எம்.வை.அமீர் -
மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து அமைதியாக இருக்கும் இப்போதைய சூழலில் பாராளமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாலும் அவரது அமைதிப்போக்கை சில கட்சிகளும் நபர்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முனைவது போன்ற பேச்சுக்கள் அரசியல் உயர்மட்டங்களில் உலாவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தற்போதய போக்கின் காரணமாகவும் சாய்ந்தமருதில் ஏற்பட்டுள்ள உள்ளுராட்சிசபை சம்மந்தமான கோரிக்கை தொடர்பிலும் மாகாணசபை உறுப்பினர் இவ்வாறான அமைதிப்போக்கில் இருக்கிறாரா என கேள்விகளும் மக்கள் மத்தியில் கேட்கப்படுகின்றன.
இம்முறை அம்பாறை மாவட்டத்தில் பலமுனைப்போட்டி இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி மைத்திரி மகிந்த இணைந்த கூட்டு சுயாதினக் குழுக்கள் என பலகட்சிகள் களமிறங்கவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அம்பாறை மாவட்டம் சவாலாக அமையும் என்றும் கூறப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியில் களமிறங்கக் கூடிய வாய்ப்புக்களே அதிகம் காணப்படுவதால் பொத்துவில்,சம்மாந்துறை மற்றும் கல்முனைத் தொகுதிகளை மையப்படுத்தி பைசால் காசீம் மன்சூர் மற்றும் ஹரீஸ் போறோரை களமிறக்க முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாகவும் சம்மாந்துறை மன்சூர் பாராளமன்ற தேர்தலில் போட்டியிடுவதானால் தான் வகிக்கும் சுகாதார அமைச்சுப்பதவியை முதலில் இராஜினாமா செய்யா வேண்டும் என தலைவர் கட்டளையிட்டுள்ளதாகவும் ஊடகங்கள் மூலமாக அறிய முடிகிறது.
அவ்வாறு மன்சூர் சுகாதார அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்யும் பட்சத்தில் அவருக்கு சம்மாந்துறைக்கான வேட்பாளர் ஆசனத்தை வழங்கவுள்ளதாகவும் குறித்த சுகாதார அமைச்சை மாகாணசபை உறுப்பினர் ஜெமிலுக்கு வழங்கவுள்ளதாகவும், அதற்க்கு மேலதிகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் பாராளமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முதன்மை வேட்பாளராக களமிறங்கவுள்ளதால் அவர் வகிக்கும் முதலமைச்சர் பதவியில் மூன்று மாதங்களுக்கு லீவு எடுக்கவுள்ளதால் அதற்க்கான பதில் முதலமைச்சராகவும் ஜெமிலை நியமிப்பதற்கான இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் பேசப்படுகின்றன.
மாகாணசபை உறுப்பினர் ஜெமிலின் அமைதிப்போக்கை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் போன்றனவும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முனைவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இவைகள் தொடர்பாக அறிந்து கொள்ள மாகாணசபை உறுப்பினர் ஜெமிலின் தொலைபேசியை முடுக்கியபோது அதுவும் அமைதியாகவே இருந்தது.
