அந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர், பைஷல் காசிம் ஆகியோரும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான முழக்கம் மஜீட் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு உரை நிகழ்த்திய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் 10இலக்க வேட்பாளருமான ஹரீஸ் உரை நிகழ்த்துகையில்:
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் துடிப்பான ஒருவர் அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச இளைஞர் அமைப்பாளராகவும், கிழக்கு மாகாண சபையின் கட்சி உறுப்பினர்கள் சார்ந்த குழுக்களின் தலைவராகவும் தலைவரால் விரும்பப்படும் ஒருவராகவும் இருந்துவந்தார். அவரின் அவசரம் காரணமாக இன்று பிரயோசனம் ஒன்றும் இல்லை என்று தெரியாமல் பெரும் பாதாளகுழியில் விழுந்துள்ளார்.
அவருக்கு பெரும் மாயைக்காட்டி இன்று மையில் கட்சிக்காறர்கள் இணைத்துள்ளனர். விரைவில் விபரம் புரிந்து மீண்டும் ஓடிவரும் காலம் அதி சீக்கிரம் நடக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவருக்கு கட்சியினால் மாகாணசபையில் நல்ல பதவியொன்று வழங்கப்பட இருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் அவசரப்பட்டு ஓடியிருக்கிறார். இப்பொழுது அவர் சிந்திப்பார் என்று நன்றாகவே தெரியும். ஆனால் ஜெமீலின் பிரிவாலோ அல்லது தம்பி சிராஸின் பிரிவாலோ கட்சிக்கு பாதிப்பு வந்துவிடப்போவதில்லை.
மக்கள் கல்முனைத் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக்கொள்வதில் உறுதியுடன் செயல் பட்டுக்கொண்டிருக்கின்றனர். அம்பாரை மாவட்டம் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக திகழ்வது தெரிந்தும் சிறகுடைந்த மயிலைக் கொண்டு இங்கே ஓட விட்டிருப்பது அமைச்சர் றிஷாத் பதியுதீனின் விளங்காத் தனம் என்றுதான் கூறவேண்டும்.
தேவையானளவு பணங்களைக் கொண்டுவந்து அம்பாரை மாவட்ட மக்களை முட்டாளாக்கிவிடலாம் என்று மயில் கட்சி கனவு காண்கிறது. இத்தேர்தலில் மூக்குடைந்து வாழ்நாளிலும் அம்பாரை மாவட்டத்தை நினைத்து பார்க்காதளவு மக்கள் விரட்டியடித்து அனுப்ப காத்திருக்கின்றனர்.
நம் சமூகத்தின் வெற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே தவிர காலத்துக்கு காலம் முளைக்கும் சில்லறைக் கட்சிகள் இல்லை என்றும் வேட்பாளர் ஹரீஸ் தெரிவித்தார்.
