எம்.எம்.ஜபீர்-
மருதமுனை பிரதேசத்தில் சுனாமியினால் முற்றாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேட்டுவட்டை பிரதேசத்தில் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 178 வீடுகளில் 100 வீடுகள் கையளிக்கப்பட்டு எஞ்சியுள்ள 78 வீடுகள் இதுவரை கையளிக்கப்படாத நிலையிலுள்ளதால் இப்பிரதேசத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேற்படி 78 வீடுகளும் பற்றைகளால் சூழப்பட்டு காடாக காட்சியளிப்பதனால் இரவு வேளைகளில் விசஜன்துக்களின் நடமாட்டம் காணப்படுவதால் அங்கு வாழும் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய நிலையில் காணப்படுகின்றனர்.
அப்பிரதேசத்தில் வந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களால் அவ்வீடுகள் சேதப்படுத்தப்படுவதாகவும் இதனால் இவ்வீடுகள் குடியிருப்புக்கு பொருத்தமற்றதாக மாறிவருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதமாயுள்ள வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக வழங்கி இப்பிரதேசத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை இல்லாமல் செய்யுமாறு கோரிக்கையும் விடுக்கின்றனர்.




