தொடர்ந்து பொய் சொல்லும் ஹிஸ்புல்லாஹ் -அப்துல் ரஹ்மான்

புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் -

முன்னாள் ஜனாதிபதிக்கும் தனக்கும் தொடர்புகள் இல்லையென ஹிஸ்புல்லா சொல்வது பொய்! – பொறியியலாளர் அப்துர் றஹ்மான்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தனக்கும் இடையில் எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்று சக வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருப்பது, அப்பட்டமான பொய்யாகும். அவருக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் இப்போதும் நெருக்கமான தொடர்புகள் இருந்து வருவதை எம்மால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல.மு.கா. சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுபவருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் காத்தான்குடியிலுள்ள முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது. 

இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்த பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அங்கு மேலும் கூறியதாவது:

இந்நாட்டு மக்களின் விருப்பத்திற்கமைவாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு, நல்லாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் மைத்திரிபால சிறிசேனா அவர்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் ஸ்திரமான நாடாளுமன்றப் பலம் இல்லாமையின் காரணமாகவே பல தீர்மானங்களைச் செயற்படுத்த முடியாமல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு வழியேற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் மக்கள் இலகுவாக விளங்கிக் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், அடுத்து வரும் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் நல்லாட்சி நிர்வாகத்திற்கு உறுதுணையாக நின்று ஆதரவளிக்கக்கூடியவர்களையே மக்கள் தமது பிரதிநிதிகளாகத் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்ய வேண்டும் என்பதாகும்.

எனினும், கடந்த அரசாங்கக் காலத்தில் பல்வேறு ஊழல் மோசடிகளிலும், அதிகாரத்துஷ்பிரயோகங்களிலும் ஈடுபட்ட பலரையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது வெற்றிலைச் சின்னத்தில் வேட்பாளர்களாக இப்போது களமிறக்கியுள்ளது. இதனால், ஜனாதிபதி ஆட்சிமாற்றத்திற்கு முன்னோடிகளாகச் செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ உள்ளிட்ட பல கட்சிகளின் முக்கியஸ்தர்களும், நாமும் பெரும் அதிருப்தியடைந்துள்ள நிலையில்தான், மைத்திரிபால சிறிசேனா அவர்களின் தலைமையிலான நல்லாட்சியினை நாடாளுமன்றத்திலும் உறுதிப்படுத்துவதற்காகவே இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பில் நாமும் ஒன்றிணைந்து போட்டியிடுகின்றோம்.

இருந்த போதிலும், அன்று மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் தரப்பில் மிகவும் முக்கியமானதொரு பங்காளியாகச் செயற்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, தேர்தல் முடிந்த கையோடு தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு செயற்படுவதாகக் கூறியிருந்தார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வேளையிலும் அவர் தமக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் இடையில் எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்பதை வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்.

அவ்வாறெல்லாம் சகோதரர் ஹிஸ்புல்லா மக்களை ஏமாற்றும் வகையில் கூறி வருகின்ற போதிலும், அவருக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் இப்போதும் நெருக்கமான தொடர்புகள் இருந்து வருகின்றன என்பதை எம்மால் நிரூபிக்க முடியும். 

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது, ஊழல் மோசடி ஒழிப்புப் பிரிவினர் அதனை விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட வேளையில், நாடாளுமன்றத்தில் அவருக்கு ஆதரவாக ஒன்றுகூடி போராட்டம் நடாத்தியவர்களில் ஹிஸ்புல்லாவும் அடங்கியிருந்தார் என்பதை ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் படம்பிடித்துக் காட்டியிருந்தன.

அதேபோல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு அவரது நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் கூறிக்கொள்ளும் சகோதரர் ஹிஸ்புல்லா, நாட்டு மக்கள் வழங்கிய அந்த நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைப் பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அவ்வாறுதான் யுத்த வெற்றி தொடர்பாக ஜனாதிபதி மைத்திரியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் வெற்றி விழா நிகழ்வுகளை தனித்தனியே ஏற்பாடு செய்திருந்தபோது, சகோதரர் ஹிஸ்புல்லா மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த விழா நிகழ்வைப் புறக்கணித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த விழாவுக்கே சென்றிருந்தார் என்பதையும் நமது மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட, வேட்புமனுக்கள் தாக்கல் யெ;யப்படுவதற்கு இரண்டொரு தினங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த இரகசியக் கூட்டத்திலும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கெர்ணடதை இந்த காணொளியில் நீங்கள் காணலாம். 

(ஊடகவியலாளர்களுக்கு குறித்த காணொளி இயக்கிக் காண்பிக்கப்பட்டது)
இவ்வாறெல்லாம் முன்னாள் ஜனாதிபதியுடன் இன்று வரை நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்ற சகோதரர் ஹிஸ்புல்லா, எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மஹிந்தவுக்கு எதிராக அமோகமாக வாக்களித்திருந்தார்கள் என்பதை கருத்திற் கொண்டுதான், எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனக்கு இந்த மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களுடைய வாக்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மிகத் தந்திரமாக தனக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்று அப்பட்டமாகப் பொய் சொல்லி வருகின்றார். 

இவரது பொய்யையும், அரசியல் தந்திரோபாயத்தையும் மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி ஆட்சி மாற்றம் என்பது, எம்மைப் பொறுத்த வரைக்கும் நல்லாட்சிக்கான ஒருஐ ஆரம்பமேயாகும். அதனை முழுமைப்படுத்தி நாட்டில் அமுல்படுத்த வேண்டுமாயின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமது மக்கள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களான வெற்றிலை வேட்பாளர்களுக்கு எதிராகவும், நல்லாட்சிக்கு உறுதுணையாகக் களமிறங்கியுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாகவுமே தமது வாக்குகளை வழங்க வேண்டும்.

இந்த நாட்டில் ஜனாதிபதி ஆட்சி மாற்றத்திற்காக முஸ்லிம்கள் தரப்பில் முதன்மைப்பங்காளியாக எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியே களமிறங்கியது என்பது உங்களுக்குத் தெரியும். 

இப்போதும் அந்த நல்லாட்சிக்கான அத்திவாரமாக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதிகாரத்துடன் செயற்படப் போகும் நாடாளுமன்றத்திற்கு தகுதியான பிரதிநிதிகள் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகவே நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து, அதில் தன்னையும் ஒரு கட்சியாக இணைந்துக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நாம் போட்டியிடுகின்றோம்.

எனவே, அடுத்த நாடாளுமன்றத்தில் நல்லாட்சிக்காகவும், இன ஐக்கியத்திற்காகவும் உரத்தும், உறுதியாகவும் குரல் கொடுக்கக்கூடியவர்களாக எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வேட்பாளர்கள் இருப்பார்கள் என்பது, எமது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம் வாக்களர்களின் முன்னணித் தெரிவாக இருக்கும் என நம்புகின்றோம் என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -