தகவல் அறியும் உரிமை மற்றும் சட்டவிரோத தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு ஊடக சங்கத்தின் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்
பொதுமக்களுக்குள்ள தகவல் அறியும் உரிமை மற்றும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை வெளிப்படுத்தும் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கௌரவம், வெகுமதி போன்ற ஊக்குவிப்புக்களை வழங்குவது தொடர்பாக கிழக்கு ஊடக சங்கம் அதன் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆரம்பித்து விஷேட பிரசுரமொன்றையும் வெளியிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை தொடர்பில், “தகவல் அறியும் உரிமை, ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் உரியதல்ல. அது ஒவ்வொரு பிரஜைக்கும் உரிய இறைமையாகும்” எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தகவல் அறியும் உரிமை என்பது, மக்களின் இறைமையில் நிறுவப்பட்ட ஜனநாயகக் கோட்பாட்டின் ஓர் மைய அம்சமாகும். அதன் மூலம் நாட்டின் நல்லாட்சியை வலுப்படுத்துவதோடு, வெளிப்படைத்தன்மையையும் ஏற்படுத்த முடியும்.
இலங்கையின் அரசியலமைப்பில் உறுப்புரை 3 எனும் அதிகாரமானது, இதனை நாட்டு மக்களின் உடமையாக்குவதுடன், மக்களின் இறைமையை தெளிவாகவும் அங்கீகரிக்கின்றது. நாட்டின் ஆட்சி முறைமையானது, வாக்களித்த மக்களுக்கு பொறுப்புக் கூறக்கூடியதாகவும், வெளிப்படையானதாகவும் இருந்தால் மாத்திரமே மக்கள் தமது பிரதிநிதிகளின் ஊடாக பயன்களைப் பெற முடியும் என்பதோடு, பயனள்ள வகையில் தங்களின் அதிகாரங்களையும் பிரயோகிக்க முடியும். இந்த வகையில் இலங்கை மக்களுக்கும் 19வது திருத்தச் சட்டத்தினூடாக இந்த இறைiமையைப் பேணும் உரிமை கிடைக்கவுள்ளது.
ஜனநாயக முறையில் செயற்படும் ஒரு நாட்டில் ஊடகத்துறையினர் வகிக்கும் முக்கியமான பாத்திரம் காரணமாக, அவர்களை நாட்டு மக்களில் அதிகாரம் கொண்ட நான்காம் தரப்பினராக (4வா நளவயவந) விபரிக்கப்படுகின்றது. அரசாங்கச் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் மற்றும் பகுப்பாய்வுகள் என்பவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதில் ஊடகத்துறையினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த வகையில் நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ள தகவல் அறியும் உரிமையை ஊடகவியலாளர்களான நாங்கள் அறிந்து கொள்வதில் அக்கறை செலுத்துவது போல், பொதுமக்களான நீங்களும் அறிந்து கொள்வதில் அக்கறை செலுத்தி உங்களின் உரிமையையும், இறைமையையும் நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும்.
எனவே, தகவல் அறியும் உரிமைக்கான கலந்துரையாடல்களையும், அறிவுறுத்தல்களையும் உங்களுக்கு வழங்குவதில் எமது “கிழக்கு ஊடக சங்கம்” பெரிதும் அக்கறையுடன் இணைந்து கொண்டு செயற்படவுள்ளது என்பதை இத்தால் மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். எம்மோடு பொதுமக்களான நீங்களும் எப்போதும் இணைந்திருங்கள்! – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் ஊடக நிறுவனங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கௌரவிப்பு வழங்குவது தொடர்பில் “தேர்தல் முறைகேடுகளை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கௌரவிப்பு” எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஜனநாயக முறையில் இடம்பெறச் செய்து வாக்காளர்களின் உண்மையான தீர்மானங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தேர்தல் ஆணையாளர், தேர்தல் திணைக்கள அதிகாரிகள், காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு முன்வந்திருக்கும் இவ்வேளையில், கிழக்கு ஊடக சங்கமும் இத்தார்மீகப் பொறுப்புடைய தேசியக் கடமையில் தனது பங்களிப்பை வழங்குவதற்கு முன்வந்துள்ளது என்பதை தங்களின் கவனத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றது.
அந்த வகையில், தேர்தல் பிரச்சாரக் காலப்பகுதியிலும், அதையடுத்த வாக்களிப்புத் தினம் மற்றும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெறும் முறைகேடான தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் வன்முறைகள், ஆள்மாறாட்ட வாக்களிப்புக்கள், நிவாரணம் என்ற பெயரில் வேட்பாளர்களால் வழங்கப்படும் கொடுப்பனவுகள், இலஞ்ச வகையறாக்கள், வேலை வாய்ப்புக்கள், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள் மற்றும் இன்னோரன்ன தேர்தல் சட்டவிரோத நடவடிக்கைகளை பொதுமக்களினதும், சம்பந்தப்பட்ட தேர்தல் மற்றும் காவல்துறை அதிகாரிகளினதும் கவனத்தை ஈர்த்து உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு சட்டஒழுங்கையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டும் வகையில் நாட்டின் நான்காவது ஜனநாயகத் தூணாகக் கருதப்படும் ஊடகங்களில் மூலமாக வெளிக்கொணரும் ஊடகவியலாளர்களையும், ஊடகங்களையும் எமது கிழக்கு ஊடக சங்கம் கௌரவித்து வெகுமதிகளையும், பாராட்டுக்களையும் வழங்கவுள்ளது.
மேற்குறிப்பிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்கள் வாயிலாக உடனுக்குடன் வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் அத்தகைய செய்திகள், படங்கள் மற்றும் காணொளிகள் போன்றவற்றின் ஒரு பிரதியை எமது கிழக்கு ஊடக சங்கத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் இந்த கௌரவிப்புக் களத்தில் பங்குபற்றலாம். மேலும் இவ்வாறு பங்குபற்றும் ஊடகவியலாளர்களில் எவரும் எமது கிழக்கு ஊடக சங்கத்தில் அங்கத்தவராக இணைந்திருந்தால் அவர்கள் இரட்டை வெகுமதிக்கும், கௌரவிப்புக்கும் தகுதி பெறுவார்கள்.
இந்நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்ற விரும்பும் ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனங்களின் நிர்வாகிகளும் தாங்கள் அனுப்பும் முதலாவது செய்திப் பிரதியுடன் தங்களைப்பற்றிய பெயர், முகவரி, தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகத்தளத்தின் பெயர், தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்ற விபரங்களையும் புறம்பாக இணைத்து அனுப்புதல் வேண்டும். இவ்வாறு எமக்கு கிடைக்கப் பெறும் செய்திகள், குறித்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பெயர்களுடன் பிற ஊடக வலையமைப்புகளுக்கும், உரிய அதிகாரிகளுக்கும் பரவலாக்கம் செய்யப்படும்.
ஜனநாயகத் தேர்தலொன்றை இந்நாட்டில் அமுலாக்கம் செய்வதற்கும், வாக்காளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் ஊடகத்துறையினரான நாமும் நமது முழுமையான பங்களிப்புக்களை வழங்குவதற்கு முனைவோம்! முன்வருவோம்!! மேலும் விபரங்களுக்கு: 0777004774 எனும் இலக்கத்துடன் இணையுங்கள். eastmedia.batti@gmail.com

