நல்லாட்சியைப் பலப்படுத்தவே மகிந்தவின் அரசியல் பிரவேசம் -சிறப்புக்கட்டுரை

ல தசாப்தங்களாக தமது தாய் நாட்டில் நல்லாட்சியை யாசித்து, யாசித்து சலித்துப்போன இதயங்களில் ஒரு நம்பிக்கை துளிர் விடுவதற்கு கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவு காரணமாய் அமைந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூடிய தனக்கு சாதகமான பாராளுமன்றத்தையும் 18 ஆவது சீர்திருத்தத்தின் மூலம் மேலும் சக்திக்குட்படுத்தப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி எனும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு களம் இறங்கிய ஜனாதிபதித் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு 51.28 வீத வாக்குகளை வழங்கி வெற்றி பெறச் செய்த மக்களின் உறுதியான நிலைப்பாடு மஹிந்த சிந்தனை இனியும் நாட்டை ஆளக் கூடாது என்பதே.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ வழமைக்கு மாறாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் பதவியை இலக்கு வைத்து களம் இறங்கவுள்ள செய்தி, நாட்டில் நல்லாட்சியை எதிர்பார்த்து வாக்களித்த மக்கள் மத்தியில், குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில், ஓர் அச்ச நிலையை தோற்றுவித்திருக்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்தவுக்கும் அவருக்கும் ஆதரவான குழுவினருக்கும் இடமளிப்பது தொடர்பாக இக்கட்டுரை எழுதப்படும் வரையில் எதுவித இறுதித் தீர்மானமும் எட்டப்படவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அவர்களுக்கு இடம் வழங்கப்படாதவிடத்து மஹிந்த தலைமையிலான குழுவினர் தனித்துக் களம் இறங்கவுள்ளனர். அத்தகையதொரு நிலை ஏற்படுமானால் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் அணியின் வெற்றி இன்னும் இலகுவாக உறுதிப்படுத்தப்படும்.

எது எவ்வாறாயினும், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் நல்லாட்சியின் அவசியத்தை நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அதிகமாக உணர்ந்திருக்கின்றனர். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்கள், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் தாக்கம், சர்வதேச அரசியலின் போக்கு கற்றுத் தரும் பாடங்கள் போன்ற காரணிகள் இதில் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன. எனவே, மஹிந்த அணிக்கு இடமளிப்பது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது சிந்தனைக்குரிய ஒரு விடயமே.

2010 இல் இடம்பெற்ற 7 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுடன் நடைபெறவுள்ள 8 ஆவது பொதுத் தேர்தலை ஒப்பிடுவதற்கு முன்னர், 2010 பொதுத் தேர்தல் முடிவில் பிரதானமாக தாக்கம் செலுத்திய 2009 இன் யுத்த வெற்றி என்ற விடயம் இத்தேர்தலில் எந்தளவு தாக்கம் செலுத்தப் போகிறது என்பதை சீர்தூக்கிப் பார்த்தாக வேண்டும். இவ்வருடம் ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளே சமகாலத்தின் பொதுசன அபிப்பிராயத்தை சரியாக மதிப்பிடுவதற்கு பொருத்தமாக இருக்கும்.

2010 பொதுத் தேர்தலின் போது 22 தேர்தல் மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்று மாவட்ட அடிப்படையில் 127 ஆசனங்களையும் தேசியப் பட்டியலில் 17 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்று மாவட்டங்களில் வெற்றி பெற்று மாவட்ட அடிப்படையில் 13 ஆசனங்களையும் தேசியப் பட்டியலில் 1 ஆசனத்தையும் பெற்றுக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி எந்தவொரு மாவட்டத்திலும் பெரும்பான்மையை பெறாத நிலையில் மாவட்ட அடிப்படையில் 51 ஆசனங்களையும் தேசியப் பட்டியலில் 9 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. சரத் பொன்சேகாவின் தேசிய ஜனநாயக முன்னணி மாவட்ட அடிப்படையில் ஐந்து ஆசனங்களையும் தேசியப் பட்டியலில் 2 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி 12 மாவட்டங்களில் கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை ஆட்சி மாற்றத்தின் அவசியத்தை மக்கள் விரும்புவதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

ஏனைய 10 மாவட்டங்களில் தென் மாகாணத்துள் அடங்கும் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் ஊவா மாகாணத்தில் மொனராகலை மாவட்டத்திலும் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்திலும் ஆக 5 மாவட்டங்களில் மைத்திரிபால சிறிசேனவை விட கூடிய வாக்கு வித்தியாசத்தில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டியிருந்தார். இருப்பினும், 2010 பொதுத் தேர்தலில் அம்மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு காணப்பட்ட செல்வாக்கு குறைந்தே இருக்கிறது.

ஏனைய குருணாகல், அனுராதபுரம், கேகாலை, களுத்துறை, மாத்தளை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தாலும் சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்திலேயே அவ்வெற்றி தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருணாகல் மாவட்டத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் நாவின்ன தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் களம் இறக்குகிறார். மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகையால் அதிருப்தியுற்ற சுநந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கான சாத்தியங்கள் இன்னும் தென்படுகின்றன. எனவே, 2010 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கணிசமான ஆசனங்களை வழங்கிய இம்மாவட்டங்கள் எதிர்வரும் தேர்தலில் அதே ஆதரவை அக்கட்சிக்கு வழங்குமா என்பது சந்தேகமே.

வட மாகாணத்திலுள்ள இரு மாவட்டங்களிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மேலாதிக்கம் 2010 ஐ விடவும் இம்முறை அதிகமாகவே இருக்கும். ஆனால், கிழக்கில் மூன்று மாவட்டங்களில் திகாமடுல்ல மற்றும் திருகோணமலை மாவட்டங்களை 2010 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுநந்திர முன்னணி கைப்பற்றியிருந்தது. அத்தேர்தலில் இவ்விரு மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம்களின் வாக்குகளையும் குறிப்பிடத்தக்களவு இக்கட்சி பெற்றிருந்தது. ஆனால், எதிர்வரும் தேர்தலில் இவ்விரு மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம் வாக்குகளை எந்தளவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது விடை தெரிந்த ஒரு கேள்விதான்.

திகாமடுல்ல மாவட்டத்தில் 2010 இல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மூத்த அரசியல்வாதி பி.தயாரத்ன இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியில் களமிறங்கவுள்ளதால் சிங்கள வாக்குகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இழப்பை சந்திக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இவற்றை வைத்து நோக்கும்போது இம்முறை வடக்கு-கிழக்கில் ஒரு மாவட்டத்தைத் தானும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றுவதற்கான வாய்ப்பு தென்படவில்லை.

இவை இவ்வாறிருக்க, முக்கியமான அரசியல் கட்சிகளின் இன்றைய நிலைவரத்தை நோட்டமிடுகையில் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெளிவான நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. முஸ்லிம் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை முஸ்லிக் காங்கிரஸும் தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொண்டு, மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கான தேர்தல் வியூகங்களையே வகுக்கப் போகின்றன.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பலம் சேர்த்த சிங்கள சிறுபான்மைக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய மஹிந்தவின் அரசியல் நகர்வுக்கு எதிர்வினை அரசியலையே இம்முறை முன்னெடுக்கப் போகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய பங்கு வகித்த இக் கட்சிகளும் தனித்து களமிறங்குவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவான சிங்கள வாக்குகளில் தாக்கம் செலுத்தும் நிலையே காணப்படுகிறது.

சுதந்திரக் கட்சியின் பிளவைத் தவிர்ப்பதற்கு இருக்கும் ஒரே வழி மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதுதான். கட்சியின் பிளவைத் தடுப்பதற்காக மஹிந்த அணியை கட்சிக்குள் உள்வாங்குவதென்பது மிக மோசமான உட்கட்சி அரசியலையே அக்கட்சிக்குள் ஏற்படுத்தும். தற்காலிகமாக எதிர்வரும் தேர்தலை இலக்காக வைத்து அத்தகைய ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டாலும் தேர்தலின் பின் சுதந்திரக் கட்சியின் ஆசனங்கள் இரு திசைகளில் பயணிக்கப் போவதை தடுத்து நிறுத்த முடியாது. அப்போது கட்சியின் பிளவு தெளிவாக வெளிக்காட்டப்படும்.

உண்மையில், மஹிந்தவின் மீள் வருகை நல்லாட்சி அரசாங்கத்தை மேலும் பலப்படுத்தவே வழிவகுக்கப் போகிறது. நல்லாட்சிக்கு எதிரான சக்திகளுக்கு ஒரு பொருத்தமான தலைமைத்துவத்தை வழங்குவதற்கான வருகையாகவே மஹிந்தவின் வருகை அமையப் போகிறது. மோசமான இனவாதத்தையும் சர்வதேச சக்திகளுக்கு இவ்வரசாங்கம் நாட்டை தாரைவார்த்து விட்டது என்ற வாதத்தையும் யுத்த வெற்றி வாதத்தையும் பிரதான ஆயுதங்களாகக் கொண்டு இவ்வணி இம்முறை களம் இறங்கியிருக்கிறது.

இது சிங்கள மக்கள் மத்தியில் எந்தளவு தாக்கம் செலுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் 19 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் முக்கியமான அரச துறைகளினதும் திணைக்களங்களினதும் சுயாதீனத் தன்மை பாதுகாக்கப்பட்டிருக்கின்ற நிலையில் நடைபெற இருக்கும் சுதந்திரமானதும் நீதியானதுமான பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கு எதிரான சக்திகள் எழுச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் அரிதாகவே தென்படுகின்றன.நன்றி:engalthesam

முஸ்னத் அஹமது சரிபுத்தீன்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -