பொதுத் தேர்தலின் பின்னர் பலம்வாய்ந்த தேசிய அரசங்கம் அமையும் - அமைச்சர் ஹக்கீம்


பாராளுமன்றத்திற்கு உள்ளும், புறமும் ஏற்படுத்தப்படுகின்ற குழப்ப நிலைக்கு மத்தியில் பதவி இழந்து போன முன்னாள் ஜனாதிபதி ஒரு சவாலாக தலைதூக்குகின்ற போதிலும், விரைவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் பலம்வாய்ந்த தேசிய அரசாங்கமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கீழ் அமையவிருப்பதாக நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், கண்டி மாவட்ட மக்கள் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நல்லாட்சிக்காக பெரிதும் ஒத்துழைத்து வருவதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.

முப்பத்து இரண்டாயிரம் மில்லியன் ரூபா பணச் செலவில் நடைமுறைப்படுத்தப்பவுள்ள கண்டி வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் 4,50,000 குடும்பங்கள் சுத்தமான குடிநீரை பெரும் வாய்ப்பு கிட்டுமென்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறினார்.

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வியாழக்கிழமை (04) கண்டி மாவட்டத்தில் கலகெதர தேர்தல் தொகுதியில் நீர் வழங்கல் திட்டங்கள் சிலவற்றிற்கான பூர்வாங்க வேலைகளை உத்தியோகபூர்வமாக தொடக்கி வைத்தார்.

நீர்  வடிங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மத்திய மாகாண பிரதி பொது முகாமையாளர் எல்.எல்.ஏ.பிரீஸ் மற்றும் அமைச்சரின் இணைப்பாளரும், முன்னாள் தும்பனை பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருமான அம்ஜாத் முத்தலிப் உட்பட பலர் இந்நிகழ்வுகளில் பங்குபற்றினர்.

தமது சொந்த ஊரான கலகெதர பிரதேசத்தில் பெத்திகேவல, பெபலாகம ஆகிய குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் குழுமியிருந்த கூட்டம் அங்குள்ள பௌத்த விஹாரையில் இடம்பெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் ஹக்கீம், கலகெதர தொகுதியில் உயரமான இடத்தில் அமைந்துள்ள சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும் பான்கங்க, 50 குடும்பங்கள் வசிக்கும் கல்லனவத்த ஆகிய இடங்களிலும், ஏறத்தாழ 150 குடும்பங்கள் வசிக்கும் பெத்திகேவல மற்றும் பெபலாகம கிராமங்களிலும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கீழ் சிறியளவிலான நீர் வழங்கல் திட்டங்களுக்கான முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

பின்தங்கிய எழில் மிகு கலபேவ கிராமத்தில் அமைச்சரின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வரும் சனசமூக நிலைய கட்டிடத்தின் முன்றத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றினார்.

ஹாரிஸ்பத்து தேர்தல் தொகுதியில் குருந்துகொல்ல கிராமத்தில் உகட தக்கியா பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் அமைச்சர் ஹக்கீம் கலந்து கொண்டு, அப் பிரதேச மக்களுக்கு குடிநீர் வசதி வழங்குவதற்கான செயல்திட்டம் பற்றி விளக்கிக் கூறினார். 

உகட பிரதேசத்தில் ஏறத்தாழ 50 குடும்பங்களுக்கு குடிநீர் வசதியுள்ள போதிலும் அங்கு அநேக குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதியால்லாமல் கஷ்டப்படுவதை தாம் அறிந்து வைத்திருப்பதாக தெரிவித்த அமைச்சர், புனித ரமழான் நோன்பு ஆரம்பிப்பதற்கு முன்பதாக பௌசர்களின் மூலம் நீர் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், இயன்ற வரை விரைவாக மட்டுப்படுத்தப்பட்ட நேரங்களை வரையறுத்து மக்களுக்கு அவசியமான நீர் தேவைகளை நிறைவு செய்யுமாறும் அங்கு வந்திருந்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிரேஷ்ட பொறியியலாளருக்கும் அதிகாரிக்கும் பணிப்புரை விடுத்தார். உத்தேச கண்டி வடக்கு நீர் விநியோகத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை காணக்கூடியதாக இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.

டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -