இக்பால் அலி-
அல்லாஹ் மனதிர்களுக்கென அருளிய பொதுவுடமைகளில் ஒன்று தண்ணீர் ஆகும். அது மிருகங்களுக்குக் கூட தடை செய்து விடக் கூடாது. அதனை அனைவரும் பகிர்ந்தளித்து வாழ்வதையே இஸ்லாம் அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தப் பரிசுத்தமான தண்ணீரை மனிதர்களின் தேவைக்காக தடுத்து வைத்திருப்பார்களாயின் அதே போல அல்லாஹ் அவர்களுடைய அருட்கொடைகளையும் தடுத்து விடுவான் என நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே அல்லாஹ்வின் அருட்கொடையாகிய தண்ணீரை அவனைரும் அனுபவிக்க வேண்டும் என்று தைபா கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எம். ஜே. ரிஸ்வான் மதனி தெரிவித்தார்.
மாவனல்லை ஹெம்மாதத்துகமை தெல்கஹாகொடை வீட்டுச் சேனைப் பகுதியிலுள்ள மக்களுக்காக குடி நீர் விநியாகத் திட்டத்தை திறந்து வைக்கும் வைபவம் 15-06-2015 நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குடிநீர் திட்டத்தை பொது மக்களிடம் உத்தியோகபூர்மாகக் கையளித்து விட்டு உரையாற்றும் போது தைபா கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ஜே. எம். ரிஸ்வான் மதனி இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
இந்தப் பகுதி பெரும் மலைப்பாங்கான பகுதியாகும். இந்தப் பகுதியில் வாழும் மக்கள் பரிசுத்தமான குடி தண்ணீரின்றி இவ்வளவு காலமும் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி வந்ததை நாம் அனைவரும் அறிவோம். எங்கு தண்ணீரின்றி எமது பொது மக்கள் கஷ்டத்தை எதிர் நோக்குகின்றார்களோ அங்கு நாங்கள் தேடிச் சென்று அவர்களுடைய தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். எங்களுடைய பணி இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட எல்லையை வரையறை செய்து கொண்டு பணிபுரிவது எங்களுடைய நோக்கமல்ல அல்லது எங்களுக்கு இலகுவானதாகவோ அல்லது எங்களுக்கு போக்குவரத்துக்கு வசதியானதாகவோ அல்லது தெரிந்த நபர்களுடைய இடத்தை மையப்படுத்தி செயற்படுவதோ எங்களுடைய பணியல்ல இந்த நாட்டில் கஷ்டப்படும். எல்லாயின மக்களும் பயன்பெறும் வகையில் நாங்கள் தண்ணீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றோம். கணிசமாளவு சிங்களப் பகுதிகளிலும் எங்களுடைய பணி முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது. அதே போல தமிழ் பகுதிகளிலும் எங்களால் இயன்வரை செய்து வருகின்றோம்..
குறிப்பாக இந்த இடத்தை நாங்கள் முக்கியமான தெரிவு செய்தமைக்கான காரணம். மலை உயரத்தில் இருந்து கொண்டு அன்றாடம் தண்ணீருக்காக படும் அவஸ்தையை இந்தப் பகுதி மக்கள் மிகவும் மனவருத்தத்துடன் எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். இந்த பகுதியில் நீர் விநியோகத்திற்கான நிர்மாணப் பணிகளை மேற்கொள்வது என்பது மிகவும் கடினமானதாகும்.
கல், மண் சீமெந்து ஆகிய கட்டிட மூலப் பொருட்களை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்துக் கொள்ளப்பட்டமை என்பது மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயேயாகும். இந்த நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டவர்கள் மிகுந்த சிரமத்தையுடன் செயற்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதில் இந்தப் பகுதியிலுள்ள முக்கிய பிரமுகர்களுடன் இந்தப் பகுதி மக்களும் கலந்து கொண்டனர்.