கடந்த காலங்களிலெல்லாம் தமிழர்களின் வாக்குகளால் முஸ்லிம் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட வரலாற்றை மாற்றி முஸ்லிம்களின் வாக்கினால் தமிழன் ஒருவன் தெரிவு செய்யப்பட்டான் என்ற வரலாற்றை ஆகஸ்ட் 17 ல் மாற்றிக்காட்டுவேன் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
வாகரை கண்டலடி மக்களுடன் நேற்று மாலை கலந்துரையாடலை மேற்கொண்டபோது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் தற்போது நாட்டிலே இடம்பெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலானது அனைவரினது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கின்றது.
அதனடிப்படையில் இம் முறை மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் களம் வழமைபோல் அல்லாது சற்று மாற்றம் அடைந்திருக்கிறது. அதாவது அதிகப்படியான அரசியல் கட்சிகள் சுயேற்சைக்குழுக்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலே போட்டியிடுகின்றன.
காலங்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் செல்வாக்குச் செலுத்திய அரசியல் பிரபல்யங்கள் தனித்தனி கட்சிகளிலே போட்டியிடுகின்றமை ஓர் விசேட அம்சமாகும்.இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையப் போகின்றது என்பதனை மக்கள் தீர்மானிக்கின்ற நாள் ஆகஸ்ட் 17 ஆகும்.
இச்சூழலிலே மட்டக்களப்பு மாவட்டத்தின் புள்ளி விபரங்கள் மற்றும் கடந்த கால அரசியல் போக்குகள் தெரியாத ஒருசில வேட்பாளர்கள் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு மட்டக்களப்பு தமிழ் மக்களை திசை திருப்பமுனைகின்றனர்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலே போட்டியிடுகின்ற பலமான கட்சிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன திகழ்கின்றன.
இதிலே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் தமிழர் தரப்பில் பிரதான வேட்பாளராக நானும் முஸ்லிம்கள் சார்பில் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அவர்களும் எனது சார்பில் தமிழ் வேட்பாளர்கள் நால்வரும் முஸ்லிம்கள் சார்பில் இருவருமாக 08 பேர் போட்டியிடுகின்றார்கள்.
இவ்வாறான தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்ற சில வேட்பாளர்கள் குறிப்பாக எனது வெற்றியை ஜீரணிக்க முடியாதவர்கள் தற்போது தமிழ் மக்கள் மத்தியிலே ஓர் பொய்யான செய்தியை பரப்பி வருகின்றார்கள்.
அதாவது தமிழ் மக்களாகிய நீங்கள் பிள்ளையானுக்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் ஹிஸ்புல்லாவிற்கே சேரும் அவர்தான் தமிழர்களின் வாக்கில்; nதிவு செய்யப்படப்; போகின்றார் என்ற உண்மைக்கு புறம்பான எந்தவொரு நியாயப்பாடுகளும் ஆதாரமும் அற்ற செய்தியை பரப்பி வருகின்றார்கள்.
இவர்கள் வெளிப்படையாகச் சொல்லப் போனால் எனது வெற்றியை தாங்கிக் கொள் முடியாதவர்கள்தான் புள்ளிவிபரங்கள் தெரியாமலமக்களை குழப்புகின்றார்கள்.
மக்களே இவர்கள் சிந்திக்க தேவையில்லை. நீங்கள் சற்று சிந்தியுங்கள் அதாவது கடந்தகால தேர்தல்களிலெல்லாம் பெரும்பாலும் முக்கிய முஸ்லிம் தலைவர்கள் எல்லாமே ஒரே குடையின் கீழ் நின்று தமிழர்களின் வாக்கிலே தெரிவான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இன்று அவ்வாறில்லை.
எனவே கடந்த காலங்களைப்போல் அடையமுடியாத இலக்குகளையும் சாத்தியமற்ற விடையங்களையும் நம்பகத்தன்மையற்ற வாக்குறுதிகளையும் போலிப்பிரச்சாரங்களையும் மக்கள் மத்தியிலே முன்வைத்து வாக்கு கேட்ட வரலாற்றை மாற்றி
உண்மையாக செய்யக்கூடியவற்றை மக்களிடம் தெரிவித்து அன்படி வாக்கு கேட்டு வெற்றி பெற வாழ்த்துவதோடு எமது மாவட்ட தமிழ் மக்களை போலிப் பரப்புரைகளை செய்து எமது மக்களை மீண்டும் பாதாளத்திற்கு கொண்டு செல்லாதீர்கள் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
