நாங்கள் அமைச்சரவையில் சேர்ந்து கொள்வோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சென்ற ஆட்சி மாற்றத்தின் போது கூட அந்த கோரிக்கை எம்மிடம் விடுக்கப்பட்டது. இனப்பிரச்சனைக்கு தீர்வு தான் எமது நோக்கு என அன்றே நாம் தெரிவித்திருந்தோம் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தேசிய அரசு அமைப்பதற்கு தமிழ் மக்களின் ஆதரவை பெற வேண்டிய நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தின் போதுதான். நாங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வு, அகதி வாழ்வுக்கு தீர்வு, நில பிரச்சனைக்கு தீர்வு மீள்குடியேற்ற பிரச்சனை, சிறையில் உள்ளவர்களை விடுவித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழர்களின் பலத்தை கொண்டு பேச்சுக்களை நடாத்தி மூன்று தொடக்கம் ஆறு மாத காலத்திற்குள் தீர்வினை பெற்றுக்கொடுப்போம்.எங்களுக்கு தற்போதைக்கு அமைச்சரவையில் இணைந்து கொள்ளும் எண்ணம் இல்லை.
வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எம்மிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் மனோகணேசன் தலைமையிலான கூட்டமைப்புடன் நாங்கள் பேச்சுக்கள் நடாத்தியுள்ளோம். ஏனெனில் அவர்கள் எமது நட்பு சக்தி.
கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் போன்ற இடங்களில் நாங்கள் போட்டியிட்டால் கணிசமான வாக்குகளை பெறலாம். கொழும்பில் போட்டியிட்டால் எமக்கு நிச்சயம் ஒரு ஆசனம் கிடைக்கும். மலையக மக்களின் பிரதிநிதிகள் தங்களுடைய வேட்பாளர்களை நிறுத்துகின்ற போது அவர்களுடன் பேசி ஒரு முடிவை எடுக்க தீர்மானித்துள்ளோம். சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கொழும்பில் சந்தித்து அது தொடர்பில் பேச்சுக்களை நடாத்தியுள்ளனர் என்று தெரிவித்தார்.