸ்லிம் எம்.பி களும் ஜே.ஆரை சந்திக்க தீர்மானித்தனர்.

அவர்களுக்கு ஜே.ஆரால் நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. ஜே.ஆரின் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற போது, ஜே.ஆர்-இவர்களுக்கு முன்பாக கூறிய வார்த்தைகள் பெரும் அதிர்ச்சியை கொடுத்தன.

அந்த அதிர்ச்சி வார்த்தைகளும் அந்தக் கூட்டத்தின் முடிவுகளும் என்ன என்பதை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -