ஏனைய அரச நிறுவனங்களின் நட்டத்தை எரிபொருள் கூட்டுதாபனத்திற்கு ஏற்க நேரிட்டுள்ளதாக எரிபொருள் மற்றும் மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கூட்டுதாபனம் நிர்கதி நிலைக்குள்ளாகியுள்ளமைக்கான காரணம் கடந்த 10 வருட காலத்தில் நடைமுறையிலுள்ள வரி முறைமை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் மிகக் குறைந்த விலையை பதிவு செய்தது.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம், ஜனவரி மாதம் 21ஆம் திகதி உள்நாட்டு எரிபொருள் விலையை பாரியளவில் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
எனினும், எரிபொருள் விலை குறைப்பு முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 47 டொலராக காணப்பட்ட நிலையில், அந்த விலை தற்போது 63 டொலர் வரை அதிகரித்துள்ளது.
இதனால் எரிபொருள் கூட்டுதாபனம் மற்றும் இலங்கை இந்தியன் ஒயில் நிறுவனம் ஆகியன, எரிபொருள் விநியோகத்தில் நட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
இந்த நிலைமையை மாற்றுவதற்கான திட்டம் குறித்தும் அமைச்சர் தெளிவூட்டிய அதேவேளை கடந்த காலத்தில் வரி செலுத்தும் நடவடிக்கையினால் ஏற்பட்ட நட்டத்தை குறைத்துக் கொள்வதற்காக, முறிகளை விநியோகிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
