ஜனநாயகம் நிலவும் நாடுகளில் மோசமான முறையில் அரசியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க முடியாது- அமைச்சர் ஹக்கீம்

லகில் ஜனநாயகம் நிலவும் நாடுகளில் இவ்வாறு மோசமான முறையில் அரசியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க முடியாது. தாங்களாகத் தயாரித்து விட்டு, அதனை பலவந்தமாக திணிக்கின்றார்கள். 

பாராளுமன்றத்தில் 20ஆவது சட்டத்திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பிரகாரம் கொண்டு வரப்பட்டால் மூன்றில் இரண்டு ஆதரவைப் பெறவிடாமல் நாங்கள் தடுப்போம். இந்த நிலையில் பாராளுமன்றத்தில் அதற்கு மூன்றில் இரண்டு ஆதரவு கிடைக்க மாட்டாதென நாங்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றோம்.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஹக்கீம் கண்டியில் தெரிவித்தார்,கண்டி நகரை அபிவிருத்தி செய்யும் 2015 – 2030 வரையான செயல்திட்டத்தின் அங்குரார்ப்பணத்தையும், செயலமர்வையும் கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (19) முற்பகல் ஆரம்பித்த வைத்து உரையாற்றிய பின்னர் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும்ட, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், ஊடகவியலாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து அவர்களது கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இந்த நாட்களில் அரசியல் குழப்ப நிலை பற்றிதான் ஊடகங்களில் அதிகம் பேசப்படுகின்றது. மல்வத்தை, அஸ்கிரிய தேரர்கள் கூட அரசியல் நிலைமை காரணமாக நாட்டில் உருப்படியாக எதுவும் நடப்பதில்லை ஆளும் தரப்பும், எதிர்த் தரப்பும் மோதிக் கொள்வதுதான் மிச்சம் என்றவாறு கூறுமளவிற்கு நிலைமை மோசமாக இருக்கின்றது. 

மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் இன்றைய சிக்கலான அரசியல் சூழ்நிலையைப் பற்றித்தான் பேசுகின்றார்கள். ஆகையால் உங்களிடமிருந்து இது பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றோம் என்று ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வியொன்றை எழுப்பினார். 

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர முன்பு எங்களோடு மேற்கொண்ட சுமூகமான கருத்துப் பரிமாற்றங்களும், நல்லெண்ணத்துடனான அணுகுமுறையும் 20ஆவது திருத்தத்தைப் பொறுத்தவரை கடைப்பிடிக்கப்படவில்லை என்பது உண்மையிலேயே எங்களுக்கு கவலையளிக்கிறது.

இது தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 20திற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் கொழும்பில் கூடி மீண்டும் நீண்ட நேரமாக ஆராய்ந்தோம். அதில் எங்களது கட்சியுடன், மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்களை மையப்படுத்திய கட்சிகள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன உட்பட பல கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு காரசாரமாக கருத்துக்களைத் தெரிவித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிறுபான்மையின பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு, ஜனாதிபதிக்கும் மிக அழுத்தமாகத் தெரிவித்த பின்னர் 20ஆவது திருத்தம் வர்த்தமானியில் அவசர அவசரமாக பிரசுரிக்கப்பட்டிருப்பதை மீளப்பெற வேண்டுமென பெறுமாறு நாங்கள் வற்புறுத்த இருக்கிறோம். சிறிய கட்சிகளும், சிறுபான்மைக் கட்சிகளும் சேர்ந்து இந்த 20ஆவது திருத்தத்தை எதிர்க்கத் தீர்மானித்திருக்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்போடும் ஏனைய சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளோடும் நாங்கள் கருத்து ஒற்றுமைக்கு வந்திருக்கின்றோம்.

நாடு முழுவதிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கும் நாங்கள் தயாராகி வருகின்றோம். இது சம்பந்தமாக மக்களைத் தெளிவு படுத்தும் கூட்டங்களையும் நாங்கள் எல்லாக் கட்சிகளும் சேர்ந்து நடாத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.

எங்களது யோசனைகளையும் உள்வாங்கிய பின்னர் வர்த்தமானியில் பிரசுரித்திருக்கலாம். பின்னர் பார்க்கலாமென்பதில் எங்களுக்கு அறவே நம்பிக்கையில்லை. 19ஆவது திருத்தமும் அவ்வாறுதான். பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது எங்களுடன் கலந்தாலோசித்த 19ஆவது திருத்தமல்ல. முன்னர் தீர்மானிக்கப்பட்டவை பாராளுமன்றத்திற்கு வரும் பொழுது பெரிதும் மாறிவிடுகிறது. வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்பட்டு மீண்டும் திருத்தங்களுடன் பிரசுரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். எல்லாம் தலைகீழாக மாற்றப்பட்டிருக்கின்றது.

உலகில் ஜனநாயகம் நிலவும் நாடுகளில் இவ்வாறு மோசமான முறையில் அரசியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க முடியாது. தாங்களாகத் தயாரித்து விட்டு எங்கள் மீதும், மக்கள் மீதும் அதனை பலவந்தமாக திணிக்கின்றார்கள். பாராளுமன்றத்தில் இந்நச் சட்டத்திருத்தம் மூன்றில் இரண்டு ஆதரவைப் பெறவிடாமல் நாங்கள் தடுப்போம். இந்த நிலையில் பாராளுமன்றத்தில் அதற்கு மூன்றில் இரண்டு ஆதரவு கிடைக்க மாட்டாதென நாங்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றோம் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -