ஏனைய இனத்தவர்களோடு முரண்படும் அவசியம் எமக்கு இல்லை- அமைச்சர் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை கட்டியெழும்பும் வகையில் இணக்க அரசியலிலேயே ஈடுபட்டு வருகிறது. ஏனைய இனத்தவர்களோடு முரண்பட்டுக் கொண்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் முஸ்லிம் காங்கிரஸுக்கு இல்லை. குறிப்பாக தமிழ் மக்களையும் அரவணைத்துக் கொண்டு உரிமைகளுக்காகப் போராடுவதே எமது நோக்கமாகும்.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வன்னி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் திங்கள்கிழமை (20) உரையாற்றும் போது தெரிவித்தார்.

சூராவளி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் ஹக்கீம் அன்றைய தினம் வன்னி மாவட்டத்தில் காக்கையன்குளம், பெரியமடு, அடம்பன், உப்புக்குளம், புதுக்குடியிருப்பு, எருக்கலம்பிட்டி ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,


இடம்பெயர்ந்த வாக்காளர்களில் அநேகர் தமது சொந்த ஊர்களில் பதிவதற்கு கட்டுபாடுகள் இருந்த காரணத்தினால் புத்தளம் மாவட்டத்தில் தங்களது பெயர்களை பதிந்து விட்டனர். பலர் விரக்கியோடு விலகி இருந்த விட்டார்கள். இவ்வாறான காரணங்களிகனால் வன்னியின் கணிசமான வாக்கார்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாது மிகவும் துரதிரஷ்டமானது. 

இந்தக் கட்சியை கருவறுக்க முற்பட்டுள்ளவர் இருக்கின்ற வன்னி மாவட்ட ஐ.தே.கட்சிப் பட்டியலில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் இடம்பெறுவதை கட்சிப் போராளிகள் ஜீரணித்துக்கொள்ள மாட்டார்கள். எனவே நாம் வன்னியில் தனித்துப் போட்டியிட முன்வந்தோம். எந்தக் காரணம் கொண்டும் அந்த ஆசாமி இருக்கின்ற பட்டியலில் எமது வேட்பாளர்களின் பெயர் இடம்பெற்றுவிடக் கூடாதென்பதில் எமது போராளிகள் முனைப்பாக இருந்தார்கள். முஸ்லிம் காங்கிரஸிக்கு முதலில் 1989ஆம் ஆண்டில் வன்னியில் ஆசனம் கிடைத்ததோடு நீண்டகாலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இருந்து வந்திருக்கின்றது. 

ஆகக்கூடினால் 15 ஆயிரம் வாக்ககளை தன்னிடம் வைத்துக் கொண்டு அதைவிட பல மடங்கு அதிகமான வாக்கு வங்கியை கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸின் மீது அட்டூழியங்களையும், அட்டகாசங்களையும் கட்டவிழ்த்து விட்டு வன்னி ஆசாமி படுத்தகின்றபாடு சொல்லி மாளாது. 

பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை 5வீத வெட்டுப் புள்ளியை எட்டுவதற்கு 15 ஆயிரம் வாக்ககளையாவது எமது கட்சி பெற வேண்டும் என்ற அச்சமும் சிலரிடம் காணப்பட்டது. வன்னிக்கு ஒரு பாராளுமன்ற ஆசனத்தை வென்றெடுங்கள். அல்லாவிட்டால் கட்சியின் கண்ணியத்தை காப்பாற்றுவதற்காக 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறமுடியுமானால் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை முஸ்லிம் காங்கிரஸ் வழங்கி கௌரவிக்கும்.

பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இந்தத் தேர்தலோடு அஸ்தமனமாகி விடும் நிலைமை காணப்படுகின்றது. இந்தத் தேர்தலில் அத்தாவுல்லாஹ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அறவே கிடையாது. மஹிந்த வேட்பாளராக வந்ததோடு அவரது அணியிலே இருக்கும் அத்தாவுல்லாஹ்வின் கதை முடிந்து விட்டது. இந்தப் பிரதேசத்து ஜாம்பவான் மட்டக்களப்பில் குத்தகைக்கு எடுத்திருக்கின்ற அமீர் அலியைப் பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸ் அங்கு வகுத்துள்ள வியூகத்தின் பயனாக அவரது ஆசனமும் அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. வெற்றிலையில் போட்டியிட்டு, மஹிந்தவிற்கு சாமரம் வீசும் ஹிஸ்புல்லாவுக்கும் ஆசனம் இல்லாமல் போய்விடும். ஏனென்றால், மஹிந்தவிற்கு பக்கவாத்தியம் வாசிப்பவர்களை முஸ்லிம் மக்கள் ஒரு போதும் அங்கீகரிக்கமாட்டார்கள். மேற்சொன்னவர்கள் எல்லோரும் இப்பொழுதே தோல்வியின் விளிம்பில் இருக்கின்றார்கள். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்பொழுது முஸ்லிம் காங்கிரஸுக்கு மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்தபடியான ஆசனம் அங்கு நிச்சயிக்கப்பட்டு விட்டது. அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சியில் போட்டியிடும் நிலையில் அங்கு குறைந்த பட்சம் மூன்று ஆசனங்களை வெல்லுவது மட்டுமல்ல, எமது அரசியல் கூட்டு அந்த மாவட்டத்தையும் வெற்றி கொள்ளும்.

வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் சுத்தமான, கலப்பற்ற வாக்கு வங்கியை நம்பி எமத வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் குதித்திருக்கிறார்கள். மரச் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் இந்தப் போராட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். கட்சியின் கீதங்கள் இசைக்கப்படுகின்ற போதெல்லாம் அவை கட்சிப் போராளிகளுக்கு ஒரு விதமான உந்ததலையம், உற்சாகத்தைம் ஊட்டுகின்றது. சந்தேகங்களைக் கலைந்து உறுதியாக ஓர் ஆசனத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இந்த தேர்தல் மாவட்டத்தில் வாழும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. 

முஸ்லிம் காங்கிரஸின் பிந்திய போராட்டமாக இருந்தது 20ஆவது அரசியலமைப்புத் தேர்தல் திருத்தமாகும். அமைச்சரவையில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த ஆபத்தான திருத்தத்தை வரிந்து கட்டிக்கொண்டு எதிர்ததன் மூலம் ஜனாதிபதியே அதிர்ந்து போய்விட்டார்! நான் தெளிவாக ஜனாதிபதியிடம் சொன்னேன். இரண்டு மூன்று மாதங்களாக அதனை நான் கர்ண கடூரமாக எதிர்த்து வந்தேன். 

ஜனாதிபதியின் கட்சித் தலைமையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் தேர்தல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று அமைச்சர்களான ராஜிதவும், சம்பிக்கவும் ஜனாதிபதியிடம் சொல்லியுள்ளனர். உங்களது தேவைக்காக தேர்தல் சட்டத்தை மாற்ற முடியாது; அது எல்லா சமூகங்களுக்கும் நியாயமானதாக இருக்க வேண்டுமென்று நான் ஜனாதிபதியிடம் வாதாடினேன். தனது அதிகாரங்களைக் குறைப்பதற்கு 19ஆவது திருத்தத்தின் மூலம் வழிகோலிய ஜனாதிபதி மைத்திரிபால அநியாயமான 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற இடமளிக்கக்கூடாது என்று நான் கூறினேன்.

சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி பேசிய பேச்சால் மஹிந்த ராஜபக்ஷவின் பலூன் காற்று இறங்கிப் போய்விட்டது. புஸ்வாணமாகிப் போகும் அரசியலாக அவரது அரசியல் மாறிவிட்டது. 

பலமான, உறுதியான அரசாங்கம் அமைகின்ற போது அதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பத்துக்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெறுகின்ற போது, முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் வன்னியின் பாராளுமன்றப் பிரதிநிதியையும் கையோடு அழைத்துக் கொண்டு செல்வார்.

வில்பத்து விவகாரத்தில் நான் குரல்கொடுக்கவில்லையென்று குறைகூறப்படுகின்றது. சமூகம் என்று வருகின்ற பொழுது நான் எனது பங்களிப்பை செய்யத் தவறுவதில்லை. நானும் அதற்காக உரத்து பேசியிருந்தால் நிலைமை பூதாகரமாக உருவெடுத்திக்கும். ரிசாட் பதியுதீனை மட்டுமல்ல என்னையும், ஆஸாத் சாலியைப் பற்றியும் இனவாத சக்திகள் விஷம் கக்குகின்றனர். ஆனால், வில்பத்து விவகாரத்தை வைத்து அரசியல் அனுதாபம் பெற எத்தனிப்பது மிகவும் கீழ்தரமான காரியமாகும். அதற்காக மக்களது கையொப்பங்களை சேகரித்து அனுதாபம் பெற முயற்சிப்பதும் தவறானது. இந்த வில்பத்து விவகாரத்தில் ஜனாதிபதியும் ஏதோ கூறித்தான் இருக்கிறார். இனவாதிகளின் விடயத்தில் எல்லோருக்கும் ஏதோ ஒரு விதமான அச்சம் இருக்கத்தான் செய்கின்றது.

தனது சுயநல அரசியலுக்கு குறுக்கே நிற்பவர்களை பழிவாங்குவதும், இடமாற்றம் செய்வதும், பதவி நீக்கம் செய்வதும் வன்னி மக்களை பெரிதும் பாதித்திருக்கின்றது.

பாதைகளின் ஒழுங்கமைப்பு, வீடமைப்பத்திட்டத்தில் உரிய பகிர்வு, வேலைவாய்ப்பு என்பன போன்ற பிரச்சினைகள் வன்னி வாழ் முஸ்லிம்களின் இன்றைய அவசியத் தேவையாகும் என்பதனால் இயன்றவரை விரைவில் அவற்றிற்கு தீர்வு காண்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார். அரசியல் பலத்தினூடாகத்தான் இவற்றை நாம் அடையமுடியும். அதனால் உங்கள் வாக்குகளை வழங்கி கட்சியை மேலும் வலிமையுள்ளதாக ஆக்கங்கள் என்றார்.

இக்கூட்டங்களில் முன்னாள் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், முதன்மை வேட்பாளருமான முத்தலிப் பாவா பாறூக், வடமாகண சபை உறுப்பினர் எச்.எம்.ரயீஸ் ஆகியோர் உட்பட கட்சியின் வேட்பாளர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -