அதி கூடுதலான வாக்குகளைப் பெற்று இந்தத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் - அமைச்சர் ஹக்கீம்

ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்-

ஹிந்த ராஜபக்ஷ மக்களால் தோற்கடிக்கப்பட்டுவிட்டார். அதன் பிறகு அவர் இளைப்பாறாமல் பதவி மோகத்தினால் உந்தப்பட்டு தேர்தலுக்கு முன்வந்த போதிலும், எங்களுக்குத்தான் மகத்தான வெற்றி கிடைக்கப் போகின்றது என்பது உறுதியாகிவிட்டது. 

அந்த வெற்றியை நோக்கிய பயணத்தில் நாங்கள் ஒன்றுபட்டிருக்கிறோம். அதி கூடுதலான வாக்குகளைப் பெற்று இந்தத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் ஹக்கீம், நியமனப்பத்திரம் செயலகத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலுக்கு சென்று துஆ பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது, 

ஜனவரி 8ஆம் திகதி ஊழல் மிகுந்த, மோசடி அரசாங்கத்தை அகற்றிவிட்டு, அதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர் நூறு நாள் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்காக கால அவகாசத்தை எடுத்தோம். அதனால் ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை கொண்டு நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன் பயனாக 19ஆவது அரசியல் திருத்தத்தை நிறைவேற்றியமை உட்பட பல நல்லாட்சிக்கான அம்சங்களின் மீது கவனஞ் செலுத்தினோம். 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வாய்ந்த கடமையை நிறைவேற்றியதன் பின்னர், நல்லாட்சிக்கு தடையாக இருக்கின்ற ஏனைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி இருந்தது. அதற்கு இருந்த ஓரே ஒரு தடை பாராளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லாமல் இருந்ததுதான். 

அந்த பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதுதான் இந்தத் தேர்தலில் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கும் விடயமாகும். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு முழு மூச்சுடன் உழைத்த அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒன்றிணைந்து நாங்கள் பெற்ற வெற்றியின் யதார்தத்தை செயலுருப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கினோம்.

பிரதான கட்சிகள் இரண்டுக்குமிடையில் இணக்காப்பாடு இல்லாமல் விலகிச்செல்லும் சூழ் நிலை ஏற்பட்ட போதிலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் வேறு கட்சிகள் சிலவற்றின் உறுப்பினர்கள் எங்களோடு இணைந்து ஐக்கிய தேசிய கட்சியை முதன்மைப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியை அமைப்பதில் எங்களோடு ஒன்று பட்டிருக்கிறார்கள். இதன் ஊடாக ஓரு உறுதியான அரசாங்கத்தை ஏற்படுத்தி அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதியில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கிறோம். 

அதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். இதனை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தால் அன்றி வேறு எவராலும் சாதிக்க முடியாது என்றார்.

இந்நிகழ்வில் மற்றொரு ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரான எம்.எச்.எம். ஹலீமும் கலந்துகொண்டார். பின்னர், அமைச்சர் ஹக்கீம் அக்குறனை, மடவளை போன்ற பிரதேசங்களுக்கு சென்ற போது ஆதரவாளர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -