எஸ்.எம்.அறூஸ்-
எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு நான்கு ஆசனங்கள் கிடைக்கும்.அதில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்ற 03 முஸ்லிம்களும் வெற்றிபெறுவது நிச்சயம்..அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.முஸ்லிம் பிரதிநிதித்துவம் முஸ்லிம் காங்கிஸ் மூலம் மட்டுமே சாத்தியம்.இந்நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் தனித்து போட்டியிடுவது முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கு செய்கின்ற துரோகமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய முன்னணியின் அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது சீபிறீஸ் ஹோட்டலில் நேற்று (20) திங்கள் மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கைகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .இதன்போது முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் சக வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசீம், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.ஐ.மன்சூர் ஆகியோருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நசீரும் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கரையோர மாவட்டம்,சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை தொடர்பான பிரச்சினை,மற்றும் மணற்சேனை, மருதமுனை, பொத்துவில்,நுரைச்சோலை உள்ளிட்ட வீடமைப்பு மற்றும் காணி தொடர்பான பிரச்சினைகளை புதிய அரசாங்கத்தில் தீர்த்து வைப்பதற்கான பொறிமுறைகளை ஏற்படுத்தியுள்ளோம்.
தற்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதனாலும் மக்கள் நல்லாட்சியை விரும்புகின்ற சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரசுக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலைவிடவும் அதிகமான வாக்குகள் கிடைக்கவிருப்பதனாலும் இம்முறை பேரம் பேசும் சக்தி முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கும்.அதன் மூலம் இப்பிரச்சினைகள் அனைத்துக்கும் புதிய அரசாங்கத்தின் மூலம் தீர்வு காணப்படும்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணி 04 ஆசனங்களைப் பெற்று வெற்றிபெறும். இதில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் 03 முஸ்லிம் வேட்பாளர்களும் நிச்சயம் வெற்றிபெறுவார்கள். இது தனிப்பட்ட வேட்பாளர்களின் தேர்தலாக அன்றி கட்சியின் தேர்தலாக கட்சித் தலைமையினால் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இம்முறை வாக்குகள் சிதறுவதை கருத்திற்கொண்டு வேட்பாளர்கள் தனித்தனியே வாக்கு கேட்டு செல்வது தடுக்கப்பட்டுள்ளதுடன்; 03 வேட்பாளர்களும் ஒருமித்து வாக்குகளை சேகரிப்பதற்கும் வாக்காளர்கள் 03 முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் ஒருமித்து வாக்களிப்பதற்கான வியூகங்களும் கட்சித்தலைமையினால் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் மகாஓயா,தெஹியத்த கண்டியிலும் எமது கட்சி அலுவலகங்கங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன் அங்கு கணிசமான தொழில் வாய்ப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.இதன் மூலம் பொத்துவில், கல்முனை,சம்மாந்துறை தொகுதியில் மாத்திரமன்றி எமக்கு அம்பாரை தேர்தல் தொகுதியிலும் வாக்குகள் கிடைக்கவுள்ளன.அந்தவகையில் 03 முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் கிடைப்பது உறுதி.
முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மூலம் மாத்திரமே சாத்தியமானது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸாலோ அல்லது வேறு எந்த கட்சி மூலமோ முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒருபோதும் சாத்தியம் இல்லை.இந்நிலையில் அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கான சதி மட்டுமன்றி முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கு செய்கின்ற துரோகமாகும்.
வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் அதனுடன் இணைவதை தவிர்த்து தனித்து போட்டியிடுவதன் மூலம் இதனை முஸ்லிம் மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.
நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் இருக்கும் அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கு இம்முறை கட்டாயம் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளது. கட்சியின் தேசியத் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை யின் உருவாக்கத்திற்கு நானோ கட்சியோ எதிராக இல்லை. சிலரின் அரசியல் சித்து விளையாட்டிற்காக பொய்யான கதைகளை பரப்பி வருகின்றனர். கொள்கையில்லாதவர்கள் கட்சியைவிட்டு வெளியறுவதனால் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தங்களுக்கு போட்டியிடுவதற்கான வாயப்புக்கள் இல்லாத நிலையிலும், தேசியப்பட்டியல் எம்.பி பதவி கிடைக்காது என்று தெரிந்த நிலையிலும்தான் சிலர் இன்று மயில் கட்சியில் தாவியுள்ளனர்.
அம்பாரை மாவட்ட மக்கள் தெளிவானவர்கள். அவர்களுக்குத் தெரியும் இந்த சுயநல அரசியல்வாதிகளின் தன்மையை. தங்களுக்குப் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களையும்,பொம்மைகளையும் எரித்தார்கள். இதுதுான் இவர்களின் அரசியல்.
கடந்த அமைச்சரவை மாற்றத்தில் எங்களுக்கும் பிரதி அமைச்சுக்கள் கிடைக்கும் என்று எமது மக்கள் பெரிதும் நம்பியிருந்தார்கள். எமது மக்களின் நம்பிக்கை நடக்காதபோது நாங்கள் ஆர்ப்பாட்டத்தையோ, பொம்மைகளையோ எரிக்கவில்லை. தலைமைத்துவத்தின் தீர்மானங்களை மதித்து அதன்பால் செயற்பட்டு வருகின்றோம்.
பதவிக்காக அலைந்து திரிந்தவர்கள்தான் இன்று கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்தமருதில் கட்சிக்கு எந்தப்பாதிப்பும் இல்லை. கட்சியின் மத்திய குழுவினர் மற்றும் அரசியல் பதவி நிலையில் உள்ளவர்கள் அனைவரும் கட்சியுடன்தான் இருக்கின்றனர். கட்சியினால் போடப்பட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.
சாயந்தமருது மக்கள் மிகத் தெளிவான முறையில் இருக்கின்றார்கள். ஊடகங்களில் பொய்யான செய்திகளைப் பரப்புவதன் மூலம் சாய்ந்தமருது மக்களின் நிலைப்பாட்டை மாற்ற முடியாது. கட்சியின் வேட்பாளர்களின் வெற்றிக்காக சகல பிரதேசங்களிலும் உள்ள மத்திய குழுக்கள் ஒருமித்து செயற்படவுள்ளன. எங்களது வெற்றி நிச்சயமானது. நமது முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டத்தின் இலட்சியக்கணவுகளை அடைந்து கொள்வதில் எங்களை அர்ப்பணித்துக் கொள்வோம்
20வது திருத்தச்சட்டத்தின் மூலம் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக நிகழவிருந்த பாரிய அரசியல் சிதைவுக்கு எதிராக நமது எமது கட்சியின் தலைவர் ஹக்கிம் அவர்கள் எடுத்திருந்த அரசியல் நகர்வுகள் இந்நாட்டின் புத்திஜீவிகள் மற்றும் அரசியல் தலைமைகளினால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது என்றார்.

